8 10 2025
/indian-express-tamil/media/media_files/2025/10/08/chennai-journalists-associations-protest-for-blocking-puthiya-thalaimurai-cable-tv-network-tamil-news-2025-10-08-19-05-54.jpg)
தமிழ்நாடு அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டதை கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்ற வளாகத்தில் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.
அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமுறை சேனல் நீக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பத்திரிக்கையாளர்களும், அவர்களின் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் அதன் எக்ஸ் தள பதிவில், "அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன.
தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.புதிய தலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்." என்று தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டதை கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்ற வளாகத்தில் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் புதிய தலைமுறை முடக்கம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-journalists-associations-protest-for-blocking-puthiya-thalaimurai-cable-tv-network-tamil-news-10542196