புதன், 8 அக்டோபர், 2025

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா? முக்கிய சந்தேகங்களும், அரசின் விளக்கங்களும்!

 

Kalaignar Magalir Urimai Thogai Scheme

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா? முக்கிய சந்தேகங்களும், அரசின் விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பித்துள்ள லட்சக்கணக்கான பெண்கள், தங்களின் விண்ணப்ப நிலை என்னவென்று தெரியாமல் காத்திருக்கின்றனர். விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பது 45 நாட்களுக்குள் தெரிந்துவிடும் எனக் கூறப்பட்ட நிலையில், கால தாமதம் காரணமாக குழப்பம் நீடிக்கிறது.

அரசு, தகுதியானவர்களுக்கு மட்டுமே பணம் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி விண்ணப்பங்கள் மீது முடிவுகளை எடுத்து வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான சில அடிப்படை சந்தேகங்களுக்கும், அதிகாரபூர்வமான விளக்கங்களையும் நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்:

1. விண்ணப்பம் செய்து ஒரு மாதம் ஆகியும் குறுஞ்செய்தி வரவில்லை; என்ன செய்வது?

முதலில், நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் பயன்பாட்டில் (Active) உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மொபைல் எண் செயல்பாட்டில் இருந்தும் இதுவரை அரசிடம் இருந்து எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை என்றால், உங்கள் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில்தான் இருக்கிறது என அர்த்தம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய முடியுமா?

ஆம், மேல்முறையீடு செய்யலாம். ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு, "மனு நிராகரிக்கப்பட்டது" என்ற குறுஞ்செய்தியுடன் அதற்கான காரணமும் அனுப்பப்படும். இந்தக் குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் மீண்டும் ஒருமுறை உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்குச் சென்று உரிய ஆவணங்களுடன் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.

3. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை எப்படி அறிவது?

பொதுவாக, ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், உங்களுக்கு வரும் குறுந்தகவலிலேயே அதற்கான காரணம் என்ன என்பதையும் சேர்த்து அனுப்பி வைப்பார்கள். அந்த காரணம் திருப்தி அளிக்கவில்லை எனில், நீங்கள் மேல்முறையீடு செய்ய தகுதி உண்டு.

4. வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்றால் பணம் கிடைக்காதா?

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்தவர்கள், தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இணைக்கப்படவில்லை என்றால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

5. ரேஷன் அட்டை இல்லை என்றால் விண்ணப்பிக்க முடியுமா?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகள் இருந்தாலும், ரேஷன் அட்டை (Ration Card) இல்லை என்றால் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. ரேஷன் கார்டை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திட்டப் பயனாளிகள் முடிவு செய்யப்படுவதால், முதலில் ரேஷன் கார்டு பெற்றுவிட்டுப் பின்னர் விண்ணப்பிக்கலாம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/magalir-urimai-thogai-scheme-how-to-check-application-status-and-appeal-after-rejection-10539841