புதன், 4 நவம்பர், 2026

பின்வாங்கிய தேர்தல் ஆணையம்; படிவம் 6-ல் சட்டவிரேதம் என ஆணையர் குறிப்பிட்ட எஸ்.ஐ.ஆர் பகுதியை நீக்கி உத்தரவு

 source https://tamil.indianexpress.com/india/eci-form-6-sir-declaration-separate-form-ecinet-12781486


Lead-photo

எழுதியவர்:ரித்திகா சோப்ரா

எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்களில் புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம் 6-ஐ நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 குறிப்புகள் மூலம் அவரின் பல முடிவுகளை எதிர்த்தனர். இவர்கள் எதிர்த்த அனைத்து முடிவுகளையும் ரத்து செய்யும் தொடர் மாற்றங்களின் வரிசையில், இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எஸ்.ஐ.ஆர் தொடர்பான உறுதிமொழியை, எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்னும் நடைபெற்று வரும் மாநிலங்களில் தனது இ.சி.ஐநெட் (ECINet) இணையதளத்தில் உள்ள புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம் 6-ஐ ஆன்லைன் பதிப்பிலிருந்து நீக்கியுள்ளது.

இதன் மூலம் புதிய வாக்காளர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் ஜே (J) மற்றும் கே (K) பிரிவுகளுக்கு இடையே சேர்க்கப்பட்டிருந்த அந்த உறுதிமொழி இனி படிவம் 6-ன் ஒரு பகுதியாக இருக்காது. இந்த உறுதிமொழியில், 2000-களின் தொடக்கத்தில் நடைபெற்ற கடைசி எஸ்.ஐ.ஆரின் போது விண்ணப்பதாரரின்  பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததா?, அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் பெயர் அதில் இடம் பெற்றிருந்ததா,, அல்லது அவர்களின் பெயரோ பெற்றோர் பெயரோ அதில் இடம் பெறவில்லையா? என்பதை குறிப்பிட வேண்டும். இதற்குப் பதிலளிக்காமல் ஒரு விண்ணப்பதாரரால் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது.

படிவத்தில் சட்டப்பூர்வ திருத்தம் செய்யாமல் இத்தகைய மாற்றத்தை செய்ய முடியாது என்று மே 16 அன்று தேர்தல் ஆணையர் ஜோஷி எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 13 அன்று சந்து இந்த படிவம் "அதிகாரப்பூர்வமற்றது/சட்டவிரோதமானது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த உறுதிமொழி தற்போது இணையதளத்தில் தனிப் படிவமாகப் கிடைக்கிறது.

அக்டோபர் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எதிர்-உறுதிமொழிப் பத்திரத்தில் (counter-affidavit), எஸ்.ஐ.ஆர் உறுதிமொழி மற்றும் படிவம் 6 இவை இரண்டையும் பிரிக்க அக்டோபர் 21 அன்று தனது தேர்தல் பட்டியல் பிரிவு முடிவு செய்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் இரண்டு முறை இல்லாமல் ஒரே ஒரு ஓ.டி.பி (OTP) மற்றும் ஒரே மின்னணு கையொப்பத்தை (e-signature) உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்.ஐ.ஆர் தொடர்பான உறுதிமொழி படிவம் 6-க்குள் வைக்கப்பட்டதாகவும், இந்த "நல்லெண்ண நோக்கம் ஆலோசனைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் உட்பட்டது" என்றும் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Graphi-1

மேலும் அதில், "நேரடிப் படிவத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது போலவே, ஆன்லைன் விண்ணப்பமும் விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட படிவம் 6 மற்றும் எஸ்.ஐ.ஆர் உறுதிமொழி என இரண்டு பகுதிகளாக இருக்கும் என்று தேர்தல் பட்டியல் பிரிவு கடந்த அக்டோபர் 21-ந் தேதி வெளியிட்ட முடிவின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு வாரங்களில் படிவம் 6 (Form 6) தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த மூன்றாவது நிலைப்பாடு இதுவாகும், மேலும் இது ஆணையத்தின் முந்தைய முடிவை முழுமையாக மாற்றியமைத்து நிறைவு செய்கிறது.

1960 ஆம் ஆண்டைய வாக்காளர்கள் பதிவு விதிகளின் கீழ் படிவம் 6 பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசால் மட்டுமே அதில் திருத்தம் செய்ய முடியும் என்ற காரணத்தின் அடிப்படையில், இந்த மாற்றத்திற்கு சாந்து மற்றும் ஜோஷி ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கடந்த செப்டம்பர் 23 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) செய்தி வெளியிட்டது. ஜோஷி மே 16 அன்று அதை எழுத்துப்பூர்வமாகப் பதிவிட்டார். மே 19 அன்று சாந்துவும் அதற்கு உடன்பட்டார். இருப்பினும், ஜூலை மாதத்தில் ஆன்லைன் படிவத்தில் இந்த கேள்வி இடம்பெற்றது; இதனை ஜூலை 12 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் வெளியிட்டது. ஆகஸ்ட் 13 அன்று சாந்து, இது "அனுமதியற்றது/சட்டவிரோதமானது" என்று குறிப்பிட்டதுடன், உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆய்வு முடிவு வெளியானபோதும் அது படிவத்திலேயே இருந்தது. 

அதே நாளில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் அளித்த முதல் பதிலில், படிவம் 6 பற்றி எந்தக் குறிப்பீடும் இல்லை. "தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டங்கள் மற்றும் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அமைந்துள்ளன" என்றும், ஆணையர்களின் குறிப்புகளை "வரைவு நிலைகளின் போது ஆணைய உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட செயல்பாட்டு கேள்விகள் அல்லது பதிவுகள்" என்றும் விவரித்தது. மேலும், கடந்த ஆண்டின் ஒவ்வொரு முடிவும் "முழு ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் என்றும் கூறியது.

மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26 அன்று, முழு ஆணையமும் கூடி இரண்டாவது குறிப்பை வெளியிட்டது. படிவம் 6 குறித்து அதில் இரண்டு விஷயங்கள் கூறப்பட்டன. எஸ்.ஐ.ஆர் படிவம் 6-இல் இணைக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எஸ்.ஐ.ஆர் அல்லாத காலத்திற்கு, விதிகளின்படி (வாக்காளர்கள் பதிவு விதிகள் 1960) பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும். இதன் பொருள் என்னவென்றால், ஆன்லைன் படிவம் 6-இல் உள்ள உறுதிமொழி எஸ்.ஐ,ஆர் காலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்படும், அதாவது டெல்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற தீவிர திருத்தப் பணிகள் இன்னும் நடைபெற்று வரும் இடங்களில் அது அப்படியே இருக்கும்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டு, எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்த மாநிலங்களில் ஆன்லைன் படிவம் 6-லிருந்து அந்த உறுதிமொழி நீக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரிவுகள் ஜே. (J) & கே (K) இடையே தொடர்ந்து இருந்தது. அக்டோபர் 12 அன்று, உச்ச நீதிமன்றம் மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு ஒப்புதலோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை என்று கூறியது. அக்டோபர் 21 அன்று, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பதிவு பிரிவு, படிவம் 6- உறுதிமொழியை அனைத்து இடங்களிலிருந்தும் நீக்கி, அதைத் தனி ஆவணமாக மாற்ற முடிவு செய்தது. தற்பொழுது இ.சி.ஐ நெட் (ECINet) இணையதளத்தில் அந்தப் படிவம் அவ்வாறே காட்டப்படுகிறது.

படிவம் 6 ஒருபோதும் திருத்தப்படவில்லை என்றே அந்த வாக்குமூலம் இன்னமும் வாதிடுகிறது. "எஸ்.ஐ.ஆர் உத்தரவுகளின் மூலம் தேர்தல் ஆணையத்தால் படிவம் 6 திருத்தப்பட்டது என்ற வாதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், "ஐ.டி (IT) தளத்தில் படிவம் 6 மற்றும் உறுதிமொழி காட்டப்பட்ட விதம் மறுபரிசீலனை செய்யப்பட்டபோது சில கவலைகள் எழுந்தன. ஏனெனில், ஆன்லைன் அமைப்பில் உறுதிமொழி சமர்ப்பிக்கப்பட்ட விதம் படிவம் 6-ல் திருத்தம் செய்யப்பட்டது போலக் கருதப்படக்கூடிய வகையில் இருந்தது. முன்னரே குறிப்பிட்டபடி, படிவம் 6-ஐ மத்திய அரசால் மட்டுமே திருத்த முடியும்" என்பதை அது ஒப்புக்கொள்கிறது.

Graphic-2

படிவம் 6-க்குள் உறுதிமொழியைச் சேர்த்ததால் அது விண்ணப்பதாரருக்கு ஒரு ஓ.டி.பி. (OTP)-ஐ மிச்சப்படுத்தியது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது, அது. இரண்டு தனித்தனி ஆவணங்களுக்கு இரண்டு ஒருமுறை ஓ.டி.பி. (OTP) இரண்டு மின்னணு கையொப்பங்களும் (e-signatures) தேவைப்பட்டிருக்கும். ஆனால் இரண்டும் ஒரே பக்கம் இருப்பதால் இரண்டிலும் தலா ஒரு ஓ.டி.பி மட்டுமே உருவாக்கியது என்று கூறியுள்ளது.

விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள்

இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) செப்டம்பர் 23 அன்று வெளியிட்ட செய்தியில், தங்களுக்குத் தெரியாமல் ஆணையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு சாந்து மற்றும் ஜோஷி ஆகிய இரு ஆணையர்களும் 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்ததாகத் தெரிவித்தது. ஆணையத்தின் முதன்மைப் பணிகளோடு தொடர்புடைய விவகாரங்களிலேயே அவர்களின் குறிப்புகள் அமைந்திருந்தன: யார் வாக்காளராகப் பதிவு செய்யப்படுகிறார்கள், யார் நீக்கப்படுகிறார்கள் மற்றும் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள், அந்த மீண்டும் சேர்க்கைகளுக்கு எதிராக யார் மேல்முறையீடு செய்கிறார்கள், மற்றும் தற்போது வாக்காளர் பட்டியல் பராமரிக்கப்படும் மென்பொருளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற தகவல்களை அளித்தது.

மற்றொரு எதிர்ப்பு, ஆணையத்தின் செயல்பாட்டையேப் பற்றியது; அதாவது இரு ஆணையர்களுடனும் கலந்தாலோசிக்காமல், தகவல் தொழில்நுட்பம் (IT) தொடர்பான கோப்புகள் உட்பட மூத்த அதிகாரிகளிடையே பணி ஒதுக்கீட்டை மாற்றியமைத்து ஜூலை 28 அன்று பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவு. இது குறித்து இருவரும் அமைச்சரவைச் செயலாளருக்கு தனித்தனியாகக் கடிதம் எழுதினர். அடுத்த நாள், இருவருமாக இணைந்து அந்த உத்தரவை ரத்து செய்தனர்.

14 குறிப்புகளில் ஐந்து குறிப்புகளின் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வந்ததாகப் பதிவுகள் இல்லை. மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை முழு ஆணையத்தின் கூட்டமும் ஒருமுறை கூட நடைபெறவில்லை. செப்டம்பர் 23 அன்று ஆணையம் அளித்த பதிலில், அந்தக் குறிப்புகள் சாதாரண ஆலோசனைகளின் ஒரு பகுதியான "பரிந்துரைகள்" மற்றும் "கருத்துகள்" மட்டுமே என்றும், கடந்த ஆண்டின் முக்கியமான முடிவுகள் அனைத்தும் முழு ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியது.

அதன்பின் வந்த ஐந்து வாரங்களில், இரு ஆணையர்களும் சுட்டிக்காட்டிய கிட்டத்தட்ட ஒவ்வொரு விஷயத்தின் மீதும் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டங்கள் (Meetings): ஒவ்வொரு தேர்தல் ஆணையக் கூட்டத்திற்கு முன்பும் நிகழ்ச்சி நிரல் விநியோகிக்கப்படும், அதன் பிறகு கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் வெளியிடப்படும். ஆனால் இவை இரண்டும் செய்யப்படவில்லை என்று ஆணையர்கள் பதிவு செய்திருந்தனர்.

வெளிநாட்டுப் பயணம் (Foreign travel): அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் தேவைப்படும். இந்த ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் பயணம் மேற்கொள்வதை இரண்டு ஆணையர்களும் பதிவு செய்திருந்தனர்.

புதிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் (New IT systems): தகவல் தொழில்நுட்ப இயக்குநர் ஜெனரல் சீமா கன்னாவின் கீழ் உள்ள புதிய ஐடி தொகுதிகள் மற்றும் இணையதளங்கள், அதிகாரிகள் குழுவின் பார்வைக்குச் சென்று, பின்னர் ஆணையத்தின் ஒப்புதலுக்குச் செல்லும். ஆணையத்திற்குத் தெரியாமலேயே புதிய தொகுதிகள் உருவாக்கப்படுவதை ஆணையர்கள் பதிவு செய்திருந்தனர்.

இ.சி.ஐ நெட் ECINet அமைப்பின் தணிக்கை (An audit of ECINet): நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இ.சி.ஐ நெட் (ECINet) எந்த அளவிற்கு உடன்பட்டுள்ளது என்பதைப் பரிசோதிக்க, அக்டோபர் 14 அன்று சுற்றறிக்கை மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலைக்குழுவிற்கு ஒரு மூத்த துணைத் தேர்தல் ஆணையர் தலைமை தாங்குகிறார். இதில் இரண்டாவது மூத்த துணைத் தேர்தல் ஆணையர், ஒரு துணைத் தேர்தல் ஆணையர், ஒரு இயக்குநர், நான்கு முதன்மைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஐஐடி மும்பை மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவைச் சேர்ந்த இரு சுயாதீன நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். 

"வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தின் படிப்படியான மத்தியமயமாக்கல்" இங்கு நடப்பதாக விவரித்து, மே 29 அன்றே இது குறித்த தணிக்கைக்கு ஜோஷி கோரியிருந்தார். சந்து ஜூலை 13 அன்று இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், ஆகஸ்ட் 14 அன்று இந்தத் திட்டம் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என்று பதிவு செய்திருந்தார்.

இ.சி.ஐ நெட் (ECINet) இணையதளத்தால் கள அதிகாரிகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுதல் (Powers of field officers being curtailed by ECINet software): இணையதளத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம் களத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் இப்போது அதிக சுய விருப்ப அதிகாரங்களை வழங்கியுள்ளது. உதாரணமாக, செப்டம்பர் 24 தேதியிட்ட கடிதத்தில் மகாராஷ்டிர முதன்மைத் தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம் கோரிய இ.சி.ஐ நெட் (ECINet)-க்கான நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரைபட முரண்பாடுகள் (mapping failures) அல்லது தர்க்கரீதியான வேறுபாடுகள் (logical discrepancies) காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாக்காளர்களுக்கான நேரில் விசாரணை நடத்தும் முறை இப்போது விதிவிலக்கானதாக மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLOs) வீடுகளுக்கே சென்று ஆவணங்களைச் சேகரிக்கின்றனர். 

வாக்காளர்கள் பட்டியலிடப்பட்ட 13 வகைகளுக்கு வெளியேயும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். தர்க்கரீதியான வேறுபாடு தொடர்பான வழக்குகளை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுப்பாமல் வாக்காளர் பதிவு அதிகாரிகளே (EROs) நேரடியாகத் தீர்மானிக்கலாம். மேலும், முந்தைய எஸ்.ஐ.ஆர் பட்டியலின் சான்றளிக்கப்பட்ட நகலை கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டிய தேவையும் நீக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று சந்து எழுதிய கடிதத்தில், "வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளும் இ.ஆர்.ஓ (ERO)க்கள், டி.இ.ஓ (DEO)க்கள் மற்றும் சி.இ.ஓ (CEO)க்களையே சாரும்," இருப்பினும், "சட்டத்தால் வழக்கப்பட்ட முழுமையான அணுகல் மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத ஐ.டி (IT) இயக்குநர் ஜெனரல், இந்த அணுகல் கட்டுப்பாட்டைத் தம் வசம் மாற்றியமைத்துள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கோவாவின் 97 வாக்காளர்கள் (Goa’s 97 voters): முதன்மைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் பல கடிதங்களை எழுதியபோதிலும், இ.சி.ஐ நெட்  (ECINet) மென்பொருள் களத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகளை இறுதி வாக்காளர் பட்டியலில் 97 வாக்காளர்களை மீண்டும் சேர்க்க அனுமதிக்கவில்லை என்பதை விசாரணையில் வெளிப்படுத்தியது. இந்த 97 பேரின் பெயர்கள் வரைவுப் கட்டத்திலேயே நீக்கப்பட்டன; அவர்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்து, கோவாவின் சொந்த இ.ஆர்.ஓ (ERO)-க்களால் சரிபார்க்கப்பட்டனர். ஆனால், நீக்கப்பட்டதை மீண்டும் சேர்க்கப்படுவதற்கான (reverse) வசதி இ.சி.ஐ (ECINet)-இல் இல்லை என்பது தெரியவந்தது.

முதன்மைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் ஏழு நாட்களில் எட்டு முறை டெல்லிக்குக் கடிதம் எழுதியது; ஒவ்வொரு கடிதத்தின் நகலும் ஐ.டி (IT) இயக்குநர் ஜெனரல் சீமா கண்ணாவிற்கு அனுப்பப்பட்டது. இறுதியாக, அவர்கள் பெயர்கள் இல்லாமலேயே இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது அவர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதி செய்யுமாறு முதன்மைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த 97 பேரில் 88 பேர் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து அளித்து, அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும், 6 பேர் வெளிநாட்டில் உள்ளனர் என்றும், 3 பேர் போர்த்துகீசிய பாஸ்போர்ட் வைத்துள்ளனர் என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், தேர்தல் ஆணையம் இரண்டு புதிய வாக்காளர் சேர்க்கைப் பணிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 29 அன்று, எஸ்.ஐ.ஆர் நிறைவடைந்த மாநிலங்களில், பட்டியலில் "விடுபட்ட" வாக்காளர்களைச் சேர்க்க "சிறப்பு முகாம்" நடத்துமாறு உத்தரவிட்டது. இந்த மாதம், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்திற்கு (Special Summary Revision) உத்தரவிட்டுள்ளது, இது முக்கியமாக 2027-ல் 18 வயதை எட்டுபவர்களை இலக்காகக் கொண்டது. இந்தப் பயிற்சியின் போது படிவம் 6-ஐப் பூர்த்தி செய்யும் அனைவரும் எஸ்.ஐ.ஆர் தொடர்பான உறுதிமொழியைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

மேற்கு வங்கம் (West Bengal): நீதித்துறை அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்ட நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மேல்முறையீடுகள் குறித்து, ஆகஸ்ட் 12 தேதியிட்ட தனது குறிப்பில் சந்து ஐந்து கேள்விகளைத் தனது அதிகாரிகளிடம் எழுப்பினார்: மொத்த எண்ணிக்கை, பிரிவு வாரியான விவரங்கள், இ.சி.ஐ (ECI) அவற்றை தாக்கல் செய்ததா?, அவற்றை தாக்கல் செய்ய யாருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்?, உண்மையில் யார் தாக்கல் செய்தது? என்று கோரியிருந்தார். மாநிலத்தின் முதன்மைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, இவ்விவகாரம் தொடர்பான விவரங்கள் தன்னிடம் இல்லை என்று அவர் கூறியதாக சந்து பதிவு செய்துள்ளார்.

டிரைபியூனல்கள் (tribunals) முன் மேல்முறையீடு செய்ய இ.சி.ஐ (ECI) அதிகாரிகள் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதால், ஆணையத்திற்குள் இருக்கும் யாரும் இதற்கு அனுமதி அளிக்கத் தேவையில்லை என்பதே பிரமாணப் பத்திரத்தின் பதிலாக உள்ளது. எஸ்.ஐ.ஆரில் ஒரு நீதித்துறை அதிகாரியின் முடிவை எதிர்த்து யார் மேல்முறையீடு செய்யலாம் என்பதை நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளில் தெளிவுபடுத்தியுள்ளது: பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் ஒரு பெயரை மீண்டும் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகிய இருவரும் மேல்முறையீடு செய்யலாம். எனவே தேர்தல் ஆணையம் தன் மீது தவறைச் சுமத்தாமல், நீதிமன்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் 22 தேதியிட்ட வங்காள முதன்மைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் தகவல் தொடர்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RP Act) கீழ் தங்களுக்குள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு, மேற்முறையீடுகள் "மேற்கு வங்கத்தின் முதன்மைத் தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டன" என்றும், "இந்த விவகாரங்கள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்கல் செய்யப்பட்ட அத்தகைய மேல்முறையீடுகளின் மொத்த எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை.

சந்து கேள்விகளைக் கேட்டு பத்து வாரங்களுக்குப் பிறகும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பும், தன்னிடம் விவரங்கள் இல்லை என்று சந்துவிடம் கூறிய அதே முதன்மை அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் இந்தப் பதில் வந்துள்ளது. இந்த மேல்முறையீடுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்பதைப் பிரமாணப் பத்திரம் குறிப்பிடுகிறது.

இவை அனைத்திலும், நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்னவென்றால், எதுவுமே தவறாகத் தீர்மானிக்கப்படவில்லை என்பதாகும். இந்த பிரமாணப் பத்திரம் "மூன்று உறுப்பினர்களின் ஒருமனதான முடிவால்" தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், ஆணையர் ஒருவரின் குறிப்பு "பிரிவு 18-ன் கீழ் தேர்தல் ஆணையத்தின் முடிவாகாது" என்றும், "பொறுப்புகள் அளிக்கப்பட்ட அதிகாரிகள் எடுத்த சில நடவடிக்கைகள் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டியிருந்தது, அவை தற்போது திருத்தப்பட்டுவிட்டன" என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.