திங்கள், 14 செப்டம்பர், 2026

டெல்லி பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள்

 

Prime-Minister-Narendra-Modi-addresses-a-session-on-the-second-day-of-the-BRICS-Summit-in-New-Delhi

எழுதியவர்:சுபஜித் ராய்

ஒரு குறுகிய கால போர் நிறுத்த வாய்ப்பு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், சீனா மற்றும் ரஷ்யாவின் தலையீடு, எகிப்து மற்றும் பிரேசிலின் ஆதரவு, மேலும் ஜெனீவா, வாஷிங்டன், பெய்ஜிங் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற முக்கிய தளங்களில் பணியாற்றிய அனுபவமிக்க இந்திய தூதர்களின் கிட்டத்தட்ட 100 மணி நேர தீவிர பேச்சுவார்த்தைகள் இவை அனைத்தும் ஒன்றிணைந்ததன் விளைவாக, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டறிக்கையில்  சிக்கலான ஒருமித்த கருத்து உருவானது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பேசியதன் அடிப்படையில், இந்த ஒருமித்த கருத்து உருவான விதம் குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனம் விரிவாகத் தொகுத்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் உச்சத் தலைவர் அலி கமேனியை கொன்றதற்கு 17 நாட்களுக்கு முன்பே இந்தப் பயணம் தொடங்கியது.

பிப்ரவரி 9 முதல் 11-ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற்ற முதல் பிரிக்ஸ் ஷெர்பாஸ் கூட்டத்தில்தான், இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பின் முன்னுரிமைகள் வகுக்கப்பட்டன. ஆனால், பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதும், இதுவரை பின்பற்றப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் நடைமுறையில் கைவிடப்பட்டன.

மே 11 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாவது ஷெர்பாஸ் கூட்டத்தில், நிலைமையில் “மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக” ஒரு தூதர் தெரிவித்தார். குறிப்பாக, “ஈரானியர்களும் எமிரேட்ஸ் பிரதிநிதிகளும்” ஒரு கருத்தில் ஒன்றிணைய முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக அவர் கூறினார். அதற்கடுத்த சில நாட்களில், மே 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் மேற்கு ஆசியா தொடர்பாக உறுப்பினர்கள் மத்தியில் “மாறுபட்ட கருத்துகள்” நிலவுவதாகவும், ஒவ்வொரு நாடும் தங்களது “தேசிய நிலைப்பாடுகளை” வெளிப்படுத்தியதாகவும் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய முடிந்தது. அதற்கு மேல் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து இந்தியக் குழு தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியது. பிரிக்ஸ் ஷெர்பா சுதாகர் தலேலா, சோஸ் ஷெர்பா ஷம்பு லிங்கப்பா ஹக்கி, இணைச் செயலாளர்கள் ராஜீவ் போட்வாடே, டாக்டர் பாசிர் அகமது மற்றும் இயக்குநர் மினி தேவி குமம் ஆகியோருடன் இணைந்து, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளத் தொடங்கினார்.

இதில் சுதாகர் தலேலாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பான அனுபவமும், ஷம்பு ஹக்கியின் சீனாவில் பணியாற்றிய அனுபவம் மற்றும் மாண்டரின் மொழிப் புலமையும் முக்கிய பங்காற்றின. இவர்களுக்கு பின்னால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பலதரப்பு பொருளாதார உறவுகள் (MER) பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளின் விரிவான அனுபவமும் இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்தம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைவதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கியது. இந்திய அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்புகொண்டு, பிரிக்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர்.

மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டின் ஆட்சியாளர் முகமது பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜூன் 22-ம் தேதி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோதும், இந்த ஒருமித்த கருத்து உருவாக்கும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஜூன் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின்போது தனது சக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டார்.

Prime-Minister-Narendra-Modi-addresses-a-session-on-the-second-day-of-the-BRICS-Summit-in-New-Delhi-Sunday
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் உரையாற்றினார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் மற்றும் ஈரானுக்கான இந்தியத் தூதர் ருத்ர கௌரவ் ஸ்ரேஷ்த் ஆகியோரிடம் தங்களது தலைநகரங்களை அணுகி, பேச்சுவார்த்தைக்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்தபடியே, இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாடுகளை மேலும் கடுமையாக்கினர். தங்களது எல்லைக்கோடுகளையும், ஏற்றுக்கொள்ள முடியாத அம்சங்களையும் இரு தரப்பும் தெளிவாக வகுத்துக் கொண்டன.

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றது, ஈரான் அதிபர் பெசெஷ்கியானை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் 2024-ம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக இணைந்த நாடுகள் என்பதால், இந்தக் குழு ஒருமித்த கருத்தை எட்டத் தவறினால் அது ஈரானுக்கு சாதகமாக இருக்காது என்று பெசெஷ்கியானிடம் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால், அது “வெற்றிகரமான” உச்சி மாநாடாக அமைய அவர் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஈரான் நாட்டின் ஷெர்பாவுடன் சுதாகர் தலேலாவின் குழு ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளத்தை அமைத்திருந்தது. இருப்பினும், இந்த விவகாரம் தலைவர்கள் மட்டத்திலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று தெஹ்ரான் விரும்பியது. ஈரான் அதிபரின் குழுவினர், அந்நாட்டின் உயர்மட்ட தலைமைத்துவத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் பதிலளிப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக, போர்க்காலத்தில் வெளிநாட்டு மற்றும் மூலோபாயக் கொள்கைகள் தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் கருத்து மிகவும் முக்கியமானதாக இருந்தது.

சில நாட்களுக்குள் தெஹ்ரான் பதிலளித்தது. அமெரிக்கர்களால் தொடங்கப்பட்ட போருக்குத் தாங்கள் காரணம் எனக் குற்றம்சாட்டப்படக் கூடாது என்பதால், இந்த விவகாரத்தில் தங்களது தரப்பிலிருந்து கூடுதல் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்தது. இதுவே முதல் முக்கிய முன்னேற்றமாக அமைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டாத ஐக்கிய அரபு அமீரகத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கும் வேகம் கிடைத்தது.

இறுதி நாட்களில் ஷெர்பாக்கள் இரவு பகலாகப் பணியாற்றினர். டெல்லியில் ஒரு திரையில் கூட்டறிக்கையின் வாக்கியங்களும் பத்திகளும் காட்டப்பட்டு, அவற்றில் இடம்பெற வேண்டிய சொற்கள் மற்றும் கருத்துகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விவாதித்தனர். மாற்றங்கள் செய்யப்பட்டன; சில பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன; சில ஏற்றுக்கொள்ளப்பட்டன. அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்து கிடைக்காத வாக்கியங்கள் சதுர அடைப்புக்குறிக்குள் வைக்கப்பட்டன. பின்னர் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அவை நீக்கப்பட்டன.

இந்த ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான அம்சமாக இருந்தது அமெரிக்கா அல்லது ஈரான் ஆகிய எந்த நாட்டின் பெயரும் கூட்டறிக்கையில் நேரடியாக இடம்பெறக்கூடாது என்பதுதான். இறுதி கட்டத்தில் சீனாவும் ரஷ்யாவும் தலையிட்டன. இரு தரப்பையும் சமரசத்துக்கு அழைத்து வருவதில் பிரேசிலும் எகிப்தும் ஆதரவான பங்காற்றின. “ஈரானியர்கள் சமரசத்துக்கு வந்துவிட்டனர். ஆனால், சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் அந்த வார்த்தை வடிவமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தின” என்று ஒரு தூதர் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலாக, பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் எந்தக் கூட்டறிக்கையும் வெளியிடப்படாமல் போகும் அபாயமும் நீடித்தது. “அவ்வாறு நடந்திருந்தால், அது மேற்கத்திய நாடுகளால் ஒரு தோல்வியாக சித்தரிக்கப்பட்டிருக்கும். எனவே, கூட்டறிக்கை வெளியிடப்படுவது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் நலனாக இருந்தது. அவர்களை சம்மதிக்க வைப்பதில் சீனாவும் ரஷ்யாவும் முக்கிய பங்காற்றின” என்று அந்தத் தூதர் கூறினார்.

இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, கூட்டறிக்கையின் 28-வது பத்தி உருவானது:

மத்திய கிழக்கு/மேற்கு ஆசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறோம். ஒவ்வொரு நாட்டின் தேசிய நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டு, அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.”

ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானும் ஏற்றுக்கொண்ட இந்தக் கூட்டறிக்கை, இரு தரப்பினரின் உணர்வுப்பூர்வமான நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, பிராந்திய நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவை அதில் இடம்பெற்றன. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தை கருத்தில் கொண்டும் இந்த அம்சம் சேர்க்கப்பட்டது. 

அமெரிக்காவின் பிரதிநிதியாக ஐக்கிய அரபு அமீரகம் செயல்படுவதாக ஈரான் குற்றம்சாட்டி வந்தது. “ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முழுமையாகவும் ஒன்றோடொன்றும் தொடர்புடைய வகையிலும் இணங்க, பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இதில் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதும் அடங்கும்.

நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் வகையில், நீண்டகால புரிதலை உருவாக்குவதற்கான முயற்சிகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் அதிகரிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். பொருந்தக்கூடிய சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தியின் சீரான ஓட்டத்தைப் பேணுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டைப் போல பெரிய செயலகம் இல்லை

2023 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஜி20 கூட்டறிக்கையைப் போல, இந்த முறை புதுடெல்லியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பெரிய செயலகம் எதுவும் இல்லை. அப்போது, ஜி20 ஷெர்பாவாக இருந்த முன்னாள் அதிகாரி அமிதாப் காந்த், செயலகத்துக்கு நியமிக்கப்பட்ட உயர்மட்ட தூதர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

ஆனால், இந்த முறை பேச்சுவார்த்தைக் குழு பெரும்பாலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பலதரப்பு பொருளாதார உறவுகள் (MER) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டதாக இருந்தது. இந்தப் பிரிவுக்கு பொருளாதார உறவுகள் செயலாளரான சுதாகர் தலேலா தலைமை வகித்தார். 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரிவில் 12 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்த நிலையில், ஐந்து பேர் முக்கியப் பங்காற்றினர்.

சுதாகர் தலேலா, பிரிக்ஸ் ஷெர்பா

Dalela
இந்தியாவின் பிரிக்ஸ் ஷெர்பா சுதாகர் தலெலா

1993-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான சுதாகர் தலேலா, தனது தூதரகப் பணியை டெல் அவிவில் தொடங்கினார். அவருக்கு ஹீப்ரு மொழியிலும் புலமை உள்ளது. பிரேசிலியா, சிகாகோ, டாக்கா, ஜெனீவா, திம்பு மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். 2022 முதல் 2025 வரை பூடானுக்கான இந்தியத் தூதராகவும் இருந்தார்.

2009 முதல் 2011 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றிய அவர், வர்த்தகக் கொள்கை இயக்குநராகவும் இருந்துள்ளார். இந்தியாவின் உலக வர்த்தக அமைப்புக்கான நிரந்தரத் தூதரகத்திலும் இரண்டு முறை பணியாற்றியுள்ளார். அதில் 2014 முதல் 2016 வரை துணை நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.
அமெரிக்காவில் சிகாகோவில் இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதராகவும், 2011 முதல் 2014 வரை அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சராகவும், 2020 முதல் 2022 வரை துணைத் தூதரகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஷம்பு லிங்கப்பா ஹக்கி, சோஸ் ஷெர்பா மற்றும் இணைச் செயலாளர் (MER & G20):

Shambukki
சௌஸ் ஷெர்பா ஷம்பு லிங்கப்பா ஹக்கி.

2008-ம் ஆண்டு வெளியுறவுப் பணியில் இணைந்த தொழில்முறை தூதரான ஷம்பு லிங்கப்பா ஹக்கி, 2021 முதல் 2025 வரை குவாங்சோவில் இந்தியாவின் தலைமைத் துணைத் தூதராகப் பணியாற்றினார். பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனிலும் பணியாற்றியுள்ளார். மாண்டரின் மொழியில் புலமை பெற்றுள்ள அவர், பல்வேறு ராகங்களைப் பாடும் தனது 60-க்கும் மேற்பட்ட காணொளிகளைக் கொண்ட யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

டாக்டர் பாசிர் அகமது, இணைச் செயலாளர், MER பிரிவு:

Basir
டாக்டர் பசிர் அகமது,

2009-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த டாக்டர் பாசிர் அகமது, மருத்துவப் பயிற்சி பெற்றவர். இந்தோனேசியாவில் இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதரகத் தலைவராகப் பணியாற்றியதுடன், ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

ராஜீவ் போட்வாடே, இணைச் செயலாளர், MER பிரிவு:

Bodwade
இணை செயலாளர்கள் ராஜீவ் போட்வாடே

2009-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த ராஜீவ் போட்வாடே, அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் இஸ்ரேலில் இந்தியத் தூதரகத்தின் துணைத் தலைவராக இருந்தார். டெல்லியில் துணை நெறிமுறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மினி தேவி குமம், இயக்குநர், MER பிரிவு:

Kumam-Devi
மினி தேவி குமம்

2011-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த மினி தேவி குமம், வியட்நாமிலும் ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார். தனது யூடியூப் சேனலில் ஷம்பு ஹக்கி, “இந்துஸ்தானி பாரம்பரிய இசையைப் பயிலும் ஒருவராக, அனைத்து தடைகளையும் கடந்து செல்லும் உலகளாவிய மொழியான இசையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. நான் உருவாக்கும் இசையின் வேர்கள் இந்திய பாரம்பரிய இசையில் இருந்தாலும், மேற்கத்திய இசையின் சில அம்சங்களையும் அது உள்வாங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில், தடைகளைத் தாண்டி பொதுவான ஒரு மொழியில் ஒருமித்த கருத்தை உருவாக்கிய இந்த முயற்சியே, சரியான ராஜதந்திர இசையை உருவாக்கியது.

13 09 2026 


source https://tamil.indianexpress.com/india/brics-summit-declaration-iran-uae-consensus-india-diplomacy-12529814