22 2 2026
/indian-express-tamil/media/media_files/2026/02/22/dmk-alliance-seat-sharing-updates-2026-02-22-15-48-36.jpg)
2026 தேர்தலில் தி.மு.க.வின் 'தியாக' வியூகம்: கூட்டணி கட்சிகளுக்கு என்ன சொல்கிறது தி.மு.க?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை இன்று தொடங்கியுள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் முன்வைத்துள்ள அரசியல் உற்றுநோக்கல்கள் மற்றும் தி.முக.வின் வியூகங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
தி.மு.க. இந்த முறை கடந்த தேர்தலை விடக் குறைவான தொகுதிகளிலேயே போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இது ஒருவகையில் கூட்டணிக் கட்சிகளுக்கான 'சங்கேத செய்தி' என்கிறார் தராசு ஷ்யாம். பொது நன்மைக்காக நாங்களே இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம் என்று தி.மு.க கூறுவதன் மூலம், கூட்டணிக் கட்சிகளும் தங்கள் பிடிவாதத்தைத் தளர்த்தி சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தி.மு.க மறைமுகமாக உருவாக்கியுள்ளது. ஏற்கனவே தே.மு.தி.க மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், மேலும் சில சிறிய கட்சிகள் வரக்கூடும் என தி.மு.க எதிர்பார்க்கிறது. அவர்களை அரவணைக்கவே இந்த இட ஒதுக்கீடு மாற்றம் செய்யப்படுகிறது.
கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்கும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க.வின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சிக்னலாகும். கடந்த முறை 25 சீட் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறது. ஆனால், புதிய கட்சிகளுக்கு இடம் தரவேண்டுமென்றால், அதிக தொகுதிகளை வைத்துள்ள காங்கிரஸின் பங்கிலிருந்துதான் கணிசமான இடங்களைக் குறைக்க முடியும் என்பதை தி.மு.க. இப்போதே தெளிவுபடுத்தியுள்ளது.
தி.மு.க எப்போதும் தனது பேச்சுவார்த்தையை ஐ.யு.எம்.எல் கட்சியுடனேயே தொடங்கும். இதற்கு அரசியல் ரீதியாக ஒரு முக்கியக் காரணம் உண்டு. தி.மு.க.வின் 'பழைய வாடிக்கையாளர்' எனப்படும் முஸ்லீம் லீக் கட்சிக்கு எவ்வளவு ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே மற்ற கட்சிகளுக்கான சாத்தியக்கூறுகள் தீர்மானிக்கப்படும். கடந்த முறை 3 இடங்களில் போட்டியிட்ட அவர்கள், இந்த முறை 5 இடங்களைக் கோரி உள்ளனர். இருப்பினும், ஓரிரு இடங்கள் குறைந்தாலும் அவர்கள் கொள்கை ரீதியாக திமுகவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது தி.மு.க.விற்குத் தெரியும். தி.மு.க.வின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் காலத்தை விட மிகத் தீவிரமான சாணக்கியத்தனம் கொண்டதாகத் தெரிகிறது என தராசு ஷ்யாம் குறிப்பிடுகிறார்.
எவ்வளவு இழுபறி இருந்தாலும், கொள்கை ரீதியான பிணைப்பு இருப்பதால் எந்தக் கட்சியும் கூட்டணியை விட்டு வெளியேறாது என்பதை திமுக தலைமை மிகச் சரியாகக் கணித்து காய்களை நகர்த்துகிறது. புதிய கட்சிகளை உள்ளே இழுப்பது, பழைய கூட்டணிக் கட்சிகளின் (காங்கிரஸ்) இடங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் தனது பலத்தை விட்டுக்கொடுக்காமல் கூட்டணியை வலுப்படுத்துவது - இதுவே 2026 தேர்தலுக்கான தி.மு.க.வின் 'மாஸ்டர் பிளான்' ஆக உள்ளது என்கிறார் தராசு ஷ்யாம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/what-is-dmks-master-plan-for-the-2026-elections-senior-journalist-tharasu-shyam-decodes-dmks-strategy-on-seat-sharing-11144811





