திங்கள், 10 மார்ச், 2025

தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதில்

 நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு இன்று(மார்ச்.10) நாடாளுமன்றத்தில் தொடங்கியது. இதில் புதிய தேசிய கல்விக்கொள்கை நிராகரித்தால் நிதி மறுக்கப்படுமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி எழுப்பியதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இது குறித்து தன்னை திமுக எம்.பி.-கள் சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள். நாகரீகமற்றவர்கள் என்று விமர்சனம் செய்தார்.

அவரின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலளித்தபோது,  “மத்திய அமைச்சர் பேசியது வருத்தம் அளிக்கிறது. நான் மத்திய கல்வியமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டுக்கு நிதியை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். புதிய தேசிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வியமைச்சருக்கு எழுதிய கடிதம் எழுதியுள்ளார்.

அதில் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பிரச்சனைகளை கூறி ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எங்களுடைய நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  தமிழ்நாடு மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தொடர்ந்து பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு நாடளுமன்ற உறுப்பினர்கள் பற்றி நான் பேசியது புண்படுத்தி இருந்தால் அதைத்  திரும்ப பெற்றுக்கொள்கின்றேன் என்று கூறினார். மேலும் அவர், இந்த திட்டம் குறித்து கனிமொழி எம்பி மற்றும்  தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் என்னை சந்தித்து,  ஒரு கட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு சில விஷயங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்று மீண்டும் பதிவு செய்தார். இது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.



source https://news7tamil.live/tamil-nadu-mps-will-not-accept-the-new-national-education-policy-kanimozhi-mps-response-to-union-minister-dharmendra-pradhan.html