செவ்வாய், 25 மார்ச், 2025

குற்றவுணர்ச்சியே இல்லாமல் இஃப்தார் விழாவில்

 

25 3 25

mks eps

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு முஸ்லீம் கூட பாதிக்கப்பட மாட்டார், யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமியை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை சாடினார்.

மேலும்,  “எடப்பாடி பழனிசாமி இப்போது , எந்தக் கூச்சமும் இல்லாமல் இசுலாமியர் விழாவில் கலந்துக்கொள்கிறார். ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு அந்த குற்றவுணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இப்தார் விழாவில் கலந்துகொள்கிறார்கள்” என்று மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். 

 

சென்னையில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை (24.03.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திங்கள் கிழமை (24.3.2025) சென்னை, திருவான்மியூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேறுப் பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின்,  “தலைவர் கலைஞருக்குள் சிந்தனை மாற்றத்தை உருவாக்கியதில் ‘தாருல் இஸ்லாம்’இதழுக்கும், தாவூத் ஷாவுக்கும் பெரிய பங்கு இருக்கிறது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பேரறிஞர் அண்ணாவையும் தலைவர் கலைஞரையும் இணைக்க பாலமாக இருந்ததே, இஸ்லாமிய சமுதாயம்தான்! திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவில்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள்”  என்று மு.க. ஸ்டலின் பேசினார்.

 “1967-இல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, அதற்கு தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். “முஸ்லீம் சமுதாயத்துக்கு நீங்கள் செய்த உதவிக்கெல்லாம் என்னுடைய நன்றி" என்று காயிதேமில்லத் அவர்கள் கடைசி நேரத்தில் அவர் மறைவதற்கு முன்னால் தலைவர் கலைஞர் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார். காயிதேமில்லத் அவர்கள் நன்றி சொன்னது, அதுவரை செய்த நன்மைகளுக்காக; அதைவிட அதிகமான நன்மைகளைத் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தபோதெல்லாம் கலைஞர் செய்தார். தலைவர் கலைஞர் அவர்களுடைய செய்த சாதனைகளை பட்டியலிடவேண்டும் என்றால், நேரமில்லை. அதனால், சுருக்கமாக சொல்கிறேன்.” மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டுப் பேசினார்.

தலைவர் கலைஞரைப் பொறுத்தவரைக்கும் - ‘இஸ்லாமியர்கள் வேறு; தான் வேறு’ என்று எப்போதும் நினைத்ததில்லை. ‘எனக்கு நன்றி சொல்லி உங்களிடமிருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’ என்றுதான் அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவரின் வழித்தடத்தில்தான், நம்முடைய இன்றைய திராவிட மாடல் ஆட்சியும் செயல்பட்டு வருகிறது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

மேலும், “சிறுபான்மையினர்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை கடந்த 4 ஆண்டு ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அண்மையில்கூட, தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

இஸ்லாமிய மக்களுக்கான நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பான சில சாதனைகளைப் பட்டியலிடவேண்டும் என்றால், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஹஜ் பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து 11 ஆயிரத்து 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்காக 24 கோடியே 56 இலட்சம் ரூபாயை மானியமாக அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரத்து 625 பயனாளிகளுக்கு 207 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மையின மக்கள் பயன் பெற, பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி தரப்பட்டிருக்கிறது. சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க 76 ஆயிரத்து 663 மாணவியருக்கு 4 கோடியே 82 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு, சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. எனவே, மாநில அரசு, இந்த ஆண்டு, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறது. வக்பு வாரியம் மூலம் வழங்க 12 கோடியே 17 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு இலட்சத்து ஆயிரத்து 159 மாணவிகள் பயன் பெறுவார்கள்.

தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைக்கும் பணிகளுக்கு இதுவரை பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 தர்காக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளி வாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்களை, புனரமைக்கும் பணிகளுக்கு இதுவரை 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 308 வக்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் நிதி உதவியாக 15 கோடியே 47 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

”குற்றவுணர்ச்சியே இல்லாமல் இஃப்தார் விழாவில் பங்கேற்கும் பழனிசாமி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
உலமாக்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் நலவாரியம் மூலமாக, 5,818 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிர்வாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி இசுலாமிய பெருமக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலை மேம்படுத்தும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் இசுலாமியர்களைக் காக்கும் காவல் அரணாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும், நம்முடைய தமிழ்நாட்டில் மத ரீதியான வன்முறைகள் ஏற்படாமல், காத்து வரும் அரசாக நம்முடைய தி.மு.க அரசு எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால், இந்த குடியுரிமை திருச்சத் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த கட்சிதான் அ.தி.மு.க.! குடியுரிமைத் திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால், தி.மு.க.வும் - கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.

ஆனால், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பழனிசாமி என்ன கேட்டார்?  “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு முஸ்லீம் கூட பாதிக்கப்பட மாட்டார், யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார். இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இப்போது அவர், எந்தக் கூச்சமும் இல்லாமல் இசுலாமியர் விழாவில் கலந்துக்கொள்கிறார். ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு அந்த குற்றவுணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இப்தார் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், இது தனிமனித உரிமையை பறிப்பது என்று மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது தி.மு.க.தான்! இப்போது கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க. இதை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அதையும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது தி.மு.க.-வும் அதன் கூட்டணிக்கட்சிகளும். ஒருவேளை அது சட்டமானால், அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக போராடுவோம்! உங்களுக்குத் துணையாக எப்போதும் இருப்போம்!

இப்படி இஸ்லாமியர் உரிமையை காப்பாற்றுகின்றவர்களாக செயல்படுபவர்கள் நாங்கள். இஸ்லாமியர் உரிமைக்கு போராடுகின்றவர்கள், வாதாடுகின்றவர்கள்தான் இப்படியான விழாக்களில் கலந்துக்கொள்ள தகுதி படைத்தவர்கள். அந்த தகுதியோடு உள்ளார்ந்த அன்போடு சகோதர உணர்வோடு நாங்கள் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம், பங்கெடுக்கிறோம். சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை அரசின் மூலமாக தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அதே நேரத்தில், இசுலாமியரின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி அவர்களுக்கு காவல் அரணாக விளங்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எந்நாளும் இருக்கும்! இசுலாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துகளை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.: என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-attack-on-edappadi-k-palaniswami-iftar-feast-islam-ramzan-fasting-8886992

Related Posts: