தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் பெறப்பட்ட தகவலின்படி, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு பெற்ற கடைசி தவணை நிதி 2023 - 24 நிதியாண்டில் ரூ.1,871 கோடி ஆகும். அதன்பிறகு, தேசிய கல்விக் கொள்கை 2020, விதிகளை தமிழ்நாடு ஏற்க மறுத்ததால், மத்திய அரசு தனது பங்கான ரூ. 2,152 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல், தி இந்து இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திட்ட ஒப்புதல் வாரியம், 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ. 3,586 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்கியது.
2018-ஆம் ஆண்டில், சர்வ சிக்ஷா அபியான் திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 2018 - 19 ஆம் ஆண்டில், மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ. 1,474 கோடி நிதியை வழங்கியது. 2023 - 24 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 1,871 கோடி நிதியை தமிழ்நாடு பெற்றது. இது ஐந்து ஆண்டுகளில் 26 சதவீதம் அதிகரித்தது.
இந்த நிதியை கொண்டு கல்வித் துறையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் ஊதியம் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்கள் செயல்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை சீரமைத்தல், பள்ளிகளின் உள்கட்டமைப்பை பராமரித்தல் மற்றும் போக்குவரத்து எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுத்ததாலும், பி.எம் ஸ்ரீ அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தாலும் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
பி.எம் ஸ்ரீ போன்ற தனித் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உடன்பாடு இல்லாததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைப்பது "நியாயமானது அல்ல" என்று பாராளுமன்ற நிலைக் குழு கவனித்துள்ளது. எனவே, நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
"குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் பொறுப்பு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இருக்கிறது. இது அடிப்படை உரிமை. ஆனால், கல்வி நிதியை நிறுத்துவதன் மூலம் அதன் உரிமையை அரசு மீறுகிறது. நிதி தாமதிக்கப்படுவது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும்" என்று பொது பள்ளி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நன்றி - தி இந்து
source https://tamil.indianexpress.com/education-jobs/centre-disbursed-rs-10443-crore-to-tn-under-samagra-shiksha-in-six-years-8956344