செவ்வாய், 3 நவம்பர், 2026

புதிய தலைமை செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் குடியிருப்பு அகற்றம்? தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்

 

பட்டினபாக்கத்தில் பழைய குடியிருப்புகளை அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகவா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. ஆனால், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் எதிர்ப்பை அடுத்து, பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் திட்டம் கைவிடப்படலாம் என்றும், மாற்று இடங்களை அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை இடிக்க தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து இது புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியா? என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.


இந்தநிலையில், பழைய குடியிருப்பு அகற்றம் குறித்த உண்மை நிலையை தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கியுள்ளது. இது அந்த அமைப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 

பட்டினப்பாக்கம் குடியிருப்பு அகற்றம்; உண்மை என்ன ?

1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 96 வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டன.

குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தலைமைப் பொறியாளர் (CE), கண்காணிப்புப் பொறியாளர் (SE), CUBE-IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு 08.01.2020 அன்று இடிக்கப் பரிந்துரைத்தது.

குடியிருப்புகளைக் காலி செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு 19.01.2022 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு (Allotment), 01.06.2022 அன்று ரத்து செய்யப்பட்டது.

குடியிருப்பாரர்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்க 25.04.2024 அன்று மாண்புமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் தாக்கல் செய்யப்பட்ட 7 ரிட் மனுக்களில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து 25 பேர் மேல்முறையீடு செய்த நிலையில், 45 நாட்களுக்குள் குடியிருப்புகளைக் காலி செய்ய 31.08.2026 அன்று மாண்புமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியிருப்பாரர்கள் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவை (SLP), 15.10.2026 அன்று மாண்புமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை மற்றும் மாண்புமை நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், பழுதடைந்த குடியிருப்புகளை இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இன்று (02.11.2026) கோரியுள்ளது. இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-factcheck-clarifies-foreshore-estate-building-removal-tender-amid-new-secretariat-plan-12777071