source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-complaint-against-cm-vijay-to-assembly-speaker-12508051
/indian-express-tamil/media/media_files/2026/09/08/vijay-govic-2026-09-08-20-35-06.jpg)
தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் விஜய், காட்டிய சைகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சு குறித்து சபாநாயகரிடம் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. முதல்நாளில் பொது பட்ஜெட், 2-வது நாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. முன்னதாக காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு, பதில் அளித்து பேசிய முதல்வர் விஜய், தி.மு.க. குறித்து அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், பார்ட்டி பண்ட், உள்ளிட்ட பல ஊழல் புகார்களையும் சுமத்திய நிலையில், இது குறித்து பதில் அளிக்க வாய்ப்பு தராததால் தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
இதனிடையே மானியக் கோரிக்கை தொடர்பான எதிர்க்கட்களின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்து பேசிய முதல்வர் விஜய், ஒரு கட்டத்தில் சைகை ஒன்றை காட்டினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். மேலும் நாளை (செப்டம்பர் 9) நடைபெறும் த.வெ.க கூட்டத்திலும் தங்கள் பங்கேற்கப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே முதல்வரின் சைகை அவை உரிமை மீறல் என்று தி.மு.க. துணை கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அவைத்தலைவரை அவரது அறையில் சந்தித்து புகார் அளித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான பதில் உரையில் முதல்வர் விஜய், பேரவையில் இல்லாத கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோரை பற்றி பேசியது, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது அவை விதிகளுக்கு முரணானது. மேலும் சர்க்காரிய கமிஷன் பற்றி பேசியது பேரவை விதிக்கு எதிரானது என்று கூறியுள்ள தி.மு.க. எம்.எல்.ஏக்கள், முதல்வர் விஜய் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.





