செவ்வாய், 26 நவம்பர், 2013

பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?




பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது.


மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் அமைந்துள்ளது.

மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பது பற்றி மக்களிடம் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
இறந்தவர்களின் ஆவி, உயிருடன் இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது தான் பைத்தியம் என்று பாமர மக்கள் கருதுகின்றனர்.


இறந்தவர்களின் உயிர்கள் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக 39:42 வசனம் கூறுவதாலும், இறந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப முடியாதவாறு பர்ஸக் எனும் புலனுக்கு எட்டாத திரை உள்ளது என்று 23:100 வசனம் கூறுவதாலும் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகிற்குத் திரும்ப வரும் என்று நம்புவது குர்ஆனுக்கு மாற்றமானது.


மேலும் மண்ணறையில் விசாரணை முடிந்ததும் நல்லவர்கள் யுகமுடிவு நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் என்றும், தீயவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: திர்மிதீ 991) இந்த நபிமொழிக்கு எதிராகவும் மேற்கண்ட கருத்து அமைந்துள்ளது.


இறந்தவரிடம் குடிகொண்டிருந்த ஷைத்தான்கள், மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் தான் பைத்தியம் பிடிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.
ஏனெனில் மனிதர்களைத் தீய வழியில் செல்ல வைத்து, பாவிகளாக்கி நரகில் தள்ளுவது தான் ஷைத்தானின் வேலை. (திருக்குர்ஆன் 4:119,120, 7:16,17)
ஒருவன் பைத்தியமாகி விட்டால் அதன் பின்னர் அவன் செய்யும் எந்தத் தீமைக்காகவும் அவன் பாவியாக மாட்டான். அதற்காக அவனுக்குத் தண்டனையும் கிடையாது. நரகவாசிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதை முழு நேரப் பணியாகக் கொண்ட ஷைத்தான், நரகவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் பைத்தியம் பிடிக்கச் செய்ய மாட்டான்.


எனவே இவ்வசனத்தில், "ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போல்'' என்று கூறப்பட்டதை மேற்கண்ட சான்றுகளுக்கு முரணில்லாத வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.


தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது "ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்'' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது.
அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது "ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே'' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41).

நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.


கெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அது போல் பைத்தியத்தை அல்லாஹ் தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

www.onlinepj.com

தொழத

தொழத் தொடங்கியவர் #விடலாகாது

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல் : புகாரி 1152

நற்கூல

"ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!"

-இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 2066

ஜோதிடனிடம்

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்
கொள்ளப்படாது.

-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் .

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி),

நூல்: முஸ்லிம் 4137

சத்திய மார்க்கத்தின்

சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும்
விட்டுகொடுக்காமல், மற்ற
கொள்கைகளோடு சமரசம்
செய்து கொள்ளாமல் உறுதியான முறையில்
பின்பற்ற வேண்டும். மார்க்கத்தின்
சட்டதிட்டங்களை எதற்காகவும் எவருக்காகவும்
வளைக்கக்கூடாது. ஆளுக்கும் இடத்திற்கும் ஏற்ப
மார்க்கத்தை மாற்றிக்
கொள்வது திரிப்பது நம்மை தடம் புரளச்
செய்துவிடும் மோசமான பண்பு என்பதை நாம் என்றும்
நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பண்பு இருந்தவர்கள் வழிகேடுகளில் வீழ்ந்து,
கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் விடுக்கும்
பின்வரும் எச்சரிக்கையை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.

"மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள்
என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது.
அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார்
துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?''
என்று சொன்னார்கள்.
அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின்
விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ
பரிந்துரைக்கிறாய்?'' என்று கேட்டுவிட்டுப்
பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த
(பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக்
காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார்
திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)
விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள்
திருடிவிட்டால் அவர்கள்
மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின்
மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள்
ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத்
துண்டித்தே இருப்பார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

ஆதாரம்: புகாரி (6788)

இதையறியாமல், ஏழைகளிடம் ஒருவிதமாகவும்
பணக்காரர்களிடம் ஒரு விதமாகவும் மார்க்க
செய்திகளைக் கையாள்பவர்களைப் பார்க்கிறோம். அதுபோல
தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்கள் தவறு செய்யும்
போது அலட்சியமாக விட்டுவிடுவது; அதேசமயம்
அறிமுகமற்றவர்கள், நெருக்கமற்றவர்கள்
தவறு இழைக்கும் போது கடுமையாக
நடந்து கொள்வது என்றும் சிலர்
செயல்படுகிறார்கள்.
சொந்த ஊரில் ஒருவிதமாகவும் வெளியூர்களில்
வேறு விதமாகவும் இடத்திற்கு, எதிர்ப்புகளுக்கு ஏற்ப
சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டு வேடம் போடும்
மக்கள் இருக்கிறார்கள். இந்தப்
பண்பு கொண்டவர்கள் இந்தச் செய்தியைத்
தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

விலகி விடும் #விலாப்புறங்கள் :



அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.

