/indian-express-tamil/media/media_files/2026/09/14/tiruppur-2026-09-14-09-21-29.jpg)
எழுதியவர்:அசோக் குலாட்டி , சுலக்ஷனா ராவ்
சுதந்திர தினத்தில் செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை ‘வளர்ந்த பாரதம்’ என்ற நிலைக்கு கொண்டு செல்லும் ஏழு ‘சப்ததாரா’ பாதைகளில் முதன்மையானதாக ‘உற்பத்தி சக்தியை’ குறிப்பிட்டார். இந்த முயற்சியின் மூலம் இந்திய இளைஞர்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், உண்மையில் இந்தியாவுக்குத் தேவையான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய உற்பத்தித் துறை எது என்பதுதான் தற்போது எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது. .
இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) மேற்கொண்ட ஆய்வுகள், ஜவுளி மற்றும் ஆடைத் துறை (T&A) இதற்கான முக்கிய வாய்ப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினால், அந்த வளர்ச்சிக்கு பெரிய அர்த்தம் இருக்காது. அதிலும் குறிப்பாக, முறைசார்ந்த துறையில் (Formal Sector) வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும். 2025ஆம் ஆண்டில், 15 வயதுக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 61.6 கோடியாக இருந்தது. ஆனால், இவர்களில் 43 சதவீதம் பேர் இன்னும் விவசாயத் துறையிலேயே பணியாற்றி வந்தனர்.
அதே நேரத்தில், உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களின் விகிதம் வெறும் 12.1 சதவீதமாக இருந்தது என 2025ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் படை ஆய்வு (PLFS) தெரிவிக்கிறது. விவசாயத்தில் இருந்து உற்பத்தித் துறைக்கு வேலைவாய்ப்பில் வெறும் 1 சதவீத புள்ளி அளவுக்கான மாற்றம் ஏற்பட்டால்கூட, மிகப்பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேறு துறைக்கு மாற்ற வேண்டியிருக்கும். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறை நிலைமை அந்த இலக்குக்கு வெகு தொலைவில் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர் போராட்டங்களும் இதன் அடிப்படையில் நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்தின. ‘மூன்று ஆர்’கள் எனப்படும் அடிப்படை கல்வித் திறன்களைப் பெற்ற பிறகும், முறைசார்ந்த துறையில் மரியாதைக்குரிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 9.9 சதவீதமாக இருந்தது. நகர்ப்புறங்களில் இது 13.6 சதவீதமாக உயர்ந்தது.
மேலும், 25 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் அல்லது தொழிற்பயிற்சியிலும் ஈடுபடாமல் இருந்தனர். ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 79.1 சதவீதமாக இருந்த நிலையில், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 40 சதவீதமாக மட்டுமே இருந்தது. இந்தியாவின் தொழிலாளர் படையில் கணிசமான பகுதியினர் இன்னும் முறைசாரா வேலைவாய்ப்புகளில் உள்ளனர். இதனால், முறைசார்ந்த வேலைகளில் கிடைக்கும் வேலைநிலைத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை.
பி.எல்.எப்.எஸ் (PLFS)-ன் வழக்கமான நிலை (Usual Status) அடிப்படையிலான கணக்கீட்டில், ஆண்டின் நீண்ட காலப்பகுதியில் பணிபுரிந்தவர்களும், அந்த ஆண்டில் குறைந்தபட்சம் 30 நாட்கள் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் ‘வேலைவாய்ப்பில் உள்ளவர்கள்’ எனக் கணக்கிடப்படுகின்றனர். எனவே, ஒருவர் ‘வேலைவாய்ப்பில் உள்ளவர்’ எனக் கணக்கிடப்படுவது, அவருக்கு வழக்கமான அல்லது முறைசார்ந்த வேலை இருக்கிறது என்று அவசியம் பொருள்படாது.
தொழிலாளர்கள் பொருளாதாரப் பாதுகாப்பையும் எதிர்காலச் சவால்களை சமாளிக்கும் திறனையும் பெற வேண்டுமெனில், வேலைவாய்ப்பு முறைசாரா நிலையிலிருந்து முறைசார்ந்த, நிரந்தரமான வேலைவாய்ப்புகளுக்கு மாற வேண்டும். இதனுடன் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் மாநிலக் காப்பீடு (ESI) போன்ற சமூகப் பாதுகாப்பு நலன்களும் கிடைக்க வேண்டும். இதில்தான் ஆடைத் துறையின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
ஆடை உற்பத்தித் துறை அதிக அளவில் தொழிலாளர்களைத் தேவைப்படுத்தும் துறையாகும். குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், குறிப்பிட்ட உற்பத்திப் பணிகளுக்குத் தேவையான திறன்களை தொழிலாளர்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே, அதாவது சுமார் 60 நாட்களில், பயிற்சி அளிக்க முடியும்.
2030ஆம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இந்தியா லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது இது 36 பில்லியன் டாலராக உள்ளது. இதில் ஆடை ஏற்றுமதிக்கு மட்டும் 40 பில்லியன் டாலர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆடை ஏற்றுமதி 15.7 பில்லியன் டாலராக உள்ளது.
