ஞாயிறு, 23 மார்ச், 2025

தொகுதி மறுசீரமைப்பு: இந்தி மொழி பேசும் எதிர்க்கட்சிகள் நிலைப்பாடு என்ன?; இந்தியா கூட்டணி கட்சிகள் அமைதி!

 2

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதி நிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நேற்று (மார்ச் 22) நடந்தது. இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தெலங்கானா முதல்வர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து தொகுதி மறுவரை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கும் நிலையில், இந்தி மொழி பேசும் இந்தியா கூட்டணி கட்சிகள், மகாராஷ்டிரா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த கூட்டதை புறக்கணித்திருப்பது, தொகுதி மறுவரை விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவருகிறது.

"மக்கள்தொகை அடிப்படையில் கூடாது"

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு பிரதிநிதித் துவத்தை இழக்க நேரிடும் என என்.டி.ஏ. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திராவைத் தவிர தென் மாநிலங்கள் ஏற்கனவே, தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளன. 2026-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தென்மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் தொகுதிகளை இழந்துவிடுவோமோ? என்று அச்சப்படும் அதே வேளையில், வட மாநிலங்களில் உள்ள மற்ற கட்சிகளுக்கு சாதமாக அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தை கூட்டிய திமுக, வட மாநிலங்களிலிருந்து இந்தியா கூட்டணிக் கட்சிகளான சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா (யுபிடி) மற்றும் என்.சி.பி. போன்ற கட்சிகளை அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்த கட்சிகளில் பெரும்பாலானவை தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்காததே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இந்த கட்சிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.

தொகுதி மறுசீரமைப்பு - திரிணாமுல் காங். என்ன சொல்கிறது?

1977 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. இருந்தனர். வடக்கு மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பில் பயனடைய உள்ளன. உதாரணமாக, 15 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்றாலும் கூட மேற்கு வங்காளத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் 42-ல் இருந்து 66-ஆக உயரும். 20 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்றால் மேற்கு வங்கத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 50-ஆக உயரும். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

தொகுதி மறுசீரமைப்பு - சமாஜ்வாதி கட்சி என்ன சொல்கிறது?

இந்த விவகாரம் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை. "எங்கள் கவனம் 2027 சட்டமன்றத் தேர்தலில் உள்ளது" என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். ஆனால், தொகுதி மறுவரையறையில் உத்தரப் பிரதேசத்திற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

தொகுதி மறுசீரமைப்பு - உ.பி., உத்தரகாண்ட்டிற்கு பயன்?

10 லட்சம் என்ற மக்கள்தொகை கணக்கின்படி தொகுதி மறுவரையில், உ.பி, உத்தரகாண்ட் உட்பட தற்போது 85 தொகுதிகளை கொண்ட நிலையில், 250 இடங்களைப் பெறும். பீகார் மற்றும் ஜார்க்கண்டில் 54-லிருந்து 169-ஆக தொகுதிகள் அதிகரிக்கும். இது 3 மடங்கு அதிகரிப்பு. இதேபோல,ராஜஸ்தானில் தொகுதிகள் 25-லிருந்து 82-ஆக அதிகரிக்கும். தமிழ்நாட்டின் தொகுதிகளும் அதிகரிக்கும். ஆனால் 39-லிருந்து 76-ஆக மட்டுமே. இது 2 மடங்கிற்கும் குறைவு. கேரளாவில் 20-லிருந்து 36-ஆக உயரும். புதிய நாடாளுமன்றத்தில் 888 இடங்கள் மட்டுமே உள்ளன.

20 லட்சம் என்ற மக்கள்தொகை கணக்கின்படி தொகுதி மறுவரையில், நாடாளுமன்றத்திற்கு தற்போதுள்ள 543 இடங்களுடன் ஒப்பிடும்போது 707 தொகுதிகளாக உயரும். இதனால், தென்மாநிலங்கள் கடுமையான விளைவை சந்திக்கும்.தமிழ்நாட்டின் தொகுதிகள் 39 என்றே இருக்கும். ஆனால், கேரளா 2 தொகுதிகளை இழந்து 18-ஆகும். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் கூடுதலாக 126 இடங்களைப் பெறும். அதேபோல் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் 85 இடங்களைப் பெறும். 

தொகுதிக்கு சராசரியாக 15 லட்சம் மக்கள் தொகை இருந்தாலும், இது நாடாளுமன்ற தொகுதிகளை 942-ஆக உயர்த்தும். வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்களுக்கு பாதகமாகவே இருக்கும். இது தமிழ்நாட்டிற்கு 52 இடங்களையும் கேரளாவிற்கு 24 இடங்களையும் வழங்கும். ஆனால் உ.பி, உத்தரகண்ட் சேர்த்து 168 தொகுதிகளையும் பீகார், ஜார்க்கண்டிற்கு 114 இடங்களையும் பெறும்.

தொகுதி மறுசீரமைப்பு - காங்கிரஸ் கட்சி என்ன சொல்கிறது?

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள 3 மாநிலங்களில், 2 தென்னிந்தியாவில் உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என நம்புகிறது. காங்கிரஸ் தனது 99 மக்களவைத் தொகுதிகளில், 4 தென் மாநிலங்களில் 40 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தியா கூட்டணி மட்டுமல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான தெலுங்கு தேசம் கட்சியும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைதியாக உள்ளது. 



source https://tamil.indianexpress.com/india/delimitation-meet-hindi-belt-opp-parties-tmc-bjp-ally-tdp-silent-in-tamil-8882194

Related Posts: