22/3/25
/indian-express-tamil/media/media_files/2025/03/22/CTiIElUxQ3J10xyXmDk5.jpg)
கோவையில் மத்திய அரசின் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் பெரும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தி.மு.க வினர் ஒட்டிய போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தி.மு.க - பா.ஜ.க கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் போஸ்டர்களை மாறிமாறி ஒட்டினர். இதனால் மோதல்கள் உருவாகி, போராட்டங்களும் நடந்தது. இதனிடையே நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிலரை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கோவையில் மீண்டும் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால், மோதல் சம்பவங்கள் உருவாகும் சூழல் உருவாகி வருகிறது. பா.ஜ.க வினர் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து மாநில முழுவதும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோவையில் மத்திய அரசின் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் பெரும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தி.மு.க வினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால், கோவையில் அரசியல் கட்சியினர் இடையே மீண்டும் போஸ்டர் மோதல் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
கோவை மாநகராட்சி தி.மு.க வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கோவை மாநகரப் பகுதியில், மத்திய அரசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அதில், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 30 லட்சம் சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு சிலிண்டர் விநியோகத்தின் போதும், நுகர்வோர்களிடம் இருந்து பில் தொகையை விட குறைந்தபட்சம் ரூ.30 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், ஒன்றிய அரசு ஒரு நாளைக்கு சுமார் ரூ.9 கோடி ஊழல் செய்வதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ.3,200 கோடி வரை இந்த ஊழல் நடைபெறுவதாக அவர் மதிப்பிட்டு உள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை (ED) உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாநகர முழுவதும் ஒட்டி உள்ள போஸ்டர்களால் மீண்டும் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி வருகிறது. எனவே கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் மோதல் உருவாகும் சூழலை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-gas-cylinder-scam-dmk-poster-against-central-govt-tamil-news-8879574