புதன், 19 மார்ச், 2025

பொது இடங்களில் வைக்கப்பட்ட தி.மு.க கொடிக் கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் - துரைமுருகன் உத்தரவு

 duraimurugan dmkflag

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்ட தி.மு.க கொடிக்கம்பங்களை அடுத்த 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தி.மு.க.,வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; 

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.

எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் வைத்துள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கட்சி கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/duraimurugan-orders-dmk-cadres-remove-flagpoles-at-public-places-according-to-chennai-high-court-madurai-bench-verdict-8868761

Related Posts: