திங்கள், 10 மார்ச், 2025

முடிவுக்கு வந்த 15 ஆண்டுகால கோரிக்கை: கவுருகரை வாய்க்கால் புதிய பாலம் திறப்பு

 Trichy New Bridge opening Ministers KN Nehru Anbil Mahesh Tamil News

திருச்சி மாநகராட்சி மண்டலம் -3 வார்டு எண் 39,40 பகுதியை இணைக்கும் கவுருகரை வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தை அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஸ் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் -3 வார்டு எண் 39,40 பகுதியை இணைக்கும் கவுருகரை வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு  திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கண்ட வாா்டுகளின் குடியிருப்புவாசிகள், கடந்த 15 ஆண்டுகளாக இரண்டு வாா்டுகளையும் இணைக்கும் நோக்கத்துடன், இரண்டு வாா்டுகளுக்கும் நடுவே செல்லும் உய்யக்கொண்டான் பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலான கவுறு வாய்க்காலில் புதிய பாலம் ஒன்றைக் கட்டித் தர வேண்டும் என திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஷிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனை அடுத்து தமது தொகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, நியூ டவுன் முத்துநகர் பகுதியை இணைக்கும் புதிய பாலத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற நிதி பங்களிப்புடன் மாநகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்டது.
இப்பாலமானது மூலதன மானிய நிதி 2023- 2024 ன் கீழ் மதிப்பீடு ரூ.131.00 லட்சத்தில், வார்டு எண் 40 மற்றும் வார்டு எண் 39 பாலாஜி நகரை இணைக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல் பள்ளிக்கு செல்ல எளிதான முறையில்  சுமார் 4 கிமீ தூரத்திற்கு சுற்றி பயணம் செய்வது குறைக்கப்பட்டு, விரைவில் பள்ளி செல்ல ஏதுவான வகையில் இந்த கவுறு வாய்க்காலில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலக நேரத்தில் நெடுஞ்சாலையில் பள்ளி வாகனங்கள் திரும்புவதால்   அவ்வப்போது விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவுறு வாய்க்கால் புதிய பாலம் மூலம் வார்டு எண் 39 மற்றும் வார்டு எண் 40ல் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் 4 ஆயிரம் பள்ளி செல்லும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதனால் திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது எனலாம்.
இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், 
மாநகராட்சி ஆணையர் சரவணன்,  உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவ ராமன், மாமன்ற உறுப்பினர்கள் எல்.ரெக்ஸ், சிவக்குமார், குடியிருப்பு நலச்சங்கங்களின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்.  



source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-new-bridge-opening-ministers-kn-nehru-anbil-mahesh-tamil-news-8838757