திங்கள், 29 டிசம்பர், 2014

கனவில் நடந்த கொலை !.



قد قال سافر لامرء ابيل *لمنعه الحماد عن رحيل

لما راى من قتله الوبيل *فانني لكم ذو زعامة

قصار ذاك القتل فى المنام *والنهب نسي ماله القوام

بما دعى الله على اهتمام *مقدار عين كاشف الندامة

ஒரு மனிதர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவார் என்பதை அறிந்த ஹம்மாத் அம்மனிதரைப் பயணம் செய்வதை விட்டும் தடுத்தார். அப்போது அப்துல் காதிர் ஜீலானி பொறுப்பாளர் என அம்மனிதர் கூறினார். இதன் பிறகு அப்துல் காதிர் ஜீலானி முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்விடம் துஆச் செய்ததால் அம்மனிதர் கொல்லப்படுதல் கனவு மூலமும், கொள்ளையடிக்கப்படுதல் அவர் பொருளை மறப்பதன் மூலமும் நிறைவேறியது.

முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்படும் இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் பகுதியில் கூறப்படுவதையும் அறிந்து விட்டு இதை அலசுவோம்.

எழுநூறு தங்கக் காசுகள் பொறுமானமுள்ள பொருட்களை சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக கொண்டு செல்ல நாடுகிறேன் என்று அபுல் முளப்பர் என்பார் ஹம்மாத் எனும் பெரியாடம் கூறினார். அதற்கு ஹம்மாத் அவ்வாறு செய்யாதே. நீ பயணம் செய்தால் கொல்லப்படுவாய். உன் உடமைகள் பறிக்கப்படும் எனக் கூறினார். (இதைக் கேட்டு) மனம் உடைந்தவராக அபுல் முளப்பர் வெளியே வந்தார். அவரை அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வழியில் கண்டார்கள். ஹம்மாத் கூறியதை அபுல் முளப்பர் விளக்கினார்கள். அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ பயணம் செய். எவ்வித இடையூறுமின்றி புறப்பட்டு இலாபத்துடன் திரும்பி வருவாய். உன் உயிரையும், உடமைகளையும் பாதுகாப்பது என் பொறுப்பு என்று கூறினார்கள். உடனே அபுல் முளப்பர் புறப்பட்டார். தமது பொருட்களை ஆயிரம் தங்கக் காசுகளுக்கு விற்றார். ஒரு நாள் மல ஜலம் கழிக்கச் சென்ற அவர் பணப்பையை மறதியாக வைத்து விட்டார். தமது கூடாரத்தை அடைந்ததும் அவருக்குத் தூக்கம் மேலிட்டது. வணிகக் கூட்டத்துடன் அவர் செல்லும் போது கொள்ளைக் கூட்டம் ஒன்று வழிமறித்து அவரையும், வணிகக் கூட்டத்தையும் தாக்கி வணிகக் கூட்டத்தினர் உடைமைகளையும் பறித்துக் கொண்டது போல் கனவு கண்டார். உடனே விழித்துப் பார்த்ததும் தமது கழுத்தில் இரத்தக் கறையைப் பார்த்தார். கடுமையான வேதனையையும் உணர்ந்தார். உடனே தங்கக் காசு நினைவுக்கு வந்தது. அதைத் தேடிய போது அவர் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.பின்னர் பாக்தாத் வந்தார். பெரியவரான ஹம்மாதை முதலில் சந்திப்பதாசொன்ன சொல்லைக் காப்பாற்றிய அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திப்பதாஎன்று குழம்பினார். அப்போது வழியில் பெரியார் ஹம்மாதைக் கண்டார். அவரிடம் அபுல் முளப்பரே பெரியார் அப்துல் காதிரை முதலில் சந்திப்பீராக.! ஏனெனில் அவர் உனக்காகப் பதினேழு தடவை அல்லாஹ்விடம் துஆச் செய்தார். உமக்கு எழுதப்பட்ட விதியை மாற்ற எழுபது தடவைகள் துஆச் செய்தார். நீ கொல்லப்பட வேண்டும் என்ற விதி கனவில் கொல்லப்பட்டதன் மூலம் நடந்தேறியது. உமது உடமைகள் பறிக்கப்படுவது என்ற விதி உடமையை நீ மறந்து வைத்ததன் மூலம் நடந்தேறியது எனக் கூறினார். இதை அபூமஸ்வூத் அறிவிக்கிறார்.

அல்லாஹ்வை மறக்கடிக்கச் செய்து அல்லாஹ்வின் ஆற்றலைக் குறைத்து அப்துல் காதிரையும், ஹம்மாதையும் அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்குவதே இந்தக் கவிதையின் நோக்கம் என்பது இந்த ஹிகாயத்திலிருந்து புலனாகிறது.

அபுல் முளப்பர் என்பார் பிரயாணம் சென்றால் அவர் கொல்லப்படுவார்அவரது உடமைகள் பறிக்கப்படும் என்ற விபரம் ஹம்மாதுக்கு எப்படித் தெரிந்தது?

எந்த ஆத்மாகவும் தன் மரணத்தையே அறிய முடியாது என்று அல்லாஹ் கூறும் போது

(அல்குர்ஆன் 31:34) இன்னொருவன் மரணம் பற்றி ஹம்மாத் முன்கூட்டியே அறிய முடிந்தது எப்படி?

இது ஹம்மாத் என்பவரை அல்லாஹ்வாக ஆக்கும் விபரீதப் போக்கல்லவாமவ்லிது அபிமானிகள் இதைச் சிந்திக்கட்டும்.

அபுல் முளப்பர் பிரயாணம் செய்வார் என்பதும், அதிலே கொல்லப்படுவார் என்பதும் அல்லாஹ்வின் விதியாக இருந்தால் அதை ஹம்மாத் ஒரு வாதத்துக்காக அறிந்திருந்தால் அந்த விதி நிறைவேறுமாறு விட்டிருக்க வேண்டுமே தவிர அந்த விதியை வெல்லும் வழியைக் கூறியிருக்கக் கூடாது. அபுல் முளப்பர் சாவார் என்ற அல்லாஹ்வின் விதியை ஹம்மாத் அறிந்து கொண்டது மட்டுமின்றி அல்லாஹ்வின் விதியை மாற்றியமைக்கவும் முயன்றுள்ளார். அல்லாஹ் பலவீனமானவனாகவும் ஹம்மாத் பலம் பொருந்தியவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

அவர் கொல்லப்படுவார் என்பது மட்டும் விதியன்று அவர் பயணம் செய்வார் என்பதும் விதி தான். இந்த விதியை வெல்ல முயன்றிருக்கிறார்.

இந்த விதியை அப்துல் காதிர் ஜீலானியும் அறிந்திருக்கிறார். அல்லாஹ்வின் விதி இது தான் என்று தெரிந்திருந்தும் அபுல் முளப்பர் என்பாரிடம் வெற்றிகரமாகத் திரும்பி வருவீர் எனக் கூறி அனுப்புகிறார். இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைத்து மனிதர்களுக்கு மகத்துவத்தை அதிகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி என்பதை நிரூபிக்கின்றது.

அல்லாஹ்விடம் துஆச் செய்து இந்த விதியை மாற்றியமைக்குமாறு அப்துல் காதிர் ஜீலானி துஆச் செய்து தானே விதியை மாற்றினார் என்று யாரும் கூற முடியாது. ஏனெனில் துஆச் செய்வதற்கு முன்பே விதியை மாற்றியமைக்கும் உத்திரவாதத்தை அப்துல் காதிர் ஜீலானி வழங்கி விட்டார். அல்லாஹ்விடம் துஆச் செய்து அதனால் அபுல் முளப்பர் என்பாரின் விதி மாற்றியமைக்கப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். கோமாளித்தனமாக நாடகம் ஒன்றை இதற்காக மவ்லுது எழுதியவர் கற்பனை செய்கிறார்.

கனவில் அவர் கொல்லப்பட்டதாகக் காண்கிறாராம். இதன் மூலம் அவர் கொல்லப்படுவார் என்ற விதி நிறைவேறியதாம். அவர் பணப்பையை மறதியாக ஓரிடத்தில் வைத்து விட்டாராம். இதன் மூலம் உடைமை பறிக்கப்படும் என்ற விதி நிறைவேறியதாம். கனவில் கொல்லப்பட்டதாகக் காண்பது உண்மையில் கொல்லப்பட வேண்டும் என்ற விதிக்கு நிகராகுமா?

ஒரு மனிதன் ஒரு தடவை தான் சாவான் என்பது விதி. கனவில் தாம் செத்ததாக கனவு காண்பவர்கள் பிறகு சாகவே மாட்டார்களாஅபுல் முளப்பர் கனவில் செத்து விட்டதால் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்று கூறப் போகிறார்களா?

அபுல் முளப்பர் கொல்லப்படுவார் என்பது அல்லாஹ்வின் விதியானால் அதை அல்லாஹ் செயல்படுத்தியிருப்பான். அதை மாற்றியமைக்க அல்லாஹ் நாடினால் நேரடியாக அதை மாற்றியமைப்பான். இப்படி நாடகம் நடத்தி யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை.

அபுல் முளப்பர் கொல்லப்படுவார் என்ற விதி என்னவயிற்று என்று யாரோ கேட்டது போலவும் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக கனவில் அதை நிறைவேற்றியது போன்றும் அல்லாஹ் நடந்து கொண்டதாக கற்பனை செய்துள்ளனர்.

இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதுமற்ற முகவரியில்லாத யாரோ அறிவிலி எழுதிய இந்தப் பாட்டைப் படிப்பதால் நன்மை கிடைக்குமாபாவம் சேருமாஅர்த்தம் தெரியாமல் மவ்லிது பக்தியில் கிடப்போர் சிந்திக்கட்டும்.


அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் என்ற பெயரால் புராணங்களைத் தோற்கடிக்கும் அளவுக்குக் கற்பனைக் கதைகளை உருவாக்கி அதையே முஹ்யித்தீன் மவ்லிது என்று அறிமுகம் செய்தனர் என்பதை நிரூபிக்கும் மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...