"தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்." என்று கனிமொழி எம்.பி கூறினார்.
22 3 25 மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 'நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு' எனப் பெயரிடப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி கனிமொழி, "இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒத்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தி ஓரணியில் அனைவரும் திரண்டுள்ளனர்.
தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறைகளை செய்து தென் மாநிலங்களின் எம்.பி தொகுதிகளைக் குறைக்க வேண்டாம் என்றே வலியுறுத்துகிறோம். அது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தானது. அதற்காகத்தான் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு.
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ.க, எடுத்து வருகிறது. மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம்.
எனவே, தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு தெளிவை ஏற்படுத்தவில்லை. குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவோம். தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படை தன்மையுடன் மத்திய அரசு, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/delimitation-joint-action-committee-meeting-kanimozhi-dmk-mp-speech-tamil-news-8880251