/indian-express-tamil/media/media_files/2025/10/15/chennai-high-court-3-2025-10-15-19-09-45.jpg)
கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு... ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை இணையவழியில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் 'காகிதமில்லா தாக்கல்' முறையை ஊக்குவிக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் கடந்த டிசம்பர் மாதம் 'இ-பைலிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வராமலேயே இணையம் வழியாக வழக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
இருப்பினும், இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காகிதங்கள் மூலம் நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் முறையும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இ-பைலிங் முறையோடு, நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் பழைய நடைமுறையும் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பால், வழக்கமான முறையில் வழக்கு தாக்கல் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கி உள்ளதாக வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mandatory-e-filing-put-on-hold-madras-high-court-registrar-issues-clarification-after-state-wide-protests-10977203





