/indian-express-tamil/media/media_files/2025/12/11/thirumavalavan-gr-swaminathan-2-2025-12-11-06-50-08.jpg)
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய உள்துறை செயலாளரை சேர்த்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யவேண்டுமென (இம்பீச்மெண்ட்) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம். இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர், ஒரு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, ஒரு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 'இம்பீச்மெண்ட் நோட்டீஸில்', அவர் ஒருதலைச் சார்போடும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார்; ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ; ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்டக் குற்றச் சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
இந்நிலையில், அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது. 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார். இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-மத்திய அரசுகளை அவமதிப்பதுமாகும்.
குறிப்பாக, இந்திய அரசின் உள்துறை செயலாளரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது. இந்திய மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? அவரிடம் இவர் என்ன எதிர்பார்க்கிறார்? கோர்ட்டு அவமதிப்புக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறார்? அதிகார வரம்பை மீறி இந்த மூவருக்கும் அழைப்பு அனுப்பியிருப்பது இவரே எடுத்த முடிவாகத் தெரியவில்லை. இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது.
திருப்பரங்குன்றம் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது.
எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.
அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-statement-justice-gr-swaminathan-central-home-secretary-thiruparankundram-case-10899967





