வியாழன், 7 மே, 2015

தேனீ வளர்ப்பு


 இங்க பாருங்க இத்தாலிய

அட, இங்க பாருங்க இத்தாலிய தேனீ!
தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம்... இத்தாலிய தேனீ வளர்ப்பு... ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை! அவர்களில் ஒருவராக சுறுசுறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்.
‘நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது... சாத்தியமும் இல்லை. இந்தியச் சூழல்ல வளரவே வளராது. அப்படியே வளர்ந்தாலும், சரிவர பராமரிக்க முடியாது. சீக்கிரத்துல வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிடும். தேனீக்களைப் பத்தி ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கற விஞ்ஞானிகள் நாங்க. ஆனா, எங்களாலேயே அதை வளர்க்க முடியல. சின்னப் பையனான உன்னால முடியாது' என்று பலரும் கழித்துக்கட்ட, அதை ஒரு சவாலாகவே ஏற்றுச் சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்தான் இந்த ஜெயக்குமார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், உடல் முழுவதும் 60 ஆயிரம் இத்தாலிய தேனீக்களை 24 மணி நேரம் படரவிட்டு ‘லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப் பவர். அடுத்தக் கட்டமாக 175 தேனீக்களை 3 நிமிடம் 7 வினாடிகள் வாய்க்குள் வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கவிருக்கிறார். இப்படி தேனீக்களை வைத்து வருமானத்தையும்... வெகுமானத்தையும் பார்த்துவரும் ஜெயக்குமார், தான் தேனீ வளர்க்க ஆரம்பித்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.
''அப்ப பதிமூணு வயசிருக்கும். எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். மேற்கு தொடர்ச்சி மலையில எங்க சித்தப்பா கண்ணனுக்கு எஸ்டேட் இருக்கு. அதுல தேன் எடுத்ததுதான் என்னோட முதல் அனுபவம். அங்க இருக்கற மலைச்சாதி மக்கள்கிட்ட பழகிப்பழகியே தேன் எடுக்கும் வித்தையை லாகவமா கத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு, இளம் வயசுக்கே உரிய கிரிக்கெட், சினிமா இதெல்லாம் அறவே இல்லாம போயிடுச்சி. பள்ளிக்கூடம், அதை விட்டா தேனீக்களைக் கவனிக்கறதுனு காலம் போச்சு. வீட்டுல தினசரி செலவுக்காக கொடுக்கற ரெண்டு ரூபாயைச் சேர்த்து வெச்சிக்கிட்டே வந்தேன். ஒரு கட்டத்துல அந்தக் காசை வெச்சி, தேனீ வளர்க்கறதுக்காக பழைய தேன் பெட்டி ஒண்ணை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். 'படிக்கற புள்ளைக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை'னு சத்தம் போட்டாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்திட்டு, தேனீ வளர்க்க ஆரம்பிச்சேன். அப்ப நான் பத்தாவது படிச்சிக்கிட்டிருந்தேன்.
ஒரு வாரம் கழிச்சிப் பார்த்தா பெட்டி முழுக்க தேன். அஞ்சரை கிலோ தேன் கிடைச்சுது. வீட்டுக்கு அரை கிலோ கொடுத்தது போக, மீதியை கிலோ 200 ரூபாய் வீதம் வித்தேன். ஆயிரம் ரூபாய் கையில வருமானம். இதைப் பார்த்து வீடே பெருமைப் பட்டுச்சி. அந்தக் காசைக் கையில வாங்கினதும் வானத்துல மிதக்கற மாதிரியான ஒரு பெருமிதம்'' என்று மகிழ்ச்சி பெருக்கெடுக்கச் சொன்னார் ஜெயக்குமார்.
அதன் பிறகு, சித்தப்பா கண்ணன் மூலமாக இத்தாலிய தேனீக்களைப் பற்றிய அறிமுகம் கிடைக் கவே, நறுமணப்பொருள் வாரியத்தின் (ஸ்பைஸ் போர்டு) மூலமாக கேரளா மாநிலம் கண்ணணூரி லிருந்து இத்தாலிய தேனீ பெட்டிகள் மூன்றை வாங்கிச் சேர்த்துள்ளார் ஜெயக்குமார். இந்தியத் தேனீ... இத்தாலிய தேனீ... இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன... குணநலன்கள் என்ன... என்பதை ஒரு பக்கம் கவனித்தவாறே, கலசலிங்கம் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்து முடித்திருக்கிறார்.



