15 3 25
சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க 43 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணிக்க அதிபர் டிரம்ப் விரைவில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளார்.
43 நாடுகளும் மூன்று தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் 11 நாடுகள் "சிவப்பு" பட்டியலாக பெயரிடப்பட்டுள்ளது. அவை ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகியவை என்று அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
2-வது குழு “ஆரஞ்ச்” பட்டியில் காணப்படுகிறது, இந்த நாடுகளில் உள்ள குடிமக்கள் விசா பெறுவதற்கு கட்டாய நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் பெலாரஸ், எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர், பாகிஸ்தான், ரஷ்யா, சியரா லியோன், தெற்குசூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அடங்கும். இது சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்தோர் விசாக்களையும் பாதிக்கும், சில விதிவிலக்குகளுடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
3-வது குழு மஞ்சள் பட்டியலில் காணப்படுகிறது. இதில், பெலாரஸ், பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 26 நாடுகளின் அரசாங்கங்களுக்கு "60 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் அமெரிக்க விசா வழங்கலை பகுதியளவு இடைநிறுத்துவதற்கு பரிசீலிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இந்த நடவடிக்கை, பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதான டிரம்பின் முதல் ஆட்சி கால தடைகளை நினைவூட்டுகின்றன. வெளியுறவுத்துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதால், பட்டியலின் இறுதிப்பதிப்பு இன்னும் விவாதத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்டறிய அமெரிக்காவில் அனுமதிக்க விரும்பும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் தீவிர பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டும் என்று ஜனவரி 20 அன்று டிரம்ப் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.
source https://tamil.indianexpress.com/international/trump-admin-weighs-expanding-travel-ban-countries-in-tamil-8856091