அமைதி ஒப்பந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ்; காசா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு
/indian-express-tamil/media/media_files/2025/10/04/hamas-aman-2025-10-04-11-18-34.jpg)
காசா பகுதியில் குண்டு வீசுவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (அக்டோபர் 3) உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கிய இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தனது காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின் சில அம்சங்களை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாகவும், இதன்படி பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் (Hamas) அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முற்றிலுமாக வெளியேறுவதற்கும் தயாராக இருப்பதாக கூறியுளள், ஹமாஸ் இஸ்ரேலியக் கைதிகள், உயிருடன் உள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் உட்பட அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி விவாதிக்க மத்தியஸ்தர்கள் (mediators) மூலம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கூறியது என்ன?
மேலும், பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீன அமைப்பிடம் காசாவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்கவும் ஒப்புக்கொண்ட ஹமாஸ் இது பாலஸ்தீன தேசிய ஒருமித்த கருத்து மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவின் அடிப்படையில்" இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், காசா பகுதியின் எதிர்காலம் மற்றும் பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் தொடர்பான அதிபர் டிரம்ப்பின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பிரச்சினைகள், ஒரு ஒருங்கிணைந்த தேசிய நிலைப்பாடு மற்றும் பொருத்தமான சர்வதேச சட்டங்கள் மற்றும் தீர்மானங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன" என்று ஹமாஸ் டெலிகிராமில் பதிவிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த மற்ற பிரச்சினைகள், "ஹமாஸ் பொறுப்புடன் பங்கேற்கும் மற்றும் பங்களிக்கும் ஒரு விரிவான பாலஸ்தீன தேசிய கட்டமைப்பு மூலம் கையாளப்படும். போரை முடிவுக்குக் கொண்டுவருதல், பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல், காசாவுக்கு உதவிகளை அதிகரித்தல், காசா பகுதியை ஆக்கிரமிப்பதை நிராகரித்தல் மற்றும் பாலஸ்தீன மக்களைப் இடம் பெயர்த்து அனுப்புவதை நிராகரித்தல் போன்ற டிரம்ப்பின் முன்மொழிவில் உள்ள விதிகளுக்கு ஹமாஸ் பாராட்டு தெரிவித்துள்ளது, ஆனாலும், டிரம்ப்பின் திட்டத்தில் இஸ்ரேல் வலியுறுத்திய முக்கிய கோரிக்கையான ஹமாஸின் ஆயுதங்களைக் பறிமுதல் செய்வது பற்றி இந்த அறிக்கை எதையும் குறிப்பிடவில்லை.
ஹமாஸ் சமாதானத் திட்டத்தை ஏற்க நாளை வரை (அக்டோபர் 5) வரை கால அவகாசம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஹமாஸின் அறிக்கை வெளியானது. இது குறித்து ஜனாதிபதி டிரம்ப், சமூக ஊடகப் பதிவில், ஹமாஸ் ஒப்புக்கொள்ளத் தவறினால் காசாவில் "பலருக்கும் தெரியாத அனைத்து நரகமும் வெடிக்கும்" என்று எச்சரித்திருந்தார். பெரும் அரபு மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவு காரணமாக இந்தத் திட்டத்தை ஏற்க ஹமாஸ் மீது கணிசமான அழுத்தம் இருந்தது.
டிரம்ப்பின் 20 அம்சத் திட்டம் ஒரு உடனடி போர்நிறுத்தத்தை குறிப்பிடுகிறது, ஹமாஸால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுவார்கள். மேலும், காசாவிலிருந்து இஸ்ரேல் படிப்படியாகப் படைகளைத் திரும்பப் பெறுதல், ஹமாஸின் ஆயுதக் களைவு மற்றும் ஒரு சர்வதேச அமைப்பின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த அறிக்கைகளில் உள்ளது.
கடந்த வாரம் தனது திட்டத்தை அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளுக்கு வழங்கிய பிறகு, டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அந்தக் கோரிக்கைகள் இஸ்ரேலின் போர்க் குறிக்கோள்களை பூர்த்தி செய்வதாகக் கூறி அதை ஆதரித்தார். இந்த முன்மொழிவுக்கான பேச்சுவார்த்தையில் ஹமாஸ் ஈடுபடுத்தப்படவில்லை. இந்தத் திட்டம் இஸ்லாமியப் போராளிக் குழுவான ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனாவ் இந்த கோரிக்கையை ஹமாஸ் இதுவரை நிராகரித்து வந்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியில் தனது பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து, காசாவில் 66,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அரபு நாடுகள் மத்தியஸ்தம் செய்தது உள்ளிட்ட முயற்சிகள் இதுவரை ஹமாஸையும் இஸ்ரேலையும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் தோல்வியை சந்தித்தன.