ஆனால், ஏற்றுமதியாளர்களுடனான எங்களது கலந்துரையாடல்கள், இந்த இலக்குகள் தற்போதைய நிலவரங்களை முழுமையாக அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன. இந்த இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டுவதைவிட, 2035ஆம் ஆண்டில் எட்டுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இந்தியாவுக்கு சாதகமான ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து போன்ற முக்கிய சந்தைகளில் வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளுடன் இருந்த சுங்க வரி வித்தியாசத்தை இந்தியா சமீபத்தில் குறைத்துள்ளது. ஆனால், சந்தை அணுகல் மட்டுமே ஏற்றுமதியை உறுதி செய்யாது. இதற்கு இந்தியா-ஜப்பான் வர்த்தக ஒப்பந்தத்தை (2011) ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
ஜப்பானுக்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி 2013ஆம் ஆண்டில் 229 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டில் அது 203 மில்லியன் டாலராகக் குறைந்தது. எனவே, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அளவு உற்பத்தித் திறனும் கட்டமைப்புத் திறனும் இந்தியாவிடம் இருக்க வேண்டும். இதற்கான தீர்வு அதிகமான தொழிற்சாலைகளை உருவாக்குவது மட்டுமல்ல; அவற்றைச் சுற்றி போட்டித்திறன் மிக்க முழுமையான உற்பத்திச் சூழலை உருவாக்குவதுதான்.
இயற்கையாக வளர்ந்த பின்னலாடைத் தொழில் மையமான திருப்பூர், இதற்கான மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி 2020-21ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-25ஆம் ஆண்டில் 5.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் மட்டும் சுமார் 68 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மேலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்தத் தொழில் மையம் ஆதரவாக உள்ளது. இவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பெண்கள்.
சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நூல் உற்பத்தி, பின்னல், சாயமிடுதல், அச்சிடுதல், தையல், இறுதிப்பணி, பேக்கிங் மற்றும் பொருட்களை அனுப்புதல் என முழு உற்பத்திச் சங்கிலியும் ஒருங்கிணைந்த ஓர் உற்பத்திச் சூழலாக இயங்கி வருகிறது. பின்னல், சாயமிடுதல், அச்சிடுதல், ஆடைத் தயாரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைத் தொழில்கள் என பல்வேறு கட்டங்களில் சுமார் 20,000 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதுவே ‘சூழல் விளைவு’ (Ecosystem Effect) எனப்படுகிறது. நிறுவனங்கள் தங்களுக்கான குறிப்பிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெறுகின்றன. தொழிலாளர்களும் குறிப்பிட்ட பணிகளில் திறன் பெறுகின்றனர். இதன் மூலம் ஒரே பொதுவான சந்தையைச் சுற்றி ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. பல தசாப்தங்களாக தொழில்முனைவோர், தொழில் அமைப்புகள் மற்றும் அரசு இணைந்து செயல்பட்டு, இந்த உற்பத்திச் சூழல் வளர்வதற்குத் தேவையான நிறுவன அமைப்புகளையும் பொதுவான உள்கட்டமைப்புகளையும் உருவாக்கினர்.
ஏ. சக்திவேல் தலைமையிலான திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் (TEA), தென்னிந்திய ஹோசியரி உற்பத்தியாளர்கள் சங்கமும் கூட்டுத் திறன்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின. அதேபோல், நேதாஜி அப்பேரல் பூங்கா போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் திருப்பூரின் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தன.
சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்வதில் திருப்பூரின் கூட்டு வலிமை தெளிவாக வெளிப்பட்டது. பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றம் (ZLD) விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய தொழிற்சாலைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை உருவாக்க இந்தத் தொழில் மையம் ரூ.850 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தது.
அடுத்த 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதையும் திருப்பூர் எடுத்துக்காட்டுகிறது. ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பூர் தொழில் மையம் பெரிதும் சார்ந்துள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், அவர்களை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்வதும் முக்கியமான சவால்களாக உள்ளன.
மேலும், ஏற்றுமதியையும் வேலைவாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் நோக்கில் மனிதனால் உருவாக்கப்படும் நார்கள் (Man-made Fibres), தொழில்நுட்ப ஜவுளிகள் (Technical Textiles) மற்றும் அதிக மதிப்பு கொண்ட நிலையான உற்பத்தித் துறைகளில் நுழைய திருப்பூர் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு மேலும் பல திருப்பூர்கள் தேவை. ஆனால், 2030ஆம் ஆண்டுக்குள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை திருப்பூர் மட்டுமே எட்டித் தர முடியாது. இதுபோன்ற மேலும் பல தொழில் மையங்களை இந்தியா உருவாக்க வேண்டும். இதற்கான சில கொள்கை நடவடிக்கைகளை அரசு 2021ஆம் ஆண்டிலேயே மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக ஏழு பி.எம். மித்ரா (PM MITRA) ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அவற்றில் ஒன்று மட்டுமே, அதாவது வாரங்கல் பூங்கா, செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. மற்ற பூங்காக்கள் இன்னும் திட்டமிடும் நிலையிலேயே உள்ளன. நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில்கூட இத்தகைய மெதுவான வேகம் நீடித்தால், 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டும் என்ற நம்பிக்கை குறையும். அதேபோல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வேகமும் பாதிக்கப்படும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 கோடி அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமெனில், பிரதமர் இந்தத் துறைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது பணிவான கருத்தாகும். சிப் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை. ஆனால், இத்துறைகளுக்கு அதிக திறன் கொண்ட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர் படை தற்போது குறைந்த திறன் கொண்ட வேலைவாய்ப்பு பிரிவில் உள்ளது. இதனால், ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய துறையாக ஜவுளி மற்றும் ஆடைத் துறை விளங்குகிறது.
சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தப் பாதையைப் பின்பற்றியுள்ளன. இந்தியாவும் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கின் உண்மையான சோதனை, போதுமான அளவில் உற்பத்தித்திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமா என்பதில்தான் உள்ளது. ஜவுளி மற்றும் ஆடைத் துறை இதற்கான தெளிவான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குகிறது. ஆனால், இந்தத் துறையின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த பிரதமரின் நேரடி மற்றும் சிறப்பு கவனம் அவசியமாகிறது.
source https://tamil.indianexpress.com/india/a-blueprint-to-create-productive-jobs-a-lesson-from-tiruppur-12529957





