மறுவரையறை முடிவை ஒத்திவைப்பது முதல் டம் மனு அளிப்பது வரை: கூட்டுக் குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? 22 3 25
/indian-express-tamil/media/media_files/2025/03/22/xafaVNKhLQVhab5x6RWX.jpg)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
"இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்தக் கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.
மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும். மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது.
தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்று பேசினார்.
மாநில உரிமைகளை பா.ஜ.க. பறிக்கிறது- ஸ்டாலின்
மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்குகிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு:
ஒன்றிய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்; தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை . பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அத்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும் என்று கேட்டுக் கொன்டார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு:
மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை; கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து எதிர்த்து போராடுவோம் டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள்
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை:
"மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது; இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது 2026 மக்கள் தொகையின்படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை - சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்; ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதாளம் போராடும்" என்றார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு:
கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அமைகிறது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் பங்கேற்கவில்லை.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:
“நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும்; மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு" என்றார். தென் இந்தியாவின் தொகுதிகள் 30 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதம் என குறையும் அபாயம் உள்ளது. 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றார்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை:
மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நோக்கம் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று கூட்டத்தில் கனிமொழி தெரிவித்தார்.
அடுத்ததாக ஐதராபாத்தில் கூட்டம் - ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 மணி நேரம் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-hosts-opposition-meet-on-delimitation-8878870