அத்தியாயம் : 5
அல் மாயிதா - உணவுத் தட்டு
மொத்த வசனங்கள் : 120
அல் மாயிதா - உணவுத் தட்டு
மொத்த வசனங்கள் : 120
ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112இ 113இ 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112இ 113இ 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
21. "என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!'' (என்றும் மூஸா கூறினார்)
22. "மூஸாவே! அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்'' என்று அவர்கள் கூறினர்.
23. "அவர்களை எதிர்த்து (அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள்! நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்!'' என்று அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்ற, (இறைவனை) அஞ்சுகிற இருவர் கூறினர்.
24. "மூஸாவே! அவர்கள் அங்கே இருக்கும் வரை அதில் நாங்கள் ஒரு போதும் நுழைய மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.
25. "என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் தவிர (யாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும், குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக!'' என்று (மூஸா) கூறினார்.
26. "இவ்வூர் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. (நாடற்று) பூமியில் அவர்கள் திரிவார்கள். எனவே குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!'' என்று (இறைவன்) கூறினான்.
27. ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
28, 29. "என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.)26
30. (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நட்டமடைந்தவனாக ஆகி விட்டான்.
31. தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.
32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.
33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.43
34. அவர்களில், நீங்கள் சிறை பிடிப்பதற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
35. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!141 அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
36. பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போல் இன்னொரு மடங்கும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின்1 வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
37. அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.
38. திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.43
39. அநீதி இழைத்த பின் மன்னிப்புக் கேட்டு (தம்மை) திருத்திக் கொண்டவரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
40. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.