புதன், 10 டிசம்பர், 2014

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக


பகவத் கீதை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்படும்..
--சுஸ்மா சுவராஜ்--
கீதையை தமிழர்கள் ஏற்கவில்லை. ஏற்கமுடியாது.
--பழ.நெடுமாறன் ---
ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் சுவைட்சர் மருத்துவப் பட்டம் பெற்று ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்களுக்குத் தொண்டு செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். அப்போது அவர் திருக்குறளையும், பகவத் கீதையையும் படிக்க நேர்ந்தது. இந்த இரு நூல்களுக்குமிடையே காணப்பட்ட வேறுபாடுகளை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக அவர் கண்டறிந்தார்.
கீதை ஒரு சமய நூல் என்ற வகையில் ஒரு எல்லைக்குட்பட்டு நிற்பது. எனவே அதை பொது நூலாகக் கருத முடியாது.
குறள் நூலுக்கு சமய எல்லை அறவே இல்லை. அன்பு, அறம் ஆகிய அடித்தளத்தின் மீது அமைந்து மானுடத்தை நேசிக்கும் நூலாகத் திகழ்கிறது. எனவேதான் சமயம், இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து உலக மக்கள் அனைவரும் திருக்குறளை தங்களின் உடைமையாகக் கருதுகிறார்கள்.
கீதை வர்ண சார்பு நலன் நிறைந்த நூல்.
குறள் மக்கள் நலன் சார்ந்த நூல்.
கீதை வேத மரபின் வாரிசு.
குறள் தமிழ் மரபின் விழுமியங்களின் வாரிசு.
கீதை பிராமணியத்தின் சாரம்
குறள் தமிழர் பண்பாட்டின் சாரம்.
கீதை பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு எனக் கற்பிக்கிறது
குறள் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என முழங்குகிறது.
சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், வில்லிப்புத்தூரார் பாரதம், கம்பராமாயணம் உட்பட பல்வேறு நூல்களில் பகவத் கீதையைப் பற்றிய குறிப்போ, அந்நூலின் தாக்கமோ அறவே காணப்படவில்லை என்பது தெளிவான உண்மையாகும்.
சங்க இலக்கியத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டுவரை தோன்றிய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவற்றில் குறளின் தாக்கம் ஆழமாகப் படிந்துள்ளது. தமிழ் இலக்கியங்களில் குறள் ஏற்படுத்திய தாக்கத்தினுக்கு நிகரான தாக்கத்தினை வேறு எந்த நூலும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் குறளின் கருத்தோட்டம் தமிழர்களின் பண்பாட்டுக் கருத்தோட்டமாகும்.
ஆனால், தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரிடையான கருத்துக்கள் கொண்டதும், வேத மரபின் வாரிசுமான கீதையின் தாக்கம் தமிழ் இலக்கியத்தில் படியாதது ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, கீதையை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதுதான் அந்த உண்மையாகும்.
.
(31-08-2014 ஞாயிறு அன்று மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை இரண்டாம் ஆண்டு விழாவில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையிலிருந்து)