வெள்ளி, 9 ஜனவரி, 2026

டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் அச்சம்: ஜன.20-ல் உண்ணாவிரதப் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

 

pr pandiyan (1)

டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் அச்சம்: ஜன.20-ல் உண்ணாவிரதப் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் திறக்க ஓ.என்.ஜி.சி மறைமுகமாக முயற்சிப்பதாகக் கூறி, விவசாயிகளைப் பாதுகாத்திட வலியுறுத்தி 20-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.

மன்னார்குடி அருகே உள்ள பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்.ஆர். கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சேந்தமங்கலம், விக்கிரபாண்டியம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளைக் கொண்டு 25 பேர் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன் முன்வைத்த முக்கிய அம்சங்கள்:

ஆசியாவிலேயே மிக அடர்த்தியான ஹைட்ரோ கார்பன் எரிவாயு கொண்டதாகக் கருதப்படும் பெரியகுடி கிணற்றை மீண்டும் திறக்க ஓஎன்ஜிசி மறைமுகமாக முயல்கிறது. ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தைபோல இங்கும் விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவே பேரழிவை சந்திக்கும். ஓ.என்.ஜி.சி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 2022-ல் நியமிக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழுவின் அறிக்கையை தமிழக அரசு இதுவரை வெளியிடாதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2020-ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மறைமுக நடவடிக்கைகளுக்குத் துணை போவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக அரசு உடனடியாக இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 20-ல் பெரியகுடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம். தொடர்ந்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் தெய்வமணி, சேகர், செல்வராஜ், சங்கர் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/publish-sultan-ismail-report-farmers-to-hold-massive-hunger-strike-against-hydrocarbon-on-jan-20-10982955