Union External Affairs Minister S Jaishankar and Afghani counterpart Amir Khan Muttaqi
திவ்யா ஏ
டெல்லி: ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல், இந்தியாவில் உள்ள பெண்களின் சம உரிமைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கடும் கண்டனக் கணைகளை வீசியுள்ளனர்.
மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி (Amir Khan Muttaqi) ஒரு வார காலப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அந்த நிகழ்வில் பெண் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே பிரஸ்மீட்டில் பங்கேற்றனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் எதிர்ப்பைக் கிளப்பவே, வெளியுறவு அமைச்சகம் (MEA) உடனடியாக விளக்கம் அளித்தது.
“நேற்று ஆப்கான் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. அந்த நிகழ்வு தூதரகத்தின் கட்டுப்பாட்டில் நடந்தது,” என்று மத்திய அரசு அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) திட்டவட்டமாகத் தெரிவித்தனர். எனினும், மத்திய அரசின் இந்த விளக்கம் சர்ச்சையைத் தணிக்கவில்லை.
ராகுல் காந்தி தாக்குதல்!
முத்தாக்கியின் இந்த பாகுபாடு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
"பெண் பத்திரிகையாளர்களை ஒரு பொது மேடையில் இருந்து விலக்கி வைக்க நீங்கள் அனுமதிக்கும் போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும், 'உங்களுக்காகக் குரல் கொடுக்க நான் பலவீனமானவன்' என்று கூறுகிறீர்கள். நம் நாட்டில், பெண்களுக்கு எல்லா இடங்களிலும் சமமான பங்கேற்பு உரிமை உண்டு. இத்தகைய பாகுபாட்டை எதிர்க்காமல் நீங்கள் காக்கும் மௌனம், உங்கள் 'நாரி சக்தி' (பெண் சக்தி) முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது," என்று ராகுல் காந்தி ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரியங்கா காந்தி கேள்வி!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடியின் நிலைப்பாட்டைக் தெளிவுபடுத்துமாறு கோரினார்.
"தேர்தலுக்காக மட்டும் பெண் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், நம் நாட்டில் உள்ள மிகவும் திறமையான பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது? பெண்கள் நாட்டின் முதுகெலும்பாகவும் பெருமையாகவும் இருக்கும் நாட்டில் இந்த இழிவு எப்படி நிகழ்ந்தது?" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
அறமற்ற கோழைத்தனமான செயல்:
திரிணமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா, "தாலிபான் அமைச்சரை பெண் பத்திரிகையாளர்களை விலக்கி வைக்க அனுமதித்ததன் மூலம், மத்திய அரசு ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவமதித்துள்ளது. வெட்கக்கேடான, முதுகெலும்பில்லாத கோழைகளின் செயல் இது," என்று விமர்சித்தார்.
வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தான் அமீர் கான் முத்தாக்கி உரையாற்றிய செய்தியாளர் சந்திப்பில் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. எனது தனிப்பட்ட கருத்துப்படி, தங்கள் பெண் சகாக்கள் விலக்கப்பட்டதை (அல்லது அழைக்கப்படாததை) அறிந்த போது, ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
முத்தாக்கியின் பயணம்: தூதரக உறவுகளை மேம்படுத்தும் முதல் படி
2021-ல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளைச் சீராக்குவதற்கான முதல் படியாக, காபூலில் உள்ள இந்தியாவின் 'தொழில்நுட்பப் பணியகம்' தூதரகமாகத் தரம் உயர்த்தப்படும் என்று இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதற்குப் பதிலாக, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கு தூதர்களை அனுப்புவதாக முத்தாக்கி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த இராஜதந்திர நகர்வுகள், பெண் பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தால் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/india-afghanistan-ties-amir-khan-muttaqi-women-journalists-ban-taliban-minister-delhi-10551523