சனி, 9 நவம்பர், 2013

Q & A - PJ

கேள்வி :

குளிப்பது எப்போது கடமையாகும் விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டுமா? அல்லது இச்சை நீர் வெளிப்பட்டாலே குளிப்பது கடமையா ?

பதில் :

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ - இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர விந்து அல்ல. மதீ எனப்படும் இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது. மாறாக உளூ முறிந்துவிடும். இது வெளிப்பட்டால் உறுப்பை கழுவிவிட்டு உளூச் செய்து கொள்ள வேண்டும்.

அதிக அளவில் "மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். "அதற்காக உளூச் செய்ய வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: புகாரீ (132), முஸ்லிம் (458)

"ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 269 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே விந்து வெளிப்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமையாகும். இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது