/indian-express-tamil/media/media_files/2025/10/22/neet-ug-2026-exam-date-2025-10-22-13-42-23.jpg)
NEET 2026 Application NTA Server Down
2026-27-ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு என அனைத்திற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளை (மார்ச் 8) என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதள சர்வர் (Server) கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இதனால், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முயலும் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடரும் சிக்கல்கள்: பதற்றத்தில் மாணவர்கள்
இணையதளம் மிக மெதுவாகச் செயல்படுவது, ஆவணங்களைப் பதிவேற்றும் போது தளம் தானாகவே முடங்குவது மற்றும் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் தொழில்நுட்பப் பிழைகள் எனப் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாகத் தவித்து வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய மாணவர்கள், "கடைசி நேரத்தில் ஏற்படும் இந்தத் தொழில்நுட்பத் தடை எங்கள் ஓராண்டு உழைப்பையே வீணடித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது" என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் அவகாசம் கோரி முறையீடு
இது மாணவர்களின் தவறல்ல, நிர்வாக ரீதியான தொழில்நுட்பக் குறைபாடு என்பதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை உடனடியாக நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு மத்தியிலும், தேர்விற்கான ஆயத்தப் பணிகள் மறுபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 180 வினாக்கள் கேட்கப்படும்.
உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்): 360 மதிப்பெண்கள்.
இயற்பியல்: 180 மதிப்பெண்கள்.
வேதியியல்: 180 மதிப்பெண்கள்.
ஒவ்வொரு சரியான வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான விரிவான பாடத்திட்டங்கள் (nmc.org.in) இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-2026-application-nta-server-down-neet-exam-registration-deadline-mbbs-bds-admission-2026-neet-exam-date-may-3-11182925





