திங்கள், 17 மார்ச், 2025

தோல்வியில் முடிந்த குரல், டிவிஷன் வாக்கெடுப்பு!

 17 3 25

4

தமிழ்நாடு அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளி அன்று தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இன்று முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதற்கிடையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். “சட்டமன்றத்தில் பேச சபாநாயகர் அப்பாவு அதிக நேரம் அனுமதி வழங்குவதில்லை. அ.தி.மு.க.வினர் பேசுவதை நேரலையாக ஒளிபரப்புவதில்லை. பாரபட்சமாக நடந்து கொள்கிறார்” என சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கினார். இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு சட்டசபையை விட்டு வெளியே சென்றார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் வெற்றி அடைய 118 வாக்குகள் தேவை. அ.தி.மு.க.-வின் தீர்மானத்திற்க்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தால் "போங்க, போங்க" என சபாநாயகர் அப்பாவு கிண்டல் செய்கிறார். ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அ.தி.மு.க. சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படுவதில்லை, பேரவையின் மரபையும் கண்ணியத்தையும் சபாநாயகர் காக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. டிவிஷன் முறையிலான வாக்கெடுப்பை சட்டப்பேரவை செயலாளர் முன்னின்று நடத்தினார். எண்ணிக் கணிக்கும் முறையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 63 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.

ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த சபாநாயகர் அப்பாவு கனிவானவர்; அதே நேரம் கண்டிப்பானவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின், யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம்; நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/no-confidence-motion-speaker-appavu-leaves-the-assembly-8860706

Related Posts: