Ns7tv
மாயாவதியின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் அவரது தந்தை முலாயம் சிங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டுகள் என பீம் ஆர்மி அமைப்பின் நிறுவனம் சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார்.
நாட்டில் அதிக மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேசத்தில்(80) அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில் பட்டியலின மக்களிடையே பிரபலமாக விளங்கும் பீம் ஆர்மி அமைப்பின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத் குறித்து மற்றொரு பட்டியலின தலைவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாயாவதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில் வாரணாசி தொகுதியில் பட்டியலின வாக்குகளை பிரிக்கும் வகையில் சந்திரசேகர் ஆசாத்தை போட்டியிடச் செய்வது பாஜகவின் சதி என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள சந்திரசேகர் ஆசாத், பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்துவிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்தவர் அகிலேஷ் யாதவ், மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஆசைப்படுவதாக பாராளுமன்றத்தில் விருப்பம் தெரிவித்தவர் அவரது தந்தை முலாயம் சிங், இவர்கள் தான் பாஜகவின் ஏஜெண்டுகள், நான் அல்ல என கூறினார்.
அவர்களை கேள்வி கேட்டதற்காக என்னை பாஜகவின் ஏஜெண்ட் என குற்றம்சாட்டுகின்றனர். நான் அம்பேத்கரின் ஏஜெண்ட். எங்களால் உங்களை (அகிலேஷ் யாதவ்) பதவியில் அமர்த்த முடியும் என்றால், உங்களை பதவியில் இருந்து இறக்கவும் முடியும் என்றார்.
மாயாவதி அவரது கட்சியின் பிராமண முகமான பொது செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ராவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.
வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவது பிரதமர் மோடிக்கு சாதகாக இருக்கும் என்றால் நான் அங்கு போட்டியிடப்போவதில்லை என்றார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை SP- BSP கூட்டணி இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv