வியாழன், 9 அக்டோபர், 2025

புதுச்சேரியில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 pondi

உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசி தாக்க முயன்றார். மேலும்,  'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூறி கூச்சலிட்டார். அந்நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வழக்கறிஞர்  ராஜேஷ் கிஷோரை, சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்  "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி உட்பட பலர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது ‌ காலணி  வீசியதை கண்டித்து ‌ அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://tamil.indianexpress.com/india/pondicherry-advocate-protest-10542180