புதன், 4 நவம்பர், 2026

அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.44 கொள்முதல் விலை கிடைக்கவில்லை ஏன்? நிலவரம் என்ன?

 


source https://tamil.indianexpress.com/tamilnadu/aavin-milk-procurement-price-hike-cm-vijay-110-statement-reality-check-12779309

society milk producers and vendors

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தி அறிவித்தார். இருப்பினும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ரூ.44 முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற வேதனைக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைப் பராமரித்து, மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பால் உற்பத்தி செய்து வழங்கும் பால்காரர்களின் வாழ்வாதாரம் இன்றைக்குப் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு மற்றும் புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை மளமளவென உயர்ந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தி அறிவித்தார். இருப்பினும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ரூ.44 முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற வேதனைக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியின் கள நிலவரம், பால்காரர்களின் குற்றச்சாட்டுகள், துறை சார்ந்த அதிகாரிகளின் விளக்கம் மற்றும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரின் கருத்துக்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 19-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 4.3% கொழுப்புச் சத்து மற்றும் 8.2% இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத்தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5-11-2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து, பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலை ஆட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை.

உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000-த்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும்.” என்று அறிவித்தார்.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் இந்த அறிவிப்புக்கு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அரசுக்கு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிருப்தியும் எதிர்ப்பும் தான் வந்தது. ஏனென்றால், புண்ணாக்கு, பொட்டு, தவிடு, தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதால், பால் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரு லிட்டருக்கு வெறும் 3 ரூபாய் மட்டும் கொள்முதல் விலை உயர்த்துவதா என்று கேள்வி எழுப்பி, பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

vijay assembly 2x

.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 31-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,  “19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தோம். இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள், நலச் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலனை செய்து நமது அரசு, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் 3 ரூபாய் உயர்த்தி 44 ரூபாயாக வழங்கவும் தற்போது அரசு முடிவு செய்துள்ளது. நமது அரசு பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், பால் கொள்முதல் விலை உயர்வினால் ஏற்படும் செலவினத்தை, ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடுசெய்து வழங்கும். இந்தக் கொள்முதல் விலை உயர்வால், கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூபாய் 60 கோடியும், ஒரு ஆண்டிற்கு 720 கோடியும் செலவாகும்.” என்று அறிவித்தார். 

முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் இந்த அறிவிப்பு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தாலும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 என்பதும் போதுமானது இல்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு உழைப்பு, தவிடு, பொட்டு, புண்ணாக்கு, தீவனம் ஆகிய இடுபொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்பதே பால் உற்பத்தியாளர்களின் கவலையாக உள்ளது. ஆனாலும், இந்த அறிவிப்பு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஆறுதல் அளித்தது.

இருப்பினும், தமிழ்நாட்டில் பல ஊர்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பலரும் முதலமைச்சர் விஜய் அறிவித்தபடி பால் கொள்முதல் விலை ரூ.44 விலை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். 

Minister Vijayalakshmi 3
பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி

கடந்த அக்டோபர் 15-ம் தேதி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமியிடம், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 44 ரூபாய் கொள்முதல் விலை முழுவதுமாக வழங்கப்பட்டு வருகிறது. 1 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அது வழங்கப்பட உள்ளது, இந்தத் தொகை இன்சூரன்ஸுக்காக மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது” என்று பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி பதில் அளித்தார்.

ஆனாலும், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்த பால் கொள்முதல் விலை ரூ.44 தங்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்ற புகார் குரல்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்துகொண்டுதான் உள்ளது. 

milk producer

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட தண்டரை கிராமத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத பால் உற்பத்தியாளர் ஒருவரிடம் பேசினோம். 

அவர் நம்மிடம் கூறுகையில், “நான் 5 ஆண்டுகளாக சொசைட்டியில்தான் பால் ஊற்றுகிறேன். லிட்டருக்கு 39 ரூபாய் தருகிறார்கள். 1 ரூபாய் ஊக்கத்தொகையை அடுத்த மாதம் தருகிறார்கள். மொத்தம் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய்தான் தருகிறார்கள். முதலமைச்சர் விஜய் அறிவித்தபடி 44 ரூபாய் தரவில்லை” என்று கூறினார்.

இந்த விலை கட்டுப்படியாகிறதா என்று கேட்டடதற்கு அந்த பெண் கூறுகையில், “முன்பெல்லாம் பால் கறவை மாடு வைத்திருந்தால் குடும்ப செலவுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் நஷ்டம் தான். லோட்டரி புண்ணாக்கு 70 ரூபாய்க்கும் மரச்செக்கு புண்ணாக்கு 80 ரூபாய்க்கும் விற்கிறார்கள். பெரும்பாலும் மரச்செக்கு புண்ணாக்குதான் மாடுகளுக்கு தருவோம். ஒரு நாளைக்கு 300 கிராம் 400 கிராம் போடுகிறோம். இதிலேயே எங்களுக்கு 30 ரூபாய் செலவாகி விடுகிறது. இது மட்டுமில்லாமல், 4 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு லிட்டருக்கு 400 கிராம் தீவனம் என்ற அளவில் ஒரு வேளைக்கு 1 கிலோ 600 கிராம் தீவனம் போடுகிறோம். அப்படியென்றால், ஒரு நாளைக்கு 3 கிலோ 200 கிராம் தீவனம் போடுகிறோம்.

ஆவினில் தருகிற 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை தீவனம் விலை 1,250 ரூபாய். ஆவினில் 3 மாதங்களாக தீவனமே கொடுக்கவில்லை. அதனால், தனியார் கடைகளில் 45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை தீவனம் 1,500 ரூபாய் கொடுத்து வாங்கி போடுகிறோம். இதன்படி ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு போடப்படும் தீவனம் செலவு மட்டும் தோராயமாக 100 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது இல்லாமல், புல், வைக்கோல் போட வேண்டும், மேய்த்து குளிப்பாட்டி உழைப்பெடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 லிட்டர் பால் கறக்கும் மாடு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 320 ரூபாய் வருமானம் என்றால் அதில் 130 ரூபாய் மாட்டுக்கே செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 200 ரூபாய்தான் கையில் தங்கும், அப்படி இருக்கும்போது எப்படி கட்டுப்படியாகும். இதனால்தான், நிறையபேர் மாடுகளை வைத்து பால் கறக்கும் தொழிலை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

milk producer

இது ஒரு பக்கம் என்றால், பால்காரர்கள் வைத்திருக்கும் லிட்டர் படி அளவு ரொம்ப அதிகம். அந்த லிட்டர் படி ஒரு லிட்டரை விட 200 மில்லி 250 மில்லி அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வழிந்து ஊற்றும் அளவுக்கு பால் ஊற்ற வேண்டும் என்கிறார்கள். இதிலும் ஒரு பக்கம் இழப்புதான்” என்று அந்த பெண் தனது வேதனையைக் கூறினார். 

அதே போல, செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட செய்யாறு ஏனாதவாடி கிராமத்தில் பால் உற்பத்தியாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில்,  “5 வடத்திற்கு முன்னாடி ஒரு கிலோ புண்ணாக்கு 45 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 80 ரூபாய்க்கு விற்கிறது. ஆவின் தீவனம் வந்து 3 மாதத்துக்கு மேல ஆகிறது. அதனால், தனியார் தீவனம் மூட்டை 1500 ரூபாய்க்கு வாங்கி போடுகிறோம். 

