/indian-express-tamil/media/media_files/2025/10/07/nethaji-tv-2025-10-07-22-41-08.jpg)
கரூர் த.வெ.க பிரச்சார கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய நீதிபதியின் கருத்து குறித்து அவதூறாக பேசியதாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பேசுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் மாரிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், இருவருமே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, நீதிபதி செந்தில்குமார் த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை'என கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதியின் இந்த கருத்து குறித்து பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்திருந்த நிலையில், நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சிலரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அந்த வகையில் தற்போது, நீதிபதி குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வரும் வரதராஜன் நேதாஜி டிவி என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இதில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் வரதராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
07 10 2025
source https://tamil.indianexpress.com/tamilnadu/karur-incident-judge-opinion-nadu-newsretired-police-officer-arrested-for-defaming-10539407