திங்கள், 9 மார்ச், 2026

அண்ணா பல்கலை. முதுகலை மாணவர்களுக்கு நற்செய்தி - செமஸ்டருக்கு ரூ. 60,000 கல்வி உதவித்தொகைத் திட்டம்

 Anna University xx

Anna University PG Scholarship Application 2026

Anna University PG Scholarship Academic Year 2026-27: அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்புகளில் (ME, MTech, MArch மற்றும் MPlan) சேரும் சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2026-27 கல்வியாண்டு முதல் புதிய கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தகுதியான 400 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தலா 60,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு செமஸ்டருக்கும் வழங்கப்படும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி  இது குறித்துப் பேசிய பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் வி. குமரேன், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் தரம் வாய்ந்த மாணவர்களை ஈடுபடுத்தவும், பல்கலைக்கழகத் துறைகளில் சேர முதலிடம் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்தார். இந்த உதவித்தொகை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) வழங்கும் 'கேட்' (GATE) உதவித்தொகைக்கு இணையாக இருக்கும். இதன் மூலம் ஒரு முதுகலை மாணவர் மாதத்திற்கு 12,400 ரூபாய் பெறுவதற்குச் சமமான நிதி உதவியைப் பெறுவார்.

முன்பு சில முதுகலை படிப்புகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்த சூழலை மாற்றவும், அரசு நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீடா - பி.ஜி(CEETA-PG) தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என மொத்தம் 800 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. NIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களும் இந்த ஆண்டு சீடா - பி.ஜி(CEETA-PG) தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே போன்ற உதவித்தொகைத் திட்டத்தை அரசுப் பொறியியல் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டு வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான டான்செட் மற்றும் சீடா - பி.ஜி (CEETA-PG) நுழைவுத் தேர்வுகள் மே மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். தேர்வு முடிந்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வுக்குப் பிறகு ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ பயில விரும்புவோர் டான்செட் தேர்வையும், பொறியியல் தொடர்பான முதுகலை படிப்புகளில் சேர விரும்புவோர் CEETA-PG தேர்வையும் எழுத வேண்டும். கடந்த ஆண்டு இத்தேர்வுகளை சுமார் 35,323 மாணவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 275 ஆராய்ச்சியாளர்களுக்குத் தலா 40,000 ரூபாய் மாதந்தோறும் வழங்கும் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி, ஏ.சி.டெக் மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி ஆகிய நான்கு வளாகங்களில் உள்ள 1,100 முதுகலை இடங்களுக்கான தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.



source https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-to-launch-new-scholarship-program-for-postgraduate-students-11187198