 ''என்னதான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்னாலும் என்னோட ஆர்வமெல்லாம் தேனீ மேலதான். அதனால தேனீ வளர்ப்பை தீவிரமா செய்ய ஆரம்பிச் சிட்டேன். இப்ப, இந்திய தேனீப் பெட்டி 800, இத்தாலி தேனீப் பெட்டி 55 வெச்சிருக்கேன். ஈரோடு, மேட்டுப்பாளையம் இங்கல்லாம் கிளை அலுவலகங் களைப் போட்டு, அந்தந்தப் பகுதியில தேன் பெட்டிகளை வெச்சி பராமரிக்கிறேன்.
ஆடு, மாடு, கோழியெல்லாம் வளர்த்தா அதுக்கு தீனி, தண்ணி, தங்குற இடம் எல்லாத்தையும் நாமதான் தேடிக் கொடுக் கணும். தேனீக்களுக்கு அப்படியில்லை. நமக்குச் சொந்தமா தோட்டம் இல்லைனா கூட, பிறரோட தோட்டத்துல, அவங்களோட அனுமதி வாங்கி தேனீப் பெட்டிகளை வெச்சி பராமரிக்கலாம். இதனால தோட்டக் காரருக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. சொல்லப்போனா லாபம்தான். அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்கும். சொந்தமா விவசாயம் இல்லாததால உறவுக் காரங்க தோட்டத்துலதான் தேன் பெட்டிகளை வெச்சி பராமரிக்கிறேன். அவங்களும் ஆர்வத்தோட இடம் கொடுக்கறாங்க. தேன் எடுக்கறதுக்குக் கருவி, புகை போடுறதுக்குக் கருவினு தொழில்ல ஏக முன்னேற்றம் வந்தாச்சு'' என்று சந்தோஷப்பட்டார்
தமிழகம் மற்றும் கேரளாவில் எங்கெங்கு... எந்தெந்த மாதங்களில் அதிகமாக பூக்கள் பூக்கின்றன. குறிப்பாக சூரியகாந்தி, காஃபி, ரப்பர் போன்றவற்றை அட்டவணைப் படுத்திக்கொண்டுதான், குறிப்பிட்ட தோட்டங் களில் தேன் பெட்டிகளை வைத்து பலரும் தொழில் செய்கின்றனர். தேனீப் பெட்டிகள் வைக்கப்படும் தோட்டங்களில் மகசூல் கூடுவதால், தேன் பெட்டிக்களின் வரவை தோட்டக்காரர்கள் ஆவலுடன் எதிர்நோக்கு கின்றனர். இந்த வகையில், தான் எடுத்துவரும் தேனை, அக்மார்க் முத்திரை பெற்று 2002-ம் ஆண்டிலிருந்து விற்பனை செய்துவருகிறார் ஜெயக்குமார். 25, 50, 100, 250, 500 மில்லி அளவுகளிலும் 1, 25 கிலோ அளவுகளிலும் தேனைப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்.
''தேனீ வளர்க்க உள்ளார்ந்த ஆர்வமிருக்கணும். தேனீக்கள் கிட்ட பயம் இருக்கக்கூடாது. தேனீ கொட்டினா தாங்கிக்கற தைரியம் வேணும். எல்லாத்துக்கும் மேல தேனீக்கள் மேல பிரியம் இருக்கணும். ஆனா, அரசாங்கத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு வேலை பார்க்குற அதிகாரிங்ககிட்ட இதை எதிர்ப்பார்க்க முடியுமா... அதனாலதான் இத்தாலி தேனீங்கறது இன்னமும் இந்தியாவுல பெரிய அளவுல வளர்க்கற விஷயமா மாறல. ஆனா, மனசு வெச்சா சாதிக்கமுடியும்னு நான் ஜெயிச்சிக் காட்டியிருக்கேன். ஆர்வம் உள்ளவங்க மனசு வெச்சா ஜெயிக்கலாம்'' என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னார்.
அதிக உடல் உழைப்பு தேவைப்படாத, சொந்த நிலம் தேவைப்படாத, வேலையாட்கள் தேவைப்படாத, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய, மிகமுக்கியமாக விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக உள்ள தொழில் தேனீ வளர்ப்பு. இது குறித்தான பயிற்சிகளையும் ஆலோசனை களையும் வழங்க ஜெயக்குமார் தயாராகவே உள்ளார். ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழு மற்றும் மலைவாழ் மக்களுக்கு இத்தகைய பயிற்சிகளைக் கொடுத்த அனுபவம் உள்ளவர். நீங்களும்தான் பேசிப்பாருங்களேன்... தொடர்புக்கு அலைபேசி: (அலைபேசி: 94433-02674).
இந்தியத் தேவைக்கு ஏற்ப இங்கே தேன் உற்பத்தி இல்லை. எனவே, அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இங்கேயே உற்பத்தி செய்தால் நிச்சயம் சந்தைக்குப் பஞ்சமில்லை!
ரகளையான ராயல் ஜெல்லி!
தேன் பெட்டிகளிலிருந்து ‘தேன்’ மட்டும் கிடைப்பதில்லை. ராயல் ஜெல்லி, மகரந்த தூள், புரோபலிஸ் எனும் ஒருவகை பிசின், தேனீ விஷம், தேன் மெழுகு போன்றவையும் கிடைக்கின்றன. ராயல் ஜெல்லி என்பது ராணித் தேனீக்களுக்கான சிறப்பு உணவு. இந்த உணவை வேலைக்காரத் தேனீக்கள் தயார் செய்யும். மற்ற தேனீக்கள் மூன்றி லிருந்து நான்கு மாதம் மட்டுமே உயிர் வாழும். ராயல் ஜெல்லியை உண்பதால் ராணித் தேனீ மூன்று முதல் நான்கு ஆண்டுகள் உயிர் வாழும். இது மனிதர்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் அரிய மருந்து என்பதால் உயரிய விலை கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு கிலோ ராயல் ஜெல்லியின் விலை ரூ.30,000.

தேனீ கொட்டினால் தேக ஆரோக்கியம்!
தேனீ நம்மை கொட்டினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகின்றது என்கிறார்கள். நரம்பு தளர்ச்சி குறையும், மூட்டு வலிகுறையும். வாத நோய் வராது என்றெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள் சொல் கின்றன. இப்படி தேனீக்களைக் கொட்டவிடுவதன் மூலம், அபூர்வமாக சிலருக்கு அலர்ஜி வருமாம். இத்தாலிய தேனீயை உடலில் கொட்டவிட்டு செய்யப் படும் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வீனோம் தெரபி (Venom Therapy) எனப்பெயர். சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது ஏகப் பிரபலம். ஒரு தேனீயை வைத்து கொட்ட விடுவதற்கு ரூ.200 வரை வாங்குகின்றனர். ஆனால், தேனீ தான் பாவம். ஒரு முறை கொட்டியதும் அது இறந்துவிடும்.
எதிரிகள் ஜாக்கிரதை!
தேனீ வளர்க்க நினைப்பவர் கள் எறும்புகள், பல்லி, கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்ற வற்றிடம் உஷாராக இருக்க வேண்டும். இவையெல்லாம் தேனீக்களின் எதிரிகள்.
தேனீக்களுக்கு கறுப்பு நிறம் பிடிக்காது. அதனால்தான் கண்ணில் அசைந்துகொண்டே இருக்கும் கருவிழியைப் பார்த்து கொட்ட வரும். அதற்கு பிடித்த நிறம் வெள்ளை. அதனால்தான் வெள்ளை நிறமான அடையில் தேனைச் சேகரிக்கின்றன.
நம்புங்கள்.. உண்மைதான்!
தேனீக்களால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரித்து பயிர்களில் கிடைக்கும் மகசூலின் உயர்வு அதிசயக்கத் தக்கதாக இருக்கிறது. கடுகு பயிரில் 43% அதிகரிக்கிறது. இதேபோல, எள் 32%, சூரியகாந்தி 38 முதல் 48%, பருத்தி 17 முதல் 19%, வெள்ளரி 66%, தர்பூசணி 52%, ஆப்பிள் 44%, திராட்சை 37%, ஏலக்காய் (கேரளா) 29-39%, என்று மகசூல் அதிகரிக்கும்!
சோம்பல் இல்லாத சுறுசுறுப் புமிக்க தேனீக்களிடமிருந்து நாம் தேனை மட்டும்தான் எடுக்கின்றோம். கடமை உணர்வு, பண்பு, ஒற்றுமை, ஒழுங்கு, கீழ்படிதல், கூட்டுறவு, தொலைநோக்கு பார்வை, பிறர் நலம் பேணுதல், சிக்கனம், சேமிப்பு ஆகிய நல்ல குணங்களையும் அவற் றிடமிருந்து எடுத்துக் கொண்டால்... உலகில் நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!