18 3 25
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தில் ஓபிசி மக்கள் தொகை 56.36 சதவிகிதம் இருப்பதாக தெரிவித்து அவர்களுக்கான 42 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக நேற்று(மார்ச்.17) தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
இந்த நிலையில் தெலங்கான அரசின் இந்த முயற்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. அம்மாநிலத்தில் அறிவியல் பூர்வமான சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட ஓ.பி.சி. சமூகத்தின் உண்மையான எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்காக 42% இடஒதுக்கீடுக்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது உண்மையில் சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான படியாகும், இதன் மூலம் மாநிலத்தில் 50% இடஒதுக்கீடு என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பு தரவுகள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் கொள்கைகள் வகுக்கப்படும். இதற்காக தெலுங்கானா அரசு ஒரு தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகங்கள் தங்கள் உரிமைகளைப் பெற சாதி கணக்கெடுப்பால் மட்டுமே முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதற்கு தெலுங்கானா வழி காட்டியுள்ளது, இதுதான் முழு நாட்டிற்கும் தேவை. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும், நாங்கள் அதைச் செய்வோம்”
இவ்வாறு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/a-caste-wise-census-will-definitely-take-place-in-india-rahul-gandhi-mp.html