كم من رجال بشر النبي *ان الزم الذي هو النقي
الشيخ عبد القادر الرضي *فى العالمين دافع الملامة
துன்பங்களை நீக்கக்கூடிய அகில உலகிலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற தூயவரான பெரியார் அப்துல் காதிரைப் பற்றிப் பிடியுங்கள் என்று எத்தனையோ மனிதர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளனர்.
அப்துல் காதிர் ஜீலானியின் காலத்துக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரைப் பற்றிப் பிடிக்குமாறு எப்படிக் கூறியிருப்பார்கள்?அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் பதவு செய்யப்பட்டிருக்குமே? எந்த ஹதீஸ் நூல்களில் இந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது?என்றெல்லாம் யாரும் விளக்கம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹிகாயத் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றனர்.
நான் சிறுவனாக இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன். அல்லாஹ்வின் வேதம் உங்கள் வழிமுறை இரண்டினடிப்படையில் நான் மரணிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ பைஅத் செய்வதற்கு ஏற்ற பெரியார் அப்துல் காதிர் தாம் என்று கூறினார்கள். மூன்று தடவை இதை நான் கேட்டேன். மூன்று தடவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதே பதிலையே கூறினார்கள். நான் விழித்தவுடன் என் தந்தையிடம் இதைக் கூறினேன். இஸ்லாமியப் பெரியார்களுக்கெல்லாம் பெரியாரைச் சந்திக்கப் புறப்பட்டோம். அவர்கள் உரை நிகழ்த்தத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். மக்கள் நெருக்கத்தினால் அவர்களை நாங்கள் நெருங்க முடியவில்லை. எனவே தொலைவில் தங்கி விட்டோம். அவர்கள் தம் உரையை இடையில் நிறுத்தி அவ்விருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சைகை செய்தார்கள். சிலரது தோள்களில் சுமக்கப்பட்டு அவர்களது ஆசனத்தின் அருகில் கொண்டு செல்லப்பட்டோம். முன்னறிவிப்பின்றி நம்மிடம் வந்திருக்க மாட்டீர்கள் என்று எங்களிடம் கூறிவிட்டு தமது சட்டையை என் தந்தைக்கும் தமது கிரீடத்தை எனக்கும் அணிவித்ததார்கள். இஸ்னாத் (அறிவிப்பாளர் தொடர்) சீட்டை எங்களுக்கு எழுதித் தந்தார்கள் என்று அபுல் ஹஸன் கூறுகிறார்.
இந்த ஹிகாயத்தில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்பதை ஆராய்வோம். அப்துல் காதிர் ஜீலானியிடம் பைஅத் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கட்டளையிட்டதாக இந்தக் கதை கூறுகிறது.
பித்அத்களை உருவாக்கியவர்களும், தமக்கு மக்கள் கூடுதலான மயாதை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறி வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? இது பற்றி மார்க்கம் சொல்வது என்ன என்பது கூட இவர்களுக்குத் தெயவில்லை.
யார் என்னைக் கனவில் காண்கிறாரோ, அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6993
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேலும் அவர்களைக் காண்பார் என்பதன் பொருள் என்ன? விழித்தவுடன் நேரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காண்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இவ்வுலகில் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமே பொருந்தும். நபித்தோழர்கள் தமது கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டால் விழித்த பின் நேரடியாகவும் அவர்களைக் காண்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின்னால் வாழ்ந்து வரும் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நிச்சயமாகக் கனவில் காண முடியாது. கனவில் கண்டால் விழிப்பிலும் காண்பார்கள் என்பது இந்த மக்களுக்குக் கடுகளவும் பொருந்தாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ள யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக கூற மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறும் யாரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.
ஒருவரைக் கனவில் கண்டு அவரைத் தான் கனவில் கண்டோம் என்று உறுதி செய்வதென்றால் அவரை நாம் முன்னரே நேரடியாகப் பார்த்திருப்பது அவசியமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரடியாகப் பார்க்காதவர்கள் கனவில் வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் என்று எப்படி உறுதிப்படுத்திக் கொண்டார்கள்? இதையும் நாம் சிந்திக்க வேண்டும். மார்க்கத்தின் எல்லா அம்சத்தையும் முழுமையாக மக்களுக்கு அறிவித்துத் தரும் பணியைப் பூரணமாக நிறைவேற்றிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று விட்டனர். கனவில் வந்து எதையும் அவர்கள் சொல்லித் தரவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கனவில் இதைக் கூறினார்கள். அதைக் கூறினார்கள் என்றெல்லாம் பல பெரியார்கள்(?) கூறியுள்ளனர். அந்தக் காரியங்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த காரியங்களாக உள்ளன. தாம் உயிரோடு வாழ்ந்த போது தடுத்த காரியங்களை தம் மரணத்திற்குப் பின் கனவில் வந்து அனுமதிப்பார்கள் என்பதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இதிலிருந்து கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்ததாகக் கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம். மக்கள் தங்களைப் பெரியார் என்று நம்பி மதிக்க வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம்.
அப்துல் காதிர் ஜீலானியிடம் சென்று பைஅத் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தடவை வலியுறுத்திக் கூறியதாக கூறப்படுவது மற்றொரு அபத்தமாகும்.
பைஅத் என்றால் உறுதிமொழி எடுத்தல் என்பது பொருள்
ஒருவருடன் மற்றொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம் (பைஅத்) செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது.
ஒரு நிறுவனத்தின் பணிபுரியச் செல்பவர் அந்த நிறுவனத்தினருடன் நான் இந்த நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு விசுவாசமாகப் பணியாற்றுவேன் என்று பைஅத் (உறுதிமொழி) எடுக்கலாம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவர் அந்த நிறுவனத்தின் பணிகள் குறித்து மற்றொரு நிறுவனத்தில் உறுதிமொழி எடுத்தால் அதை முட்டாள்தனம் என்போம்.
தொழுகை, நோன்பு போன்ற பல வணக்க வழிபாட்டு முறைகளை முறையாக நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை. யாரிடம் எடுக்க வேண்டும் என்பது தான் பிரச்சினை. இந்த வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்குச் சொந்தமானவை . அதை நிறைவேற்றுவதன் பயனையும் நிறைவேற்றாவிட்டால் ஏற்படும் தண்டனையையும் இறைவன் தான் வழங்குவான்.
நிச்சயமாக துய இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.
(அல்குர்ஆன் 39:3)
மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது என்பதால் மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக நிறைவேற்றுவேன் என்று இறைவனிடம் தான் பைஅத் செய்ய வேண்டும். இந்த வணக்கங்களை நம்மைப் போலவே நிறைவேற்றக் கடமைப்பட்ட ஒருவரிடம் இந்த வணக்கங்களுக்கான கூலியைத் தர முடியாத ஒருவரிடம் இவற்றை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கும் உரிமையில்லாத ஒருவரிடம் இந்த வணக்கங்கள் பற்றி நம்மைப் போலவே இறைவனால் விசாரிக்கப்படும் நிலையிலுள்ள ஒருவரிடம் இது பற்றி உறுதி மொழி எடுப்பது அபத்தமானதாகும். அவரை அல்லாஹ்வுக்குச் சமமமாக கருதுவதுமாகும்
ஒருவர் சம்பந்தப்பட்ட . பைஅத் உறுதிமொழியை அவரால் நியமிக்கப்பட்ட அவரது தூதரிடம் எடுக்கலாம். இதை யாரும் அபத்தமாகக் கருத மாட்டார்கள். ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் அந்தந்த நாட்டு ஆட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட தூதர்கள் கையொழுத்திடுவதை நாம் பாக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதராக இருப்பதால் அல்லாஹ்வுக்குச் சொந்தமான விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பைஅத் செய்யலாம். பைஅத் வியாபாரம் செய்யும் பெரியார்கள்(?) இறைவன் சம்பந்தப்பட்ட காரியங்களில் உறுதிமொழி பெற எந்த அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர்களுமல்லர். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் செய்த உடன்படிக்கையை ஆதாரமாகக் கொண்டு தங்களின் பைஅத் வியாபாரத்தை நியாயப்படுத்தினால் அவர்கள் தங்களை இறைவனின் தூதர்களாகவும் இறைவன் சார்பாக உறுதிமொழி பெற அதிகாரம் வழங்கப்பட்டவர்களாகவும் கருதுகின்றார்கள் என்பதே பொருள்.
உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
(அல்குர்ஆன் 48:10)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செய்த உறுதிமொழியைத் தன்னிடம் செய்து கொள்ளும் உறுதிமொழியாக இறைவன் அங்கீகரிப்பதற்கு இவ்வசனமே சான்று.
ஒருவர் கனவு கண்டால் அதை மற்ற எவராலும் அறிந்து கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் காலையில் உங்களில் யாரேனும் நேற்றிரவு கனவு கண்டீர்களா? என்று விசாரிக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தனர்.
நீங்கள் இன்னின்ன கனவுகளைக் கண்டீர்கள் என்று கனவைக் கண்டுபிடித்துக் கூறாமல் மக்களிடமே கேட்டுத் தெரிந்துள்ளனர். ஆனால் அபுல் ஹஸன் கண்ட கனவை அப்துல் காதிர் ஜீலானி தாமே அறிந்து கொண்டதாக இந்தக் கதை கூறுகிறது. மறைவான ஞானம் அப்துல் காதிருக்கு இருப்பதாகக் காட்டி அவரை அல்லாஹ்வுக்குச் சமமமாக அல்லாஹ்வின் தூதருக்கும் மேலாக ஆக்குவது தான் இந்தக் கதையின் நோக்கம். இது போன்ற அபத்தங்கள் தாம் முஹ்யித்தீன் மவ்லிது.
அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் எனப் பெயரால் புராணங்களைத் தோற்கடிக்கும் அளவுக்குக் கற்பனை செய்து எழுதப்பட்டது தான் முஹ்யித்தீன் மவ்லிது. இதை நிரூபிக்கும் மற்றொரு சான்றைப் பார்ப்போம்.