(#அல்குர்ஆன் 32:16,17)

கேட்டது கிடைக்கும் #நேரம்


நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம் 1259

உண்மை முஸ்லிமாக வாழ்வோம்

நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன்றைக்கு உலகில் 72 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன.
நாம் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும்
கட்டுப்பட்டு வாழ்ந்தால் இன்னும் பல நாடுகள்
இஸ்லாத்தை தழுவும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப்
போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும்,
அவர்களுக்காக அவன் பொருந்திக்
கொண்ட மார்க்கத்தில்
அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின்
அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும்
உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள்
செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும்
இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை)
மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் (24:55)

எனவே உண்மை முஸ்லிமாக வாழ்வோம்; ஈருலகிலும்
வெற்றி பெறுவோம்.

வெள்ளி, 22 நவம்பர், 2013



“பேய்கள் என்பது ஷைத்தான் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது தெளிவாகின்றது.

ஷைத்தான் என்றொரு படைப்பு இருப்பதாகக் கூறும் இஸ்லாம் ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என்பதையும் சொல்லித் தருகின்றது. ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என இறைவனும் அவனது தூதரும் சொன்னார்களோ அந்த அலுவல்களையே அவன் செய்து வர முடியும். ஒரு மனிதனது அறிவை முற்றாக நீக்கி அவன் மீது முழு ஆதிக்கம் செய்வது அவனது அலுவல்களில் ஒன்றல்ல.

இவர்கள் தங்கள் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைத்த நபிமொழியே ஷைத்தானுடைய அலுவலை விளக்கிடப் போதுமானதாக அமைந்துள்ளது.

நம் அனைவரிடமும் ஷைத்தான் இருக்கின்ற காரணத்தினால் நாம் நமது அறிவை முற்றிலும் இழந்து விடுவது கிடையாது. நாம் செய்கின்ற காரியம் யாவை? என்பது நமக்கே தெரியாமல் போவது கிடையாது.

நம்மோடு ஒரு ஷைத்தான் இருந்தாலும் நாம் நாமாகவே இருக்கின்றோம். நாம் ஷைத்தானாகவே ஆகிவிடுவதுமில்லை. அப்படியானால் நம்முடன் ஷைத்தானும் மலக்கும் இருக்கின்றார்கள் என்பதன் அர்த்தம் என்ன?.

ஷைத்தான் தீய காரியம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த மனிதன் சுய சிந்தனையுடன், தன்னுணர்வுடன் அவனுக்குக் கட்டுப்படுகின்றான். வானவர் நன்மைகளைச் செய்யுமாறு தூண்டுகிறார். அந்த மனிதன் சுய சிந்தனையிடனும் விருப்பத்திடனும் தான் அதனைச் செய்கிறான்.

இதிலிருந்து ஷைத்தானுடைய அதிகபட்ச ஆதிக்கம் என்னவென்பது தெளிவாகவே தெரிகின்றது. நம்மைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டி அதைச் சரியானது என நம்ப வைப்பது தான் ஷைத்தானுடைய அதிகபட்சமான ஆதிக்கமாகும்.

ஒரு மனிதன் நன்மையான எந்தக் காரியமும் செய்யாமல் முழுக்க முழுக்க தீமைகளையே செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய மனிதன் அவனுடனிருக்கின்ற வானவருக்குக் கட்டுப்படாது முற்றிலும் ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு விட்டான் என்று கூறலாம்.

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு விட்ட இந்த மனிதன் தன் அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விடுவதில்லை. பைத்தியமாகி விடுவதில்லை.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தை நாம் அலசுவோம். இவர்களின் நம்பிக்கைப் பிரகாரம் இரண்டு ஷைத்தான்களைத் தன்னகத்தே கொண்டவன் இரண்டு மடங்கு தீமைகளைச் செய்ய வேண்டும். ஆனால் பேய்ப் பிடித்தவர்கள் (?) இரண்டு மடங்கு தவறுகள் செய்வது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் பேய் பிடித்தவன் (?) விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; எத்தனையோ தீமைகளை அவன் செய்வதில்லை. உலகத்தில் இருக்கின்ற எல்லாத் தீமைகளையும் அவன் செய்தாலும் கூட இஸ்லாமியப் பார்வையில் அவன் குற்றவாளி அல்ல.

சுயசிந்தனையுடன் வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்காக மட்டுமே மனிதன் விசாரிக்கப்படுவான். என்ன செய்கிறான் என்றே தெரியாமல் செய்யும் காரியங்கள் நமது பார்வைக்கு தவறு என்று தென்பட்டாலும் அதைச் செய்தவன் குற்றவாளி இல்லை. பைத்தியக்காரன் ஒருவன் தொழாவிட்டாலோ, நோன்பு நோற்காவிட்டாலோ இன்ன பிற கடமைகளிலிருந்து தவறி விட்டாலோ அதற்காக அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

“ஒருவனிடம் இருந்த ஷைத்தான் இன்னொருவனிடம் மேலாடுவதே பேய் என்கிற இலக்கணம் சரியானதல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

பேய் பிடிக்காமல் ஒருவன் தவறு செய்தால் அவன் நரகை அடைவான். பேய் பிடித்த பின் அதைச் செய்தால் அவன் நரகை அடைய மாட்டான் எனும் போது ஷைத்தான் அந்த மனிதனுக்கு நன்மையே செய்துள்ளான் என்பது தெளிவு. அனைவரையும் நரகவாசிகளாக ஆக்கும் ஷைத்தான் பேய் பிடித்தவனை மட்டும் சொர்க்கவாசியாக அல்லவா ஆக்கிவிடுகிறான்.

