12 4 2025
மதுரை தனியார் கல்லூரி விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடம் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று (12.04.2025) “கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்” என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
உரையின் போது, ஆளுநர் மாணவர்களிடம் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிடும்படி கேட்டதோடு, “நான் சொல்கிறேன், நீங்களும் திரும்ப சொல்லுங்கள்” என கூறி மாணவர்களிடையே அந்த கோஷத்தை எழுப்பினார். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரி வளாகத்தில் ஆளுநரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மற்றும் பல அரசியல், சமூக இயக்கங்கள் சார்பில் கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ. என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் மனோ தங்கராஜூவின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-mano-thangaraj-reply-to-governor-rn-ravi-for-jai-sriram-8955994