/indian-express-tamil/media/media_files/sMX9P083OnzpQCdQ2Uiz.jpg)
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்யும் 10 மசோதாக்கள் உள்ளிட்ட சில மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் , அந்த மசோதாக்களூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதே சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அவற்றை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு சட்டப்படி அளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும், அந்த 10 பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களுக்கும், உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏப்ரல் 8-ம் தேதி வழங்கப்பட்டாலும், அதை முழுமையாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏப்ரல் 11-ம் தேதி நள்ளிரவு தீர்ப்பு முழுமையாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, இணைதளத்தில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ்நாடு அரசிதழில் தமிழக அரசின் அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் வெளியிடப்பட்டன. அவை 2 அரசிதழ்களாக 11-ம் தேதியிட்டு வெளியிடப்பட்டு இருந்தன.
பொதுவாக அரசாணை என்றாலும், அரசிதழில் வெளியிடுவது என்றாலும் அவை ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன்தான் வெளியாகும். அதற்கான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். ஆனால், சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கிடைத்துவிட்டதால், ஏப்ரல் 12-ம் தேதி நேற்று வெளியான அதற்கான அரசிதழ்களை, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார்.
அரசிதழில் வெளியிடப்பட்டதால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் என்ற திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இனிமேல், அந்த பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் அரசு கூறிய திருத்தங்கள் சேர்கிறது. அதன்படி, வேந்தர் என்ற இடத்தில் தமிழக அரசு என்ற வாசகம் இடம் பெற்றுவிடுகிறது. எனவே, வேந்தராக இருந்த ஆளுநரின் அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசு வசம் சென்றுவிட்டன.
இதனால் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவதோடு, துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு இல்லாமல் போய்விட்டது. இந்த நியமனம் தொடர்பான வரம்புகளை இனி அரசே வகுத்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/consultative-meeting-of-university-vice-chancellors-will-be-held-on-april-16-under-the-chairmanship-of-cm-mk-stalin-8959045