வியாழன், 28 மே, 2015

மியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன..

மியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன.. முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..
\\
எதற்காக இந்த படுகொலைகள்?
மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மிகத் தீவிரமான இன எதிர்ப்புப் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது.
முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டதால், அவர்களை வேட்டையாடிய பௌத்த ராகின்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று அவர்களைக் கொன்றனர்.
ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல்துறையும் ராணுவமும் இவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழியில்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ள படகுகளில் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால் வங்கதேசமோ ஏற்கனவே 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியது. நடுக்கடலில் போவதற்கு திக்கற்று அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்துபோயுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால் படகுகளில் தப்பித்துச் செல்லும் அகதிகளை குறிவைத்து ஹெலகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அகதிகளாகத் தப்பித்தவர்கள் கதி இதுவென்றால், உள்ளேயே இருந்தவர்கள் பேரினவாத குழுக்களிடம் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இறந்த முஸ்லிம்களின் தலைமுடியை அகற்றி மொட்டையடித்து, அவர்களுக்கு பௌத்த்த் துறவிகள் போன்று உடை அணிவிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட்து போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு கலவரங்கள் தூண்டப்படுவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை உண்மை என்று நம்பும் மியான்மர் நாட்டினர் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த தொண்டு நிறுவனமான கிலிஜிஷிணிகிழி ''இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது." என்கிறது.
சீனாவும் இந்தியாவும் இதுகுறித்து கனத்த மௌனம் சாதிக்கின்றன. நோபல் பரிசு வென்ற மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சாங்-சூ-கீயும் இது குறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இன்னொருவரான தலாய் லாமாவும் இது குறித்து மௌனம் சாதிக்கின்றார். ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசை, இதுபோன்ற சமயங்களில் அமைதியாய் இருப்பதற்காக வழங்கப்பட்டது என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ?
ரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். எல்லைக் காவல்படை உட்பட 4 இடங்களில் அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.. திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அங்கு குற்றம். அப்படி வாழ்ந்து கருவுற்ற ஓர் இளம்பெண்ணின் கால்நடைகளையும் உடைமைகளையும் ராணுவத்தினர் அபகரித்துச் சென்ற சம்பவமும் நடந்தது.
2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இட்த்திற்கு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர அரசின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவதில்லை. பாஸ்போர்ட் கிடையாது.
7 வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகளாக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளை சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர்களே குறைந்த கூலிகளில் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களின் வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை நுழைந்து சோதனை செய்கிறது. அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன.
ராணுவம் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிப் போனது. இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள் போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் அவர்களுக்கு இல்லை என்பதால் அது நடக்கவில்லை..
அண்டை நாடு என்கிற முறையில் இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போகிறதா இந்தியா? அல்லது ஒரு கண்டன அறிக்கையாவது இந்திய அரசு வெளியிடுமா என்கிற எதிர்ப்பார்ப்பு இந்திய முஸ்லிம்களிடையே உள்ளது. அதையாவது நிறைவேற்றுமா அரசு?
--நன்றி கவின்மலர்....\\
....