இது ஷைத்தானுடைய அலுவலுக்கே மாற்றமில்லையா? இது ஷைத்தானுக்கு நஷ்டமில்லையா?

இறந்தவர்களின் ஆவியே பேய் என்று சொன்னாலும் அதுவும் சரியானதல்ல. இறந்தவர்களிடம் இருக்கும் ஷைத்தான் வந்து மேலாடுகிறான் என்றாலும் அதுவும் சரியானதல்ல. இரண்டு விளக்கங்களுமே குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமானதாகும்.

பேய் என்பது இறந்தவர்களுடைய ஆவிகளின் ஆதிக்கமன்று. மாறாக இறந்தவர்களிடம் குடிகொண்டிருந்த சாத்தான்கள் உயிருடனுள்ளவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமே என்ற கருத்துடையவர்கள் தங்களின் வலுவான ஆதாரமாக 2:275 வது வசனத்தை முன்வைக்கின்றனர்.

முன்னரே நாம் குறிப்பிட்டபடி அவ்வசனம் “வட்டி உண்போர் ஷைத்தான் பீடிக்கப்பட்டவன் எழுவது போலவே மறுமையில் எழுவார்கள் எனக் கூறுவது இவ்வசனத்திலிருந்து ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்று இவர்கள் வாதிக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் பல காரணங்களால் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

ஷைத்தானால் பீடிக்கப்படுவதாக இவ்வசனம் கூறுவது உண்மை தான். ஷைத்தான்களால் மனிதர்கள் பீடிக்கப்படுகிறார்கள் என்பதும் நிச்சயமான ஒன்று தான். இதில் நமக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.

ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதற்கு இவர்கள் வழங்கும் அர்த்தத்திலேயே நமக்கு மாற்றுக் கருத்து உள்ளது.

ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதன் பொருளை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது அதன் சரியான பொருள் தெரிய வருகின்றது.

ஷைத்தானால் தீண்டப்படுவது என்ற வாசகம் இந்த வசனத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் திருக்குர்ஆனில் கையாளப்பட்டுள்ளது.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).
(அல்குர்ஆன் 38:41,42)

2:575 வசனத்தில் இடம் பெற்ற மஸ் என்ற சொல்லே மேற்கண்ட வசனத்திலும் இடம் பெற்றுள்ளது. அய்யூப் நபியவர்கள் பேய் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று எவரும் இந்த இடத்தில் பொருள் கொண்டதில்லை.

இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 8:201)

இந்த இடத்திலும் அதே ‘மஸ் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கேயும் இறையச்சமுடையோருக்குப் பேய் பிடிக்கும் என்று எவரும் பொருள் கொண்டதில்லை.

நம்மை தீமை அனைத்துமே இறைவனால் தான் ஏற்படுகின்றன என்றாலும் தீய மோசமான விளைவுகள் பற்றிக் கூறும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறுவதுண்டு. அந்த அடிப்படையிலேயே அய்யூப் நபியவர்கள் தமக்கு ஏற்பட்ட பல சிரமங்களைக் குறிப்பிடும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களுக்கு ஏதாவது தீய எண்ணம் தோன்றிவிடுவதை ஷைத்தான் தீண்டுவது என இறைவன் குறிப்பிடுவதும் அந்த அடிப்படையிலேயே.

ஆக தீமைகளையும் கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பிடும் போது ஷைத்தானுடைய தீண்டுதல் எனக் கூறப்படுவதுண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

கஷ்டத்தில் உழல்பவன், தீய காரியங்களில் ஈடுபடுபவன், பைத்தியம் பிடிப்பவன், பரட்டைத் தலையுடன் காட்சி தருபவன், மோசமான கவிதைகளை இயற்றுபவன் இவர்களைப் பற்றியெல்லாம் ஷைத்தான் எனவும் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எனவும் கூறப்படும். குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு ஆதாரம் உண்டு.

அந்த அடிப்படையிலேயே 2:275 வசனத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.  
ஒருவனிடம் இருந்த ஷைத்தான் இன்னொருவனிடம் இடம் பெயர்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் இது வரை நாம் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களுடனும், ஹதீஸ்களுடனும் அது முரண்படும் நிலை உருவாகும்.

எந்த வசனத்தைத் தங்களின் வலுவான ஆதாரமாக இவர்கள் எடுத்து வைக்கின்றார்களோ அந்த வசனத்தில் இவர்களின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஒருவனிடமிருந்த ஷைத்தான் இன்னொருவனுக்குள் புகுந்து கொள்கிறான் என்று இந்த வசனமும் கூறவில்லை. வேறு எந்த வசனமும் கூறவில்லை.

மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிக்க முடியும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது. பைத்தியம் பிடிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. மாறாக பேய் பிடித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சில பேர் பைத்தியங்களாக உள்ளனர். பல பேர் நடிப்பவர்களாகவே உள்ளனர் என்றே நாமும் கூறுகிறோம்.

பேய் இருப்பதாக ஈமான் கொள்பவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. குர்ஆனையும் ஹதீஸையும் மறுத்து விட்டுத்தான் பேய்களை நம்ப முடியும். இரண்டில் எதை நம்புவது? என்று சிந்தியுங்கள்.

 “பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம்.
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

 
  பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம்.

பேய்கள் என்றொரு படைப்பினம் இல்லை. இறந்தவர்களின் ஆவி உயிருள்ளவர் மேல் வந்து ஆதிக்கம் செலுத்துவதும் இல்லை. ஒரு மனிதனிடம் இருந்த ஷைத்தான் அவனது மரணத்திற்குப் பின் இன்னொருவரிடம் வந்து குடியேறுவதுமில்லை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் நாம் நிரூபித்தாலும் அதை நம்பாத உள்ளங்களும் இருக்கின்றன. இதற்கு நியாயமான காரணங்களும் அவர்களிடம் உள்ளன. எனவே அந்தத் தரப்பினரின் நியாயமான ஐயங்களை அகற்றினால் மட்டுமே பேய்களை மனித உள்ளங்களிலிருந்து முழுமையாக நீக்க முடியும்.

நேற்று வரை சாதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று அசாதாரணமானவனாக மாறி விடுகிறான். அவனது பழக்கவழக்கங்கள் விசித்திரமாக மாறிப் போய் விடுகின்றன; முன்பிருந்ததை விட அவனது பலம் அதிகமாகி விடுகின்றது; இத்தகைய நிலைக்கு ஆளான சிலர் மறைவான சில விஷயங்களைக் கூட அறிவிக்கின்றனர். இதற்கு முன் அறிந்திராத மொழிகளைக் கூட சில பேர் பேசி விடுகின்றனர்; பயந்த சுபாவம் கொண்ட இத்தகையோர் அடியோடு அச்ச உணர்வு நீங்கியவர்களாகி விடுகின்றனர். இன்னும் பல வியப்பூட்டும் மாறுதல்கள் அவர்களிடம் ஏற்பட்டு விடுகின்றன. இவையெல்லாம் மனித சக்தியை மிஞ்சக் கூடிய ஒரு சக்தியால் மட்டுமே சாத்தியம். அதனையே பேய்கள் என்கிறோம் என்பது இவர்களது நியாயமான சந்தேகம்.

மற்றொரு சந்தேகமும் கூட உண்டு. பேய் பிடித்ததாக நம்பப்படுவோருக்கு எவ்வளவோ உயர்வான மருத்துவ சிகிச்சையளித்தும் நிவாரணம் கிடைக்காமல் ஒரு சாமியாரிடம், ஒரு மந்திரவாதியிடம், ஒரு பூசாரியிடம், ஒரு மௌலவியிடம் மந்திர சிகிச்சைப் பெற்றதும் உடனடி நிவாரணம் கிடைக்கின்றது. மேலும் அந்தப் பேய்களே தாங்கள் ஓடி விடுவதாகக் கூறி விட்டு ஓடிப் போகின்றன.

மருத்துவத்தால் ஆகாதது மந்திரத்தால் ஆகிறது என்பது பேய்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தர்காக்கள் மற்றும் கோயில்களில் அதிசயமான முறையில் அவர்கள் குணப்படுத்தப்படுகின்றார்கள். “ஆபரேஷன் உட்பட பலவித முறைகளால் தர்காக்களில் குணப்படுத்தப்படுகின்றனர். இதுவும் பேய்கள் இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது என்று இத்தகையோர் கூறுகின்றனர்.

இந்த அதிசயங்களின் புதிரை விடுவிக்காமல் எடுத்து வைக்கப்படும் சான்றுகள் முழுமையான பலனையளிக்காது. எனவே இந்த அதிசயங்கள் பற்றிய புதிரை நாம் முதலில் விடுவிக்க வேண்டும். இது பற்றிக் கடுகளவு கூட சந்தேகம் இராத அளவுக்கு இது பற்றி நாம் ஆராய்வோம்.

சமூக விரோதிகளும் குற்றங்களில் ஈடுபடுவோரும் தங்களைக் காத்துக் கொள்வதற்குப் பேய்களைப் பற்றி மக்கள் நம்புவது வசதியாக இருக்கிறது. இத்தகையோர் பேய்களைப் பற்றி கதைகளைக் கட்டிவிட்டு தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர். உதாரணமாக ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்டாலோ அது பிறரால் கண்டு  கொள்ளப்படக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் பேய்கள் நடமாடுவதாக கதை கட்டும் அவசியம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. வேறு எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விட இது செலவு குறைந்ததாகவும் முழுப் பயனளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

ஒரு இடத்தில் பேய்கள் நடமாடுவதாக செய்திகள் பரவும் போது அந்த இடத்திற்கு காவல் துறையினர் கூட செல்வதற்கு அச்சப்படுவர். எவராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தை பேய்கள் ஏற்படுத்துகின்றன. தங்களின் ஏஜன்டுகள் மூலம் இப்படி வதந்திகளைப் பரப்புவதுடன் கூட இவர்கள் நின்று விடுவதில்லை. வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக சில ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சலங்கையொலியை ஏற்படுத்துதல், நள்ளிரவில் கற்களையும் மற்ற பொருட்களையும் வீடுகளின் மேல் வீசுதல், தீப்பந்தங்களைக கொளுத்தி பயமுறுத்துதல் இன்னும் பலவாறான ஏற்பாடுகளைச் செய்து அரைகுறை தைரியசாலிகளையும் அதைரியப்படுத்தி வீடுகளில் முடங்கச் செய்வர்.

இத்தகைய ஏற்பாடுகளால் உண்மையிலேயே பேய்கள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்தச் சமூக விரோதிகள் ஏற்படுத்தி விடுகின்றனர். எங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் பற்றிப் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் துணிவுடன் சென்று ஆராய்ந்தால் அங்கே சமூக விரோதக் காரியங்கள் நடப்பதைக் கண்டு கொள்ளலாம்.

அற்பமான நோக்கங்களுக்காகக் கூட பேய்கள் பற்றிய வதந்திகள் கிளப்பப்படுவதுண்டு. ஒருவருக்குச் சொந்தமான இடத்தைக் குறைவான விலைக்கு வாங்க வேண்டும் என்று விரும்பினால் அல்லது வாடகைக்கு குடியிருப்பவரைக் காலி செய்ய விரும்பினால் பேய்களை விட எளிய வழி எதுவும் இல்லை. அந்த இடத்தில் பேய்கள் நடமாடுவதாக வதந்திகளைப் பரப்பி விட்டு, அதை உறுதிப்படுத்தும் விதமாக சில காரியங்களைச் செய்தால் விரும்பிய விலைக்கு அந்த இடத்தை வாங்கலாம். வாடகைக்கு இருப்பவரை உடனேயே காலி செய்து விடலாம். இது போன்ற அற்பமான நோக்கங்களைக் கருத்தில் கொண்டும் பேய்கள் நடமாட விடப்படுகின்றன.

இவையெல்லாம் சில உதாரணங்களே. இது போன்ற இன்னும் அநேக காரணங்கள் பேய்களுக்குப் பின்னணியாக இருக்கின்றன.

இனி.. பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவரிடம் அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்ற புதிரை விடுவிப்போம்.

நேற்று வரை சாதாரமானவனாக இருந்த ஒருவன் பேய் பிடித்ததாக
 நம்பப்படும் போது அசாதாரணமானவனாக எப்படி மாறி விடுகின்றான்?

இந்தப் புதிரை நாம் விடுவித்தாக வேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குறைத்துத் தான் தீர வேண்டும்.
இந்த ஒரு வரியில் விளங்க முடியாதவர்கள் மட்டும் இனிவரும் விளக்கத்தை படிக்கலாம்.

மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகவும் அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும் பேய்க் கதைகள் கட்டி விடப்படுவது போலவே வேறு சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக தங்களுக்கே பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்களும் உண்டு. அவ்வாறு நடிப்பதால் சில காரியங்களை அவர்கள் சாதித்துக் கொள்வதும் உண்டு.

இப்படி பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்கள் அசாதாரணமானவராகவும் நடித்து தீர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் பேய் வேஷத்தினால் அவர்கள் முழுப்பயனை அடைய முடியாது.

இதைச் சில உதாரணங்கள் மூலம் உணர முடியும். ஒரு பெண் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பதாக (நீண்ட நாட்கள் கணவனைப் பிரிந்தவளாக இருப்பதாக) வைத்துக் கொள்வோம். இவள் இறைவனை அஞ்சி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவள் என்றால் பிரச்சனையில்லை. அவ்வாறின்றி, அன்னிய ஆடவனை விரும்பி விட்டால் என்றால்அவனை அவள் அடைவதற்கு குடும்பத்தினர்களின் கட்டுப்பாடு தடையாக இருந்தால் அதை எவ்வாறேனும் உடைக்கவே முயற்சிப்பாள்.

அத்தகைய பெண் சாதாரண நிலையில் நள்ளிரவில் வீட்டை விட்டுப் போய் விரும்பிய ஆடவனைச் சந்தித்து வீட்டிற்கு திரும்பினால் சமூகம் அவளைச் சும்மா விடாது. இந்தத் தடையை உடைப்பதற்கு அவள் பேயாக மாற வேண்டும். பானை சட்டிகளை உடைக்க வேண்டும். வாயில் வந்ததை உளற வேண்டும். நமக்குத் தெரியாத விஷயங்களைக் கற்பனை செய்து மறைவான செய்திகளைக் கூறுவதாக அவிழ்த்து விட வேண்டும். வேறு மொழி பேசுகிறாளோ என்று மற்றவர்கள் கருதும் அளவுக்கு வாயில் வந்தவாறு உளற வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டு அவள் நள்ளிரவில் எழுந்து வெளியே சென்று விரும்பிய ஆடவனைச் சந்தித்து விட்டுத் திரும்பினால் சமூகம் அவளது நிலைக்காகப் பரிதாபப்படும். இதனால் தான் அசாதாரணமானவளாக அவள் ஆகி விடுகின்றாள்.

இது ஒரு உதாரணமே, வேறு பல நோக்கங்களுக்காகவும் இது போல் வேஷம் கட்ட வேண்டிய நிலையில் பலர் இருக்கின்றனர். பெருமளவு கடன்பட்டவன் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவும், விரைவிலேயே தனக்குத் திருமணம் செய்யும் முடிவுக்குப் பெற்றோர்களைக் கொண்டு வரவும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் இப்படி நாடகமாடுவதுண்டு.

அவர்கள் அசாதாரணமானவர்களாகக் காட்சி தருவது நடிப்புத் தான் என்பதில் ஐயம் தேவையில்லை. இதற்குச் சில சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இலங்கையில் ஒருவர்மலையாள மொழி அறியாத ஒருவர்பேய் பிடித்தவுடன் மலையாளம் பேசுவதாக மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர். அவரைச் சோதிப்பதற்காக டாக்டர் கோவூர் என்பவர் செல்கிறார். இவரது தாய்மொழி  மலையாளம். இவர் சென்று அவர் பேசும் மலையாள மொழியைக் கேட்ட போது அதில் ஒரு வார்த்தையும் மலையாளச் சொல்லாக இருக்கவில்லை. வெறும் உளறலைத் தவிர வேறு இல்லை. (பார்க்க: டாக்டர் கோவூரின் மனக்கோலம்)

பேய் பிடித்ததாக நம்பப்படுபவன் மலையாளம் பேசுகிறான். அரபியில் பேசுகிறான் என்றெல்லாம் முடிவு செய்கின்ற மக்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. தாங்கள் மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் சேராத உளறல்களைக் கேட்டு அதற்கு ஒரு பெயரைச் சூட்டி விடுகிறார்கள் இது தான் உண்மை.

  மாயம்மா என்றொரு பெண். இளம் விதவையான அவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று ஊரே அனுதாபம் காட்டுகின்றது. சில இளைஞர்கள் நள்ளிரவில் அவள் பேயாக (?) வெளியே வரும் போது பின்தொடர்ந்து சென்றால் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மற்றொரு ஆடவனுடன் அவள்! (ஜுனியர் விகடனில் கி. ராஜ் நாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசி)

ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்க அவளுக்கு மொட்டை அடிக்க முற்பட்ட போது பேய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. (சில மாதங்களுக்கு முந்தைய மறுமலர்ச்சி)

எந்த நோக்கத்திற்காக பேய் வேஷம் போடுகிறாளோ அதற்கு அழகிய  கூந்தல் வேண்டும். மொட்டை அடித்தால் எவரும் சீண்ட மாட்டார்கள். அதனால் தான் பேய் ஓடிவிடுகின்றது.

இது நடிப்புத் தான் என்பதற்கும்பேய்கள் கிடையாது என்பதற்கும் மேலும் சில அறிவுப்பூர்வமான சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்பது உண்மையானால் பேய்கள் உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கின்றார்களோஎங்கெல்லாம் அடக்கம் செய்யப்படுகின்றார்களோஎங்கெல்லாம் எரிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் இருந்தாக வேண்டும். ஆனால் மூடநம்பிக்கை மலிந்துள்ள இந்தியா போன்ற நாடுகளைத் தவிர உலகின் பல பகுதிகளில் பேய்களுக்கு அறவே இடமில்லை.

கம்யூனிஸத்தின் பிடி இருக்கமாக உள்ள நாடுகளில் பட்டிதொட்டிகள் முதல் பெருநகரம் வரை எவருக்கும் பேய் பிடிப்பது கிடையாது. சவூதி அரேபியா போன்ற பகுதிகளிலும் பேய்களைக் காண முடிவதில்லை. இந்தியாவில் கூட மிகப்பெரும் நகரங்களில் பேய்களின் அதிகாரம் செல்லுபடியாவதில்லை.

அங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கத் தான் செய்கின்றனர். பேய்களின் உற்பத்தித் தலங்களாகக் கருதப்படும் சுடுகாடுகளும், கல்லறைகளும் இருக்கத் தான் செய்கின்றன. பேய்களுக்குரிய எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தும் அங்கெல்லாம் பேய்கள் இல்லாமலிருப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அங்குள்ள மக்களுக்கு பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாததால் பேய் வேஷம் அங்கே எடுபடுவதில்லை. பேய் வேஷம் போட்டு எதையும் அங்கே சாதிக்க முடிவதில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.

சட்டதிட்டங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லாத ஐரோப்பிய நாடுகளிலும் பேய்களுக்கு அவ்வளவு இடமில்லை. காரணம் அங்குள்ளவர்கள் எத்தகைய தகாத உறவிலும் பேய் வேஷம் போடாமலேயே ஈடுபட முடியும். ஒரு பெண் விரும்பிய ஆடவனும் விரும்பிய நேரத்திலும் சுற்ற முடியும். அதை அந்தச் சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. பேய் வேஷம் போடாமலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழியிருப்பதால் அங்குள்ளவர்கள் பேய்களின் துணையை நாடுவதில்லை; அதற்கு அவசியமும் இல்லை.

இறந்தவர்களின் ஆவிகளைப் பேய்கள் எனும் அடிப்படையில் பார்க்கும் போது பேய்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 500 கோடி என்றால் இன்று மேலும் 100 கோடி அதிகமாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலநூறு பேய்கள் அதிகமாகும் போது அவற்றின் அட்டகாசங்களும் அதிகமாகி இருக்க வேண்டும்.

அவ்வாறு பேய்களின் அட்டகாசங்கள் அதிகமாகியுள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ குறைந்துள்ளது. இதுவும் பேய்கள் இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

பேய்கள் மனிதனை விட அதிக வல்லமை கொண்டவை. ஒரே அடியில் அவை மனிதனை வீழ்த்தி விடக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றெல்லாம் பேய் நம்பிக்கையாளர்கள் எண்ணுகிறார்கள்.

இவ்வளவு வல்லமை மிக்க பேய்கள் ஒரு மனிதன் தனியாகச் செல்லும் போது பிடித்துக் கொண்டதாகத் தான் பேசப்படுகின்றதே அன்றி கூட்டமாக இருப்பவர்களைப் பிடித்ததாக எங்கேயும் பேசப்படுவதில்லை. ஐந்தாறு பேர் ஒரு சுடுகாட்டை அல்லது கல்லறையைக் கடந்து சென்றாலும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பேய்கள் இவர்களை அண்டுவதில்லை என்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். பேய்கள் உண்மையிலே இருக்குமானால் இவர்களை ஏன் தாக்குவதில்லை?

இருட்டில் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தும் பேய்கள் வெளிச்சத்தில் வருவதில்லையே அது ஏன்? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் ஏதும் கிடையாது. இருட்டாக இருக்கும் போது எதையாவது பார்த்து விட்டு பேய் என்று மனிதன் நினைத்துக் கொள்கின்றான். நல்ல வெளிச்சத்தில் ஒவ்வொரு பொருளும் அதன் உண்மையான வடிவத்தில் காட்சி அளிப்பதால் வெளிச்சத்தில் பேய்களை யாரும் பார்க்க முடியவில்லை.

இது போலவே தனியாக ஒரு பெண் செல்லும் போது தைரியம் குறைந்த நிலையில் இருக்கிறாள். அப்போது அவள் கண்களுக்குக் கற்பனைத் தோற்றம் தெரிகிறது. ஐந்தாறு பேருடன் செல்லும் போது ஒருவளுக்கு மட்டும் கற்பனையாக ஏதும் தோன்றினாலும் மற்றவர்கள் அப்படி எதுவும் தோன்றவில்லையே என்று கூறி விடுகிறார்கள். உண்மையாக இருந்தால் ஐந்து பேருக்கும் தென்பட வேண்டும். பொய்யாக இருப்பதால் தான் ஒருத்திக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில் 90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே, அதன் மூலம் எதையோ சாதித்துக் கொள்ள விரும்புபவர்களே என்பதை இதன் மூலம் அறியலாம்.


கிறிஸ்தவர்கள்


இன்று கிறிஸ்தவர்கள் தங்களின் வழிகெட்ட
கொள்கையைப் பரப்புவதற்கு மேற்கொள்ளும்
முயற்சியில் நூறில் ஒரு பங்கு கூட நாம்
முயற்சி செய்யவில்லை. எனினும் அல்லாஹ் தூய
இஸ்லாத்தை மட்டுமே உலகில் அதிவேகமாகப் பரவும் சத்தியக்
கொள்கையாக ஆக்கியுள்ளான்.

Al Fathiya


ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம்
 கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத்
 தொழுகையில்
 அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத
 வேண்டும். இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வைப் பற்றியும்
 மறுமை நாளைப் பற்றியும் இந்த உலகத்தில் வாழும் போது நாம்
 என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்
 நினைவூட்டப்படுகின்றது.

 உறக்கத்தை விட்டுவிட்டு அதிகாலைத்
 தொழுகைக்கு எழுவது சாதாரண விஷயமா?
 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம்
 வியாபார நேரத்தில் கடையை மூடிவிட்டு ஜும்ஆ
 தொழுகைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சிகள்
 எல்லாம் எதற்காக?

 இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் எதையும் நான்
 தியாகம் செய்வேன். மற்ற அனைத்தையும் விட
 எனக்கு இறைக்கட்டளை முக்கியமானது என்ற
 எண்ணத்தை மனிதனிடத்தில் ஏற்படுத்தி அவனைச்
 சீர்திருத்துவதற்காகத் தான்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

Quran & Hadis


அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், "அவன் பூமியில் நாற்பது நாட்கள் தங்குவான்.

 அன்று ஒரு நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு நாள் ஒரு மாதம் போலவும், மற்றொரு நாள் ஒரு வாரம் போலவும், ஏனைய நாட்கள் அனைத்தும் உங்களது இந்த நாட்களைப் போலவும் இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடம் போன்று இருக்கும் ஒரு நாளில் ஒரு நாளுக்குரிய தொழுகை எங்களுக்குப் போதுமானதா?'' என்று நாங்கள் கேட்டோம். "அவ்வாறல்ல! அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

 அறிவிப்பவர் : நவாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

 நூல்கள் : முஸ்லிம் 5228, திர்மிதி 2166

கல், மண், மரம், மனிதன் என இறைவனல்லாத இறைவனுடைய
 படைப்புகளைக் கடவுள் என்று நம்பி, அவற்றுக்கு மனிதனைப்
 போன்று பலவீனங்கள் இருப்பதாகவும் நம்பினால் அந்த
 நம்பிக்கை மனிதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

 எவன் உண்மையான இறைவனோ அவனை இறைவன் என்று ஏற்க
 வேண்டும். அவனுக்குப் பலவீனங்கள் இல்லை என்றும்,
 அனைத்திற்கும் அதிகாரம் படைத்தவன் என்றும் நம்ப வேண்டும்.

 இறைவன் என்றால் யார்? அவன் எப்படிபட்டவன்?
 அவனுடைய அதிகாரங்கள் எவை? அவனுடைய ஆற்றல்
 எப்படிப்பட்டது என்பதைச் சரியாகப் புரிந்தால் தான்
 அது சரியான இறைநம்பிக்கையாகும். இந்த
 நம்பிக்கையே மனிதனிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்
 சக்தி கொண்டது.

 இஸ்லாம் இப்படிப்பட்ட தூய இறைநம்பிக்கையை மனிதனுக்குப்
 போதிக்கின்றது. இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையைப்
 போன்று உலகில் வேறு எந்த மதமும் கூறவில்லை. அந்த வகையில்
 இஸ்லாம் தனித்து நிற்கின்றது.
திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத்
 திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான்
 துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத்
 தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின்
 மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல்,
 வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி,
 வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான
 செயல்களின் பட்டியல்
 நீண்டு கொண்டே செல்கின்றது.
 இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற
 புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத்
 தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில்
 நடைபெறுகின்றன.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத ஒருவன்
 நீதமாக நடக்க நினைக்கின்றான். ஆயிரம் ரூபாய் லஞ்சம்
 கொடுத்தால் கட்டுப்படாத இவன், சில
 லட்சங்களுக்கு அடிபணிந்து நீதம் தவறிவிடுவான். இவனுடைய
 கொள்கை உறுதியின் விலை சில லட்சங்கள் தான்.
 இன்னும் உறுதி உள்ளவனாக இருந்தால் அதற்குத்
 தகுந்தாற்போல் விலை கொடுத்தால் சறுகிவிடுவான்.

 அல்லது அவனுடைய உயிருக்கோ அவனுடைய
 குடும்பத்தார்களுக்கோ பாதிப்பு என்றால் அப்போது நீதம்
 தவறிவிடுவான். இப்படி அல்லாஹ்வையும் மறுமை நாளையும்
 நம்பாதவர்களை இந்த உலகத்தில் எப்படியும்
 வழிகெடுத்து விடலாம்.

நல்லவனாக வாழும் போது கிடைக்கின்ற நன்மைகளையும்
 தீயவனாக வாழும் அதனால் உலகில் ஏற்படுகின்ற
 விளைவுகளையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். நல்ல பாதையில்
 செல்பவனின் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக
 உள்ளது. தீயவழியில் செல்பவனின் உடல், உள்ளம்,
 குடும்பம், பொருளாதாரம் என அனைத்தும்
 கெட்டு உலகில் சீரழிகிறான். எனவே தான் உலகில்
 நல்லவனாக வாழ வேண்டும் என்ற அடிப்படையை அனைவரும்
 கூறுகின்றனர்.

 ஆனால் இதற்கான சரியான வழியை அநேக மக்கள்
 அறியாமல் இருக்கின்ற காரணத்தால் இந்த
 ஆசை பலருக்கு நிறைவேறுவதில்லை. இஸ்லாம் மட்டுமே இதற்குச்
 சரியான தீர்வைக் கொடுக்கின்றது. இஸ்லாம்
 அல்லாத வேறு எந்த மதத்திலும் இதற்கான தீர்வைக் காண
 முடியாது.

 எந்த நம்பிக்கை மனிதனிடத்தில் நல்ல
 மாற்றங்களை ஏற்படுத்துமோ அந்த நம்பிக்கையை உண்மையாகவும்
 ஆழமாகவும் ஏற்படுத்தும் வாழ்க்கை நெறிதான்
 இஸ்லாம்.

 பொதுவாக, பெரும்பாலான மதங்கள்
 இறைநம்பிக்கையைப் போதிக்கின்றன. அது போல் மரணத்திற்குப்
 பிறகு சொர்க்கம் - நரகம் இருப்பதையும் கூறுகின்றன.
 இந்த இரண்டும் தான் மனிதன்
 சீர்பெறுவதற்கு அடிப்படையான விஷயங்கள்.

 இந்த இரண்டு விஷயங்களையும் இஸ்லாம் மனித
 குலத்திற்கு எப்படிப் போதிக்கின்றதோ அதுபோல் வேறு எந்த மதமும்
 போதிக்கவில்லை.

அடுத்து, இந்த உலகத்தில் இறைவன் மனித
 குலத்தை எதற்காகப் படைத்தான்? மனிதன் உலகத்தில்
 படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? மரணத்திற்குப்
 பிறகு என்ன நிலை? ஆகிய கேள்விகளுக்கு சரியான
 பதிலை இஸ்லாம் மட்டுமே கூறுகின்றது.

 மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற
 வழிகாட்டலை இறைவன் மனித குலத்திற்குக்
 கொடுத்துள்ளான். அந்த வழிகாட்டல் குர்ஆனும்
 நபிமொழியாகவும் உள்ளது. இவ்விரண்டையும்
 பேணி வாழ்வதே மனிதப் படைப்பின் நோக்கம்.

 ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர
 (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. நான்
 அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள்
 எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.

 (அல்குர்ஆன் 51:56)

 இந்த உலகத்தில் மனம்போன போக்கில் வாழாமல்
 இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் மரணத்திற்குப்
 பிறகுள்ள வாழ்வில் இறைவன் சொர்க்கம் என்ற
 சந்தோஷமான வாழ்வைத் தருவான். இறைக் கட்டளையைப்
 புறக்கணித்து வாழ்ந்தால் நரகம் என்ற கஷ்டமான கடும்
 நோவினையுள்ள வாழ்வைத் தருவான் என்ற
 மறுமை நம்பிக்கையை இஸ்லாம் போதிக்கின்றது.