29 3 25
/indian-express-tamil/media/media_files/2025/03/29/AIOGiM1jqqpKp8cJCjlF.jpg)
தமிழ்நாட்டில் தி.மு.க தான் ஆளுங்கட்சியாக இருக்கும் என்றும், இரண்டாம் இடத்திற்கு தான் தற்போதைய போட்டி நிலவுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை, கொளத்தூரில் இன்றைய தினம் (மார்ச் 29) இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்களுக்கு அவர் பரிசு பொருட்கள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசும் போது, "அடுத்ததாக அ.தி.மு.க தான் ஆளுங்கட்சியாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிக் கொண்டிருந்தார். இன்றைய தினம் ஒரு நபருக்கு பதில் கூறுவதற்காக எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்திருக்கிறார். அதில், தாங்கள் தான் அடுத்த எதிர்க் கட்சி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அடுத்த ஆளுங்கட்சி என்று கூறிக் கொண்டிருந்த நபர், அடுத்த எதிர்க் கட்சி என்று சொல்லக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தமிழ்நாட்டின் இன்றைய நிலை. இரண்டாம் இடத்தை யார் அடைவது என்பது தான் தமிழ்நாட்டில் தற்போது போட்டியாக உள்ளது.
நம்மை பொறுத்தவரை தி.மு.க தான் எப்போது முதல் இடத்திற்கு வரும். தி.மு.க தான் ஆளுங்கட்சியாக இருக்கும். இதனை மமதை கொண்டு நான் கூறவில்லை. அகங்காரத்தினால் இதனை நான் கூறவில்லை. மக்களின் ஆதரவு மற்றும் அவர்களின் வரவேற்பை வைத்து தான் இவ்வாறு நான் கூறுகிறேன்.
இரவோடு இரவாக திட்டம் தீட்டி யாருக்கும் தெரியாமல் விடியற்காலை நேரத்தில் விமானத்தில் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு நான்கு கார்கள் மாறி அமித்ஷாவை சென்று சந்தித்திருக்கிறார். இது அனைத்து பத்திரிகைகளிலும் தெளிவாக வந்துள்ளது.
இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்தி பேசுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்தேன். இருமொழிக் கொள்கை குறித்து அழுத்தமாக அமித்ஷாவிடம் பேசியதாக செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், வக்ஃபு வாரிய பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளேன்" எனக் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-says-dmk-will-continue-as-ruling-party-in-tamilnadu-8904681