/indian-express-tamil/media/media_files/2026/01/07/trump-2026-01-07-16-20-34.jpg)
முக்கிய வெளிநாட்டு கொள்கை இலக்கை அடைவதற்காக கிரீன்லாந்தை கைப்பற்றும் வாய்ப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார் என்று வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை (ஜன. 6) தெரிவித்தது. ஆனால், இதற்கு பதிலளித்த டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன், டென்மார்க் நாட்டின் பிரதேசமான கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று திட்டவட்டமாக கூறினார்.
டிரம்ப் ஏன் கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கிறார்?
கிரீன்லாந்தில் அமெரிக்கா பெரிய விமானப்படை தளம் வைத்துள்ளது. கிரீன்லாந்திலிருந்து, அமெரிக்கா ரஷ்யா, சீனா அல்லது வடகொரியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை கண்காணித்து தடுக்க முடியும். அதேபோல், ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கான ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை விரைவாக ஏவும் வாய்ப்பும் உள்ளது.
இதை வைத்து, டிரம்ப் கிரீன்லாந்தின் புவியியல் நன்மையை பயன்படுத்தி அமெரிக்காவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு களத்தில் முன்னிலை பெற விரும்புகிறார்.
தனிம வளம்
கிரீன்லாந்து 836,000 சதுர மைல் பரப்பளவுள்ள வளமிக்க தீவு ஆகும். இதில் உள்ள அரிய நிலத் தனிமங்கள் முக்கியமாக மொபைல் போன்கள், மின் வாகனங்கள், பிற நுகர்வு மின்சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது சீனா இந்த அரிய நில தனிமங்களை அதிக அளவு சப்ளை செய்து வருகிறது. சீனா இந்த துறையில் கொண்டுள்ள ஆதிக்கத்தால் அமெரிக்காவிற்கு அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் மற்றொரு காரணமாகும்.
வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்த டிரம்ப் கிரீன்லாந்தை பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். ரஷ்யா மற்றும் சீன கப்பல்களால் கிரீன்லாந்து சூழப்பட்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப் தொடர்ந்து கிரீன்லாதை கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கையை பயன்படுத்தினால் அது நேட்டோ கூட்டணியை உடைக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா கிரீன்லாந்தின் மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு வழங்கப்பட்ட பாதுகாப்பும் முடிவுக்கு வரும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/international/donald-trump-plan-to-acquiring-green-land-read-full-story-10979061