இப்போதுதான் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் போடுகிறார்கள். இதற்கு முன்னாடி, ஒரு லிட்டருக்கு 35 ரூபாய் போட்டார்கள். அப்போது, 10 நாட்களுக்கு ஒருமுறை 32 ரூபாயை பட்டுவாடாவில் போட்டு விடுவார்கள். மீதி 3 ரூபாயை அடுத்த மாதம் வரவு வைப்பார்கள். அப்போதும் 38 ரூபாயை முழுசா தரவில்லை. இப்போது ஒரு லிட்டர் பாலுக்கு 39 ரூபாய் தருகிறார்கள். மீதி 1 ரூபாயை அடுத்த மாதம் வரவு வைக்கிறார்கள். லிட்டருக்கு 44 ரூபாய் யாருக்குமே தருவதில்லை. 

போதாதற்கு பால்காரர்கள் பால் வாங்கும் லிட்டர் படி அதிகமாக இருக்கிறது. இதனால்தான், பால் கறப்பவர்கள் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். ஆனால், பால்காரர்கள் டிகிரி போட்டு வாங்குகிறார்கள். அப்போது, பாலில் தண்ணீர் வைப்பவர்கள் சிலர் டிகிரி வர வேண்டும் என்று பாலில் சர்க்கரை போடுகிறார்கள். இதனால் தண்ணீர் கலந்ததை டிகிரி போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. இதையும் பால்காரர்கள்தான் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், தண்ணீர், சர்க்கரை கலந்த பாலை, உடைந்து இருப்பதைப் பார்த்து பால்காரர்கள் கண்டுபிடிக்கிறார்கள். பால்காரர்கள் சரியான லிட்டர் அளவில் வாங்கினால் இப்படி தண்ணீர் கலப்பது, சர்க்கரை கலப்பதற்கெல்லாம் அவசியம் இருக்காது.

பாலின் தரம் குறித்து பால்காரர்கள் டிகிரி போட்டு பார்க்கும்போது சொசைட்டியில் இருந்து உயர் அதிகாரிகள் எப்போதாவது வந்து பாலின் தரத்தை சோதனை செய்கிறார்கள். ஆனால், லிட்டர் அளவை சரிபார்ப்பதே இல்லை. இதைப் பற்றியெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறி சண்டையிட தயாராக இல்லை. அதனால், இந்த விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறது.

எப்படி பார்த்தாலும், இந்த பால் தொழிலில் லாபம் இல்லை. ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுப்படி ஆகும். பால் கறக்கும் தொழிலை மட்டுமே நம்பி வாழ முடியாது. விவசாயத்தோடு 2 மாடுகளை வைத்திருந்தால், இரண்டையும் சேர்த்து பார்த்துக்கொள்ளலாம்.” என்று கூறினார். 

milk producer

முதலமைசர் ச.ஜோசப் விஜய் அறிவித்தபடி பால் கொள்முதல் விலை ரூ.44 அளிக்கப்படவில்லை என்று செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட தண்டரை, சுண்டிவாக்கம், ஏனாதவாடி, செங்கட்டான்குண்டில் ஆகிய ஊர்களைச் சேர்ந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறுகிறார்கள். 

இது தொடர்பாக செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அதிகாரியிடம் பேசினோம். அந்த அதிகாரி நம்மிடம் கூறியதாவது:

பொதுவாக பாலின் தரம் அதனுடைய ஃபேட் மற்றும் எஸ்.என்.எஃப் அளவை அடிப்படையாக வைத்து அளவிடப்படுகிறது. ஃபேட் (Fat) என்றால் கொழுப்பு எஸ்.என்.எஃப் (SNF) என்றால் கொழுப்பில்லாச் சத்துக்கள் / கொழுப்பற்ற திடப்பொருட்கள் (பாலில் நீர் மற்றும் கொழுப்பு தவிர்ந்த பிற சத்துக்களான புரதம், லேக்டோஸ் மற்றும் தாது உப்புகள்) ஆகும். 

பொதுவாக பசுமாட்டுப் பாலில் ஃபேட் 5.0 மற்றும் எஸ்.என்.எஃப் - 8.5 என்ற அளவு வரை இருக்கும். இதுவே எருமை பாலில் ஃபேட் 6.0 மற்றும் எஸ்.என்.எஃப் - 9.5 இருக்கும். இதில் ஒரு மாடு கன்று போட்டபின் பால் கறக்கும்போது தொடக்க மாதங்களில் ஃபேட் அளவு குறைவாக இருக்கும், எஸ்.என்.எஃப் அளவு அதிகமாக இருக்கும். நாள் ஆக ஆக அதே பாலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். எஸ்.என்.எஃப் குறைவாக இருக்கும். இதனால், பாலில் ஒட்டுமொத்தமாக பாலில் ஃபேட் மற்றும் எஸ்.என்.எஃப் அளவு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும். 

செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், செய்யாறு மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்து அதாவது 70 யார்டுகளில் இருந்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வாங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் இந்த செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அதாவது இந்த சங்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 27 கி.மீ  தொலைவு சுற்றளவில் பால் வாங்கலாம். அதனால், சொசைட்டியின் பால்காரர்கள் 10-15 கி.மீ தொலைவு சென்று தினமும் பால் வாங்கி வருகிறார்கள். பால் வாங்கிய பிறகு, அதிலுள்ள பாக்டீரியாக்கள் வேகமாக பெருக்கம் அடைவதால், பாலின் சுவை, மற்றும் அதில் உள்ள சத்துக்கள் குறையத் தொடங்குகிறது. அந்த பாலை வாங்கியதும் உடனடியாக விரைவாக குளிர வைத்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படாது. ஆனால், பால் வாங்கிய பிறகு, செய்யாறு நகரத்தில் ஃபிரஷ் பால் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. செய்யாறு நகரத்தில் மட்டும் சுமார் 2,200 லிட்டர் பால் விற்பனையாகிறது. ஃபிரஷ் பால் லிட்டர் ரூ.50-க்கு தெருக்களில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி, விற்பனை செய்துவிட்டு, பால் செய்யாறு பால் குளிரூட்டும் நிலையத்திற்கு வரும்போது 2-3 மணி நேரம் ஆகிவிடுகிறது. இதனால், அதன் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. 

அரசு அறிவித்தபடி ஃபேட் 4.3 மற்றும் எஸ்.என்.எஃப் 8.2 அளவு இருப்பதில்லை. சில நாட்கள் அதிகம் இருக்கும் சில நாட்கள் தரம் குறைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், ஒரு லிட்டர் பாலுக்கு 1 ரூபாய் 70 பைசா நிர்வாகச் செலவாக சொசைட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பணத்தில்தான் பால் வாங்கி வரும் பால்காரர்களுக்கு ஊதியம், அலுவலக ஊழியர்கள் என சொசைட்டி ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் அளிக்கப்படுகிறது. 

இதனால், நாங்கள் சராசரியான ஒரு விலையை நிர்ணயம் செய்து தருகிறோம். அதன்படி, செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் லிட்டருக்கு 40 ரூபாய் பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதில் 1 ரூபாய் மட்டும் ஊக்கத்தொகையாக அடுத்த மாதம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த 1 ரூபாய் ஊக்கத்தொகையும் அடுத்த பட்டுவாடாவிலேயே அரசு நேரடியாக வரவு வைக்கிறது. இந்த விலை எல்லா சொசைட்டிகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது, இந்த காரணங்களால் விலை மாறுபடும். அதுமட்டுமில்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த முறை போனஸ் லிட்டருக்கு 60 பைசா வழங்கி இருக்கிறோம்.” என்று கூறினார்.

பால்காரர்கள் லிட்டர் அளவு அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்று பால் உற்பத்தியாளர்கள் கூறும் புகார் குறித்து கேட்டதற்கு அந்த அதிகாரி கூறுகையில், செய்யாறு சொசைட்டிக்கு மட்டும் ஒரு நாளைக்கு 12,000 லிட்டர் பால் வருகிறது. செய்யாறு நகரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 2,200 லிட்டர் பால் விற்பனையாகிறது.

பல சொசைட்டிகளுக்கு பால் எடை மெஷின் கொடுத்துவிட்டோம். சில யார்டுகள் தூரமாக இருப்பதால், ஒரு பால்காரர் 250 லிட்டர் பால் வரை வாங்க வேண்டிய சூழ்நிலையில், ஸ்கூட்டரில் மெஷினை எடுத்துக்கொண்டு போக முடியாத நிலை உள்ளது. அதனால், லிட்டரிலேயே வாங்கி வருகிறார்கள். 

பால்காரர்கள் லேக்டோ மீட்டர் போட்டு செக் பண்ணிதான் பால் வாங்கி வருகிறார்கள். ஒரு பசுமாட்டுப் பால் 28 டிகிரியில் இருந்து 30 டிகிரி வரை இருக்கும். தண்ணீர் கலந்து டிகிரி ரொம்ப குறைவாக இருந்தால் பால் வாங்கமாட்டார்கள்.  
நீங்கள் சொல்கிறபடி சர்க்கரை கலந்தால் அது தவறு. இந்த புகாருக்கு பிறகு, விரைவில் எல்லா யார்டுக்கும் பால் எடை மெஷின் வண்டியில் எடுத்துச் சென்று பால் வாங்குவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.” என்று கூறினார்.

செய்யாறு தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவினில் இருந்து தீவனம் கொடுத்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது என்று புகார் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த அதிகாரி, “ஆமாம், செய்யாறு சொசைட்டிக்கு ஈரோடு ஆவின் தீவனம் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்துதான் தீவனம் லோடு வருகிறது. 3 மாதங்களாக தீவனம் வரவில்லை. 

ஆவினில் ஒரு மூட்டை தீவனம் 1,250 ரூபாய்க்கு தருகிறோம். தீவனம் தயாரிப்பதற்கான பொருட்களின் விலை ஏறிவிட்டது. மழை பொழிவு குறைவால் தீவனம் தயாரிப்பதற்கான பொருட்கள் போதிய அளவு கிடைக்காததால் தீவனம் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்ததாக கூறுகிறார்கள். அதனால், 3 மாதங்களாக தீவனம் வரவில்லை. இன்றைக்கு தீவனம் வருகிறது.

வெளியில் தனியார் தீவனம் விலை 45 கிலோ மூட்டை 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஆவினில் இருந்து 1,250 ரூபாய்க்கு தருகிறோம்.

பொதுவாக பால் கொள்முதல் விலை ஏற்றினால், பால் விற்பனை விலையையும் ஏற்ற வேண்டும். அப்போதுதான் செலவை ஈடுகட்ட முடியும். ஆனால், ஆவினில் அரை லிட்டர் பால் விலை ரூ.22-ரூ.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவினில் பால் விற்பனையில் மட்டுமில்லாமல், வெண்ணெய், நெய், பால் பொருட்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பால் கொள்முதல் விலையை உயர்த்தும்போது விற்பனை விலையை உயர்த்தாமல், நுகர்வோராகிய பொதுமக்கள் மீது சுமை விழாமல் இருக்க இதில் ஏற்படும் செலவை ஆண்டுக்கு ரூ.720 கோடியை தமிழக அரசு ஈடு செய்கிறது. 

இதனால், இப்போது தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆவின் சரியான போட்டியை அளித்து வருகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் கூறுவது தீவனம் விலை உயர்வுதான். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5-6 ரூபாய் உயர்த்தினால் தவிடு, பொட்டு, புண்ணாக்கு, தீவனம் விலை 200 - 300 ரூபாய் ஏற்றி விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

செய்யாறில் உள்ள தீவனம் கடை வைத்துள்ள ரவிச்சந்திரனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “கடந்த 2 மாதங்களில் தீவனம் விலை 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை உயர்ந்து இருக்கிறது. ஆந்திராவில் இருந்து தீவனம் மூட்டை கோல்டு, மிக்ஸ், மாவா, பூஸ்டர் என பல வகைகளில் வருகிறது. அதன் விலை 200 - 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடலைப் பொட்டு 22 கிலோ மூட்டை 890 ரூபாய், உளுந்துபொட்டு 50 கிலோ மூட்டை 1,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லோட்டரி புண்ணாக்கு கிலோ 70 ரூபாய்க்கும் மரச்செக்கு புண்ணாக்கு 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இப்படி எல்லாமே விலை உயர்ந்து இருக்கிறது. இதை கடைக்காரர்கள் உயர்த்தவில்லை. உற்பத்தி நிறுவனங்களே உயர்த்தி உள்ளன” என்று கூறினார். 

milk

எப்படியானாலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.44 கொடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. ஏனென்றால், நிர்வாகச் செலவு 1 ரூபாய் 70 பைசா எடுக்கப்படுகிறது. இதெல்லாம் போகத்தான் சொசைட்டிகள் சராசரி விலை நிர்ணயம் செய்கின்றன என்பது தெரிகிறது.

Mano thangaraj 2
தி.மு.க முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் Photograph: (x/ @Manothangaraj)

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டபடி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 வழங்கப்படவில்லை என்பது குறித்து, தி.மு.க முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் தொடர்புகொண்டு பேசினோம். அவர் இந்த அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால், பால் கொள்முதல் விலை உயர்த்தும்போது, பால் விற்பனை விலையையும் ஏற்றினால்தான் சரி செய்ய முடியும். ஆனால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த செலவை ஏற்கிறது. 

பால் லிட்டருக்கு ரூ.44 என்பதை பால் உற்பத்தியாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பால் உற்பத்தி செய்யும் விவசாயி பாதிக்கப்படக் கூடாது. இந்த விலையும் கட்டுபடியாகாதுதான். ஏனென்றால், நானே மாடு வளர்க்கிறேன். அதனால், பால் உற்பத்தில் உள்ள கஷ்டம் தெரியும்.

நான் அமைச்சராக இருந்தபோது நிறைய ஆய்வு செய்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்த ஃபிளாட் ரேட் (சராசரி விலை நிர்ணயத்தை) ஒழித்தேன். ஆனால், நீங்கள் பிளாட் ரேட் இருக்கிறது என்கிறீர்கள். எல்லா சொசைட்டிக்கும் ‘ஸ்பாட் மில்க் அக்னாலெட்ஜ்மெண்ட் மெஷின்’ (உடனடி பால் ரசீது இயந்திரம் - பால் கொள்முதல் மையங்களில் பாலைக் ஊற்றியவுடன், அதன் அளவு மற்றும் தரத்தைச் சரிபார்த்து உடனடியாக ஒப்புதல் ரசீது வழங்கும் மெஷின்) வழங்கினோம். வசதி உள்ள சொசைட்டிகள் அவர்களே வாங்கிக்கொள்ள உத்தரவிட்டோம் இப்படி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பால்வளத்துறையில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை போனில் பேச முடியாது. நேரில் பேசலாம்” என்று கூறினார். 

முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தபடி பால் கூட்டுறவு சங்கங்கள் லிட்டருக்கு ரூ.44 வழங்கப்படுவதில்லை என்பது குறித்து கருத்து கேட்க, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியை போனில் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை ஏற்ககவில்லை. அவருக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டோம், பதில் இல்லை. அவர் பதில் அளித்தால் வெளியிட தயாராக இருக்கிறோம்.  

இந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் குழந்தைகளுக்கும் உழைத்து பால் உற்பத்தி செய்து கொடுக்கும் பால் உற்பத்தியாளர்கள் கட்டுப்படியான விலை கிடைக்காமல் வேதனையில் இருக்கிறார்கள். அதனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தபடி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 முழுவதுமாக கிடைக்கச் செய்ய வேண்டும். சொசைட்டியின் நிர்வாகச் செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைக்கின்றனர். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பால் விலையை 2 முறை உயர்த்தி அறிவித்த விஜய், பால் உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.