வியாழன், 9 ஜனவரி, 2014

சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!

முஸ்லீம் சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!
 

சென்னை: கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக சிறுவனை போலீசார் பிடித்து சென்றனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர், அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது திடீரென வெடித்து குண்டு பாய்ந்தது. அவனது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் குற்றவாளிகளை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செயின்பறிப்பு, வழிப்பறி, கோயில் உண்டியல் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதையடுத்து, போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வெட்டுவாங்கேணியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை ஒரு சிறுவன் உடைப்பதை பார்த்த போலீசார், அவனை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவன் வெட்டுவாங்கேணி 1வது பிரதான சாலையை சேர்ந்த முகமது அனிபா மகன் தமீம் அன்சாரி (14) என்றும், ஏற்கனவே பல முறை கோயில் உண்டியலை உடைத்து திருடியதாக பிடிபட்டவன் எனவும் தெரிந் தது. அவனை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் அவனிடம் விசாரணை மேற்கொண்டார். அவன் குற்றத்தை ஏற்க மறுத்தபோது, திடீரென அவனது வாய்க்குள் தனது துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். அப்போது துப்பாக்கி வெடித்து, சிறுவனின் தொண்டைக்குள் குண்டு பாய்ந்தது. இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சிறுவனை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபரேஷன் செய்து குண்டு அகற்றப்பட்டது. எனினும் அவனது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனை முன்பு சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட் டது. பதற்றத்தை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர்.

கடந்த மாதம் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, குற்றவாளிகள் காவல் நிலையத்தில் இருக்கும்போது மரணமடைவது கவலைக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று எச்சரித்திருந்தார். குற்றவாளியை பிடிக்க செல்லும்போது அவன் ஆயுதம் வைத்திருப்பது தெரிந்தால் மட்டுமே போலீசார் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், விசாரணையில் உள்ள ஒரு சிறுவனிடம் இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கி முனையில் விசாரித்ததும், அப்போது குண்டு வெடித்து சிறுவன் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அநியாயமாக சுட்டுவிட்டார்கள்: தாய் கதறல்!



சிறுவனின் தாய் சபீனா பேகம் கூறியதாவது: எனக்கு 2 மகன், ஒரு மகள். கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பில் இறந்துவிட்டார். அதன்பின் நான் ஓட்டலில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்தேன். தமீம் அன்சாரியின் அண்ணன் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான். ஆனால் இவன் படிக்காமல் நின்றுவிட்டான். இங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து சிறுசிறு தவறு செய்துவந்தான். நான் வேலை செய்த ஓட்டலில் சேர்த்தேன். அங்கிருந்தும் ஓடிவந்துவிட்டான். கடந்த 2 நாளாக அவனை காணவில்லை.
.எங்கு போனான் என எங்களுக்கு தெரியாது. இந்த நிலையில் போலீசார் வந்து துப்பாக்கி குண்டு பட்டு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்கள். போலீசார் அவனை விசாரணைக்கு அழைத்து செல்லும் முன்பும் எங்களுக்கு தகவல் தரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், போலீசார் சிறுவனை விசாரிக்கலாம் ஆனால், துப்பாக்கி வைத்து விசாரிக்கும் அளவுக்கு அவன் என்ன தீவிரவாதியா? சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மனித நேயம் சிறிதும் இல்லாத இந்த கயவர்கள் மீது அரசு கொலைக்குற்றத்திற்கான வழக்கை பதிவுச் செய்து சிறையில் தள்ளுமா? அல்லது விசாரணை என்ற பெயரால் காலம் கடத்தி பாதுகாக்குமா?

இதையறிந்து தமு முகவை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 300க் கும் மேற்பட்டோர் வெட்டுவங்கணி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.