திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது; தீவிரவாதத்தை சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி இந்தியன் என்ற உணர்வுடன் எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்து ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார் உருவாக்கியுள்ளது என்பதே கசப்பான உண்மை. இந்திய ஒற்றுமைக்கு மத நல்லிணக்கமே தேவை என்பதை சங்பரிவார் இந்தச் சூழலில் புரிந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கூறுவதில் எங்களுக்கு அரசியல் லாபம் இல்லை. இது அதிருப்தியின் வெளிப்பாடு மட்டுமே. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் இருக்காது என பா.ஜ.க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு செல்லலாம் என பா.ஜ.க அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதை நம்பி மக்கள் அங்கு சென்றபோது, இப்படி ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகி முன்னுதாரணமாக விளங்கினார். இந்தச் சூழலில்தான் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறக் கூடாது. தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு நாடு தான் காரணம் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக நாம் போர் தொடுக்கக்கூடாது. வேறு நாட்டுக்கு எதிராக நமது பலத்தை நிரூபிக்கக் கூடாது. இது உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றால், அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும், போர் தீர்வு அல்ல. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பயனளிக்கவில்லை, ஆனால் அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என்பதை சமீபத்தில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்
உணர்த்தியுள்ளது.
தீவிரவாதிகள் சாதி, மதம் என எதையும் பார்ப்பதில்லை. காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதலாக தெரியவில்லை. இது இந்திய அரசுக்கு எதிரான தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் விளக்கம் தேவையில்லை. வக்ஃப் சட்டத்தை கண்டித்து வி.சி.க சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம்.
கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசு இடையே உள்ள முரண்பாடுகள் கூர்மையாகிவிட்டன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின், பல்கலைகழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு அவர் அழைப்பு விடுத்தது, தமிழக அரசுக்கு நெருக்கடியாக இருப்பதாக அனைவராலும் உணரப்பட்டது. துணைவேந்தர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியை கவர்னர் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார். இன்று அந்த மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணிக்கிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் மே 31 ஆம் தேதி வி.சி.க சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம் என்றார்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-thirumavalavan-slams-tamilnadu-governor-rn-ravi-on-vc-meeting-at-trichy-9001512