முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாக முகவர்கள் - மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், பூ விற்பனை செய்யும் மகளிர் உட்பட 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. Image Source: X/@UdhayStalin
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.1,000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாக முகவர்கள் - மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், பூ விற்பனை செய்யும் மகளிர் உட்பட 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “முதலமைச்சர் மூன்று விஷயங்கள் சமீபத்தில் தெரிவித்தார். நாங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம். தொகுதி மறுசீரமைப்பை ஏற்கமாட்டோம் மற்றும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டோம். புறவழிகளில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. புதியக் கல்விக் கொள்கை மூலம், இந்தியை நேரடியாக திணிக்கும் முயற்சியும் நடக்கிறது.
புதியக் கல்விக் கொள்கையையும், இந்தி திணிப்பையும் எந்த முறையில் தமிழ்நாடு ஏற்காது. மத்திய அரசை கண்டு தி.மு.க அஞ்சாது. தற்போதைய அரசு தி.மு.க அரசு, அ.தி.மு.க அரசு கிடையாது. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அல்ல.” என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.1,000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dy-cm-udhayanidhi-stalin-magalir-urimaithogai-thittam-rs-1000-arrangements-next-2-months-8772209