source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnady-tvk-alliance-meeting-name-and-head-announcement-update-12511660
09 09 2026
/indian-express-tamil/media/media_files/2026/09/09/vijay-tvk-2026-09-09-19-26-40.jpg)
தமிழகத்தில் த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தனது ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகளை இணைத்து த.வெ.க தலைவர் விஜய் தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். இந்த கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லாமல், தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க 119 இடங்கள் தேவை என்பதால், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், முஸ்லீம் லீக், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது, இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், மற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது தலையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ந் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கூட்டணி அமைப்பதற்கான 2-ம் கட்ட ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காத நிலையில், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யு.எம்.எல், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்தும் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றவில்லை என்று உறுதியாக அறிவித்திருந்தனர், இதனிடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், தலைவர் மாணிக்கம் தாகூர், மாநிலங்களவை எம்.பி பிரவீன் சங்கரவர்த்தி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல் ம.தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி துரை வைகோ ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் த.வெ.க தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்றும் கூட்டணி தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.





