வியாழன், 17 ஏப்ரல், 2025

சின்னதுரை மீதான தாக்குதல் சாதி ரீதியானது இல்லை: நெல்லை போலீஸ் கமிஷனர் விளக்கம்

 17 4 2025 

naanguneri

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை (20 வயது). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்த போது, வேறு சமுதாய மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் படித்த அதே பள்ளியைச் சேர்ந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர். 

இச்சபவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் சின்னதுரை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சின்னதுரையை நேரில் சந்தித்த காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம், சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

சின்னத்துரைக்கு நடந்தது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்னத்துரை நேற்று (ஏப்ரல் 16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரைப் பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார். தொடர்ந்து, சுமார் 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு, மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னதுரையிடம் விசாரித்த போது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் பணம் கேட்டதாகவும், அவரிடம் பணம் இல்லாததால் கட்டையால் தாக்கிவிட்டு, செல்போனைப் பறித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். 

மேற்படி, விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாகவும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைக் கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாகக் கூறியுள்ளார். பின்னர், சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் நேற்றிரவு அளித்த பேட்டியில்,"சின்னதுரைக்கு பெரிய அளவில் காயம் இல்லை, சிறிய காயம் மட்டுமே. இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். நான்கு நபர்கள் அவரிடம் செல்போனை வழிப்பறி செய்துள்ளார்கள். பழைய நண்பர் என்று கூறி தொலைபேசி மூலம் அழைத்து இந்த வழிப்பறி நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும், தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறி தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர்களை பிடிப்பதற்கு இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்கப்பட்டதற்கு சாதிப்பிரச்சனை காரணம் அல்ல, வழிப்பறி செய்யும் நோக்கிலேயே செயலி மூலம் வரவழைத்து தாக்குதல் நடத்தப்பட்டது" என்றார். தற்போது சின்னதுரையின் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/nellai-police-statement-about-assault-on-chinnadurai-8970502

Related Posts: