செவ்வாய், 26 நவம்பர், 2013

சத்திய மார்க்கத்தின்

சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும்
விட்டுகொடுக்காமல், மற்ற
கொள்கைகளோடு சமரசம்
செய்து கொள்ளாமல் உறுதியான முறையில்
பின்பற்ற வேண்டும். மார்க்கத்தின்
சட்டதிட்டங்களை எதற்காகவும் எவருக்காகவும்
வளைக்கக்கூடாது. ஆளுக்கும் இடத்திற்கும் ஏற்ப
மார்க்கத்தை மாற்றிக்
கொள்வது திரிப்பது நம்மை தடம் புரளச்
செய்துவிடும் மோசமான பண்பு என்பதை நாம் என்றும்
நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பண்பு இருந்தவர்கள் வழிகேடுகளில் வீழ்ந்து,
கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் விடுக்கும்
பின்வரும் எச்சரிக்கையை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.

"மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள்
என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது.
அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார்
துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?''
என்று சொன்னார்கள்.
அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின்
விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ
பரிந்துரைக்கிறாய்?'' என்று கேட்டுவிட்டுப்
பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த
(பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக்
காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார்
திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)
விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள்
திருடிவிட்டால் அவர்கள்
மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின்
மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள்
ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத்
துண்டித்தே இருப்பார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

ஆதாரம்: புகாரி (6788)

இதையறியாமல், ஏழைகளிடம் ஒருவிதமாகவும்
பணக்காரர்களிடம் ஒரு விதமாகவும் மார்க்க
செய்திகளைக் கையாள்பவர்களைப் பார்க்கிறோம். அதுபோல
தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்கள் தவறு செய்யும்
போது அலட்சியமாக விட்டுவிடுவது; அதேசமயம்
அறிமுகமற்றவர்கள், நெருக்கமற்றவர்கள்
தவறு இழைக்கும் போது கடுமையாக
நடந்து கொள்வது என்றும் சிலர்
செயல்படுகிறார்கள்.
சொந்த ஊரில் ஒருவிதமாகவும் வெளியூர்களில்
வேறு விதமாகவும் இடத்திற்கு, எதிர்ப்புகளுக்கு ஏற்ப
சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டு வேடம் போடும்
மக்கள் இருக்கிறார்கள். இந்தப்
பண்பு கொண்டவர்கள் இந்தச் செய்தியைத்
தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?