வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ஈரான் மீது தாக்குதலா? 10 நாட்களுக்குள் ஒப்பந்தம் இல்லையேல் கடும் நடவடிக்கை: ட்ரம்ப் அதிரடி

 

ஈரான் மீது தாக்குதலா? 10 நாட்களுக்குள் ஒப்பந்தம் இல்லையேல் கடும் நடவடிக்கை: ட்ரம்ப் அதிரடி

US-Iran Tensions

ஈரான் மீது தாக்குதலா? 10 நாட்களில் முடிவெடுப்பேன்: அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

19 02 2026

புதிதாக அமைக்கப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) முதல் கூட்டத்தை ட்ரம்ப் வாஷிங்டனில் நடத்தினார். இதில் காசா போர் நிறுத்தம் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா-ஈரான் இடையே சாத்தியமான ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது அடுத்த 10 நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறினார்.

நாம் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோமா அல்லது நிலைமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோமா என்பது விரைவில் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார். அமைதி வாரியக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். "அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவாது என்பது மிகத் தெளிவான விஷயம் என்றார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இதுகுறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ட்ரம்ப் விதித்துள்ள சிவப்புக் கோடுகளை ஈரானியர்கள் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை என்று கூறினார். ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது என்பது பல விஷயங்கள் மூலம் தெளிவாகிறது. ராஜதந்திர வழியிலோ அல்லது வேறு வழியிலோ ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே அதிபரின் நோக்கம் என்று வான்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (பிப் 17), ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) தற்காலிகமாக மூடிய ஈரான், அங்கு நேரடி ஏவுகணைப் பயிற்சிகளை (Live fire drills) மேற்கொண்டது. ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவம் தனது படைகளைக் குவித்து வருவதால், ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் அணு உலைகள், ஏவுகணை தளங்களை இலக்கு வைக்க அமெரிக்கா தயாராக இருந்தாலும், அதிபர் ட்ரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்றும், யாரும் அந்த நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். கடந்த 2018-ல் ஈரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/international/us-iran-tensions-live-updates-trump-says-he-would-make-decision-on-potential-tehran-strike-in-probably-10-days